கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த புனித் ராஜ்குமார், கடந்த மாதம் 29ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு ரசிகர்கள், பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்தனர். இதையடுத்து புனித் ராஜ்குமார் உடல் யஷ்வந்தபூர் அருகே காண்டீவரா ஸ்டூடியோ அலுவலகத்தில் அவரது தந்தை சமாதிக்குப் பக்கத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த புனித் ராஜ்குமார் மறைவுக்கு சமூக வலைதளத்தின் மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், "எனக்கு சிகிச்சை முடிந்து நன்கு குனமடைந்து வருகிறேன். நான் மருத்துவமனையில் இருக்கும்பொழுது புனித் ராஜ்குமார் அகால மரணமடைந்திருக்கிறார். இந்த செய்தியை இரண்டு நாள் கழித்துதான் சொன்னார்கள். அதைக் கேட்டு மிகவும் வேதனைப்பட்டேன். என் கண்முன்னே வளர்ந்த குழந்தை. திறமையானவர், அன்பும் பண்பும் கொண்டவர். பெயரும் புகழும் உச்சத்தில் இருக்கும் இந்தச் சிறிய வயதில் நம்மைவிட்டு மறைந்திருக்கிறார். அவருடைய இழப்பு கன்னட சினிமா துறையால் ஈடுசெய்ய முடியாது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகளே இல்லை. புனித் ராஜ்குமார் ஆத்மா சாந்தியடையட்டும்" எனக் கூறியுள்ளார்.