நடிகர் அர்ஜுன் தெலுங்கில் தனது மகள் ஐஸ்வர்யாவை கதாநாயகியாக வைத்து ஒரு படம் இயக்கத் திட்டமிட்டிருந்தார். அந்தப் படத்தில் தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகரான விஷ்வக்சென் கதாநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவரை நீக்கியுள்ளதாக சில தினங்களுக்கு முன் தெரிவித்திருந்தார்.
மேலும் " இப்படத்திற்காக விஷ்வக் சென் கேட்ட சம்பளத்தை நாங்கள் தரச் சம்மதித்தோம். இருப்பினும், பல மூத்த நடிகர்கள் திட்டமிடப்பட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை. விஷ்வக்சென்னை பலமுறை தொடர்புகொண்டும் பதில் வரவில்லை. என் வாழ்நாளில் நான் அவருக்கு போன் செய்தது போல் வேறு யாருக்கும் அத்தனை முறை தொடர்பு கொண்டது இல்லை. ஒரு நடிகன் தனது தொழிலில் மிகவும் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும். அந்த அர்ப்பணிப்பு விஷ்வக் சென்னிடம் இல்லை. 100 கோடி வந்தாலும் இனி அவருடன் பணிபுரியமாட்டேன்" என்று பல குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். மேலும் தயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் கொடுத்திருந்தார்.
இந்நிலையில் விஷ்வக் சென், அர்ஜுனின் குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்துள்ளார். அதில், “திரைப்படத்துறையில் உள்ளவர்கள் யாரேனும் என்னைத் தொழில் ரீதியாகச் சரியில்லாதவர் எனக் கூறினால் , நான் உடனடியாக வெளியேறிவிடுவேன். அனுபவம் வாய்ந்த தயாரிப்பாளர்கள் பலருடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். ஆனால் அவர்களுடன் பணியாற்றுவதில் எனக்கு எந்தப் பிரச்சனையும் இருந்தது இல்லை. நான் கடின உழைப்பை நம்புகிறேன். வெற்றி தோல்வி என்பது மக்கள் கைகளில்தான் இருக்கிறது.
உண்மையில், ஒரு படத்தைப் படமாக்க எனக்கு 40 நாட்களும், விளம்பரப்படுத்த 20 நாட்களும் ஆகும். படத்தின் கதையைப் படப்பிடிப்பு தொடங்குவதற்கு சில நாள் முன்புதான் கேட்டேன். கதை பற்றி நன்றாக விவாதித்து அதன்பிறகு படப்பிடிப்பை நடத்தலாம் என்றேன். அவரின் இதுபோன்ற செயல்களால்தான் படப்பிடிப்புக்குச் செல்லவில்லை. அர்ஜுனுக்கு மரியாதை கொடுத்தேன். மேலும் நானாக படத்திலிருந்து விலகவில்லை" என விளக்கம் அளித்திருந்தார்.