![ms bhaskar](http://image.nakkheeran.in/cdn/farfuture/ZBDMTwqFd6SSgLrLsm2ul6LRYyvA7PbigMpmB-0B8zA/1615375969/sites/default/files/inline-images/34_39.jpg)
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான எம்.எஸ்.பாஸ்கருடன் நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் கலந்துரையாடினோம். அந்தக் கலந்துரையாடலில் அவர் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். அதில், நடிகர் விஜயகாந்த் குறித்து பகிர்ந்து கொண்டவைகள் பின்வருமாறு...
" 'சட்டம் ஒரு இருட்டறை' படத்தில் இருந்து விஜயகாந்த் அண்ணனைத் தெரியும். அவரை அண்ணா என்றும் சொல்லலாம்... அம்மா என்றும் சொல்லலாம். ஒரு தாய்தான் தன்னுடைய மகன் வயிறார சாப்பிட வேண்டும் என்று விரும்புவார். விஜயகாந்த் அண்ணன் எல்லோரையும் தாய்ப் பாசத்துடன் பார்ப்பார். நாம் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது நம்மைப் பார்த்துக் கொண்டே இருப்பார். இலையில் சாப்பாடு தீர்ந்து விட்டதென்றால் உடனே பரிமாறச் சொல்லுவார். எல்லா வகையான சாப்பாடும் அண்ணனிடம் கிடைக்கும். அவருடைய கட்சி நிர்வாகிகள், ரசிகர்கள்தான் பரிமாறுவார்கள். அந்தக் கரண்டியே அவ்வளவு பெரியதாக இருக்கும். நிறைய மட்டன் அள்ளி வைத்தாலும், ஏன் கம்மியா வைக்கிறீங்க... நல்லா அள்ளி வைங்கன்னு சொல்லுவார். அது எல்லாத்தையும் சாப்பிட்டு முடிச்ச உடனே நமக்கு மயக்கம் வருகிற மாதிரி இருக்கும். பெரிய டம்ளர் நிறைய பாயசம் கொடுப்பார். என்னணா இது... போதும்னு சொன்னாலும் கேட்க மாட்டார். நல்லா சாப்பிடு என்பார். இவ்வளவும் சாப்பிட்டவுடன் பயங்கர தூக்கம் வரும். ஒருமுறை இதை அவர்கிட்ட சொன்னதும் இயக்குநரைக் கூப்பிட்டு, அவர் கொஞ்ச நேரம் தூங்கட்டும்... அதுவரை என்னோட காட்சிகளை எடுங்கன்னு சொல்லிட்டார். நான் போய் கொஞ்சநேரம் தூங்கிட்டு வந்தேன்.
நான் எந்த வண்டி வாங்கினாலும் முதல்ல அவர் வீட்டிற்குக் கொண்டு போவேன். அவரை வண்டியில உட்கார வச்சுட்டுத்தான் வண்டியை எடுப்பேன். எல்லாரும் சாப்பிடணும்... எல்லாரும் நல்லா இருக்கணும்னு நினைக்கக் கூடிய தங்கமான குணமுடைய மனிதர் விஜயகாந்த் அண்ணன்" எனக் கூறினார்.