இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் 90களில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ‘ஜெய் பீம்’ படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும், தமிழ்நாடு முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் ‘ஜெய் பீம்’ படத்தைப் பாராட்டினர்.
ராஜாக்கண்ணு என்பவரைக் காவல்துறையினர் திருட்டு வழக்கில் கைது செய்து, குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி அடித்து துன்புறுத்துகையில் அவர் சிறையிலேயே மரணமடைவார். அதை எதிர்த்து சட்டப்போராட்டம் நடத்தும் அவர் மனைவி, தன்னுடைய கணவரின் இறப்பிற்குக் காரணமான காவல் அதிகாரிகளுக்குத் தண்டனை பெற்றுக்கொடுப்பார். அந்நிகழ்வின் உண்மைத் தன்மை மாறாமல் படத்தை இயக்கியதற்காக இயக்குநர் த.செ. ஞானவேலை பலரும் பாராட்டினர். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாள், தான் மிகவும் வறுமையில் இருப்பதாக தெரிவித்தார். இதனை அறிந்த நடிகர் ராகவா லாரன்ஸ், பார்வதி அம்மாளுக்கு தன்னுடைய சொந்த செலவில் வீடு கட்டித் தருவதாக உறுதியளித்திருந்தார். இதனிடையே, பார்வதி அம்மாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வீடு கட்டித் தருவதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ், பார்வதி அம்மாவுக்கு வீடு கட்டித் தருவதாகக் கூறிய நிதியை அவரது வாரிசுகளுக்குப் பகிர்ந்தளிப்பதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "சில நாட்களுக்கு முன் கீழநத்தம் கிராமத்துக்கே சென்று வீடு கட்டுவதற்கான நிலத்தைப் பார்வையிட்டு வந்தோம். விரைவில் வீடுகட்டும் பணியைத் தொடங்கும் முயற்சியில் இருந்த நிலையில், பார்வதி அம்மாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வீடு கட்டித்தர இருப்பதாக தொலைக்காட்சி செய்தி மூலம் அறிந்து மகிழ்ச்சியடைந்தேன். பார்வதி அம்மாவின் இன்றைய வறுமை நிலையை அறிந்து அவருக்கு வாழ்விடத்தைக் கட்டிக்கொடுக்க முன்வந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். பார்வதி அம்மாளுக்கு வீடு கட்டித் தருவதற்காக நான் ஒதுக்கிய 5 லட்சத்துடன் மேலும் 3 லட்சம் சேர்த்து, பார்வதி அம்மாள், அவருடைய மகள், மற்றும் அவருடைய இரண்டு மகன்கள் ஆகியோருக்கு தலா இரண்டு லட்சங்களை வழங்க முடிவு செய்துள்ளேன். பார்வதி அம்மாவுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் நல்லது நடப்பதற்கு காரணமாக இருந்த ‘ஜெய் பீம்’ படக்குழுவினருக்கும், ‘ஜெய் பீம்’ படத்தை தயாரித்த சூர்யா, ஜோதிகா, இயக்குநர் த.செ. ஞானவேல் அனைவரையும் இத்தருணத்தில் நன்றியோடு நினைவு கூர்வோம்" எனத் தெரிவித்துள்ளார்.