அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று காலை 94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை 'கிங் ரிச்சர்ட்' படத்திற்காக வில் ஸ்மித் பெற்றுள்ளார். இந்த படம் வில்லியம்ஸ் சகோதரிகளின் தந்தையின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். இதில் வீனஸ்-செரினா வில்லியம்ஸ் சகோதரிகளின் தந்தையாக நடித்த வில் ஸ்மித் சிறந்த நடிகருக்கான விருதைத் தட்டி சென்றுள்ளார்.
இவ்விழாவில் வில் ஸ்மித் மனைவி ஜடா பிங்கெட் ஸ்மித்தின் முடியற்ற தலையை "ஜி.ஐ. ஜேன்" படத்தில் டெமி மூரின் தோற்றத்துடன் ஒப்பிட்டு தொகுப்பாளர் கிரிஸ் ராக் கிண்டலடித்தார். இதைக் கேட்ட வில் ஸ்மித் உடனே இருக்கையிலிருந்து எழுந்து ஆஸ்கர் மேடை ஏறி தொகுப்பாளர் கிரஸ் ராக்கை கன்னத்தில் ஓங்கி அறைந்தார். அதன் பின் அமைதியாகத் தனது இருக்கையில் அமர்ந்த வில் ஸ்மித் "என் மனைவி குறித்து இனி உன் வாயிலிருந்து வார்த்தை வரக்கூடாது" எனக் காட்டமாகத் தெரிவித்தார். இது மேடையிலிருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நடிகர் வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட் அலோபீசியா என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதன் பிறகு தனது விருதைப் பெற்ற வில் ஸ்மித் கண்ணீருடன் மன்னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், "நான் ஆஸ்கர் அகாடமியிடம் மற்றும் சக நாமினிகளிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இது ஒரு மகிழ்ச்சியான தருணம். விருது வென்றதற்காக நான் அழவில்லை. நாம் கலையை நேசிக்கிறோம். ரிச்சர்ட் வில்லியம்ஸ் குறித்து அவர்கள் சொன்னது போல நான் பைத்தியக்கார தந்தை போல இருக்கிறேன். காதல் உங்களை பைத்தியக்காரத்தனமான செயலை செய்ய வைக்கும்" எனக் கண்ணீருடன் கூறினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.