கர்நாடகாவில் மே 10 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆட்சியிலிருக்கும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளதால் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியும் 224 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து கர்நாடக தேர்தல் களத்தில் குதித்துள்ளது.
கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள நிலையில், இழந்த ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸும் இருக்கும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளும் முனைப்பில் பாஜகவும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் சிவமொக்கா பகுதியில் காங்கிரஸ் கட்சி நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், "ராகுல் காந்தியின் ரசிகனாக இங்கு வந்துள்ளேன். அவர் சமீபத்தில் பாரத் ஜோடோ யாத்ரா என்ற நடைபயணம் மூலம் நாடு முழுவதும் நடந்தார். அந்த நடைபயணம் என்னை மிகவும் ஈர்த்துவிட்டது" என்றார்.
கன்னட திரையுலகில் உச்சத்தில் இருந்த ராஜ்குமாரின் மகன் சிவராஜ்குமார். இவரது மனைவி கீதா சிவராஜ்குமார் அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். கீதா சிவராஜ்குமாரின் சகோதரர் குமார் பங்காரப்பா பாஜகவில் உள்ளார். அக்கட்சி சார்பில் வருகிற தேர்தலில் போட்டியிடுகிறார். மேலும், இவர்களின் தந்தையான மது பங்காரப்பா ஜேடிஎஸ் (மதச்சார்பற்ற ஜனதா தளம்) கட்சியில் இருந்து காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டவர். இவர் கர்நாடகாவின் முதலமைச்சராகப் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.