திரைத்துறையில் பயணிக்கும் ஹீரோக்கள், தனது ரசிகர் மன்றங்களை, மக்கள் இயக்கமாக மாற்றி பின்பு அதனை அரசியல் கட்சியாக மாற்றி வருவது வழக்கமாக இருக்கிறது. அந்த வகையில் விஜய் தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். மேலும் தமிழக வெற்றி கழகம் என்று கட்சிக்கு பெயரிடப்பட்டுள்ளதாக நேற்று அறிவித்தார். மேலும் இன்னும் ஒரு படத்தில் நடித்து முடித்துவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தமிழ் சினிமாவில், இதுவரையில் நடிகர்களாக இருந்து அரசியல் கட்சி ஆரம்பித்தவர்களின் பட்டியல் பின்வருமாறு. எம்.ஜி.ஆர், 1972ஆம் ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். சிவாஜி 1989ஆம் ஆண்டு, தமிழக முன்னேற்ற முன்னணி, இயக்குநர் மற்றும் நடிகரான பாக்கியராஜ் 1989ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் மக்கள் முன்னேற்ற கழகம், டி.ராஜேந்தர் 1991ஆம் ஆண்டு தாயக மறுமலர்ச்சி கழகம், விஜயகாந்த் 2005ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகம், நடிகர் சரத்குமார் 2007ஆம் ஆண்டு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, நடிகர் கார்த்தி 2009ஆம் ஆண்டு நாடாளும் மக்கள் கட்சி, நடிகர் கருணாஸ் 2016ஆம் ஆண்டு முக்குலத்தோர் புலிப்படை, கமல்ஹாசன் 2018ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம், மன்சூர் அலிகான் 2021ஆம் ஆண்டு இந்திய ஜனநாய புலிகள் ஆகியவை அதன்பின் ஆரம்பிக்கப்பட்ட கட்சிகளாகும்.
இந்த லிஸ்டில் அனைவரும் முதல்வர் கனவை நோக்கி ஆரம்பித்தனர். அதில் எம்.ஜி.ஆர் மட்டும் முதல்வர் கனவை அடைந்துள்ளார். அதன் பிறகு வந்த விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராக முன்னேறினார். இதைத் தவிர்த்து பலரும் எம்.எல்.ஏவாக மட்டுமே உயர்ந்தனர். சிலர் அந்த வாய்ப்பும் இல்லாமல் இருக்கின்றனர். இந்த சூழலில் கட்சி ஆரம்பித்துள்ள விஜய், எந்தளவிற்கு முன்னேறுவார் என்பது அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.