பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 'டெல்லி சலோ' என்ற பெயரில் டெல்லியை நோக்கி, பேரணியாகச் செல்கின்றனர். அவர்களை தடுக்கும் வகையில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் மோதல் நீடித்துவருகிறது. விவசாயிகள் மீது தொடர்ந்து காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி வருகின்றனர். கடந்த 21ஆம் தேதி, பஞ்சாப் - ஹரியானாவின் எல்லையான காணுரியில், காவல்துறையினரால் வீசப்பட்ட கண்ணீர் புகைக் குண்டு வெடித்து, சுப்கரன் சிங் (24) என்னும் இளம் விவசாயி உயிரிழந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்த அரசியல் வட்டாரங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.
இந்த நிலையில் பஞ்சாப் விவசாயிகளுக்கு ஆதரவாக நடிகர் கிஷோர் குரல் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைத்தளப் பதிவில் , “நியாயமான விலை கேட்பது இவ்வளவு அநியாயமா? அதிகபட்ச ஆதார விலை உறுதியளித்து ஆட்சிக்கு வந்த பாசாங்குத்தனமான அரசியல்வாதிகள் ஒருபுறம் இருக்கட்டும், ஆனால் அந்த பக்தர்களும், விவசாயிகள் விளைவித்த உணவை உண்டு உயிரோடு இருக்கும் மன்னனின் ஊடகங்களும் அதே விவசாயிகளை துரோகிகள் என்று முத்திரை குத்துகின்றன, இவர்களை எப்படி இந்தியர்கள் என்று சொல்ல முடியும்? சாலைகள் தோண்டப்பட்டது, சுவர்கள் கட்டப்பட்டது, தோட்டாக்கள் வீசப்பட்டது, கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டது, அனைத்தையும் செய்தது மோடியின் அரசு.
தினம் தினம் வார்த்தை மாறும், ஆனால், தேச விரோத முத்திரை விவசாயிகளின் தலையில் உள்ளது. விவசாயிகளுக்கு எதிராக பொய்யான வதந்திகளைப் பரப்பும் மோடிக்கும், அவரது அரசுக்கும், அவரது பக்தர்களுக்கும் உணவு கொடுப்பதை விவசாயிகள் முதலில் நிறுத்த வேண்டும். ஆனால், இந்த நன்றிகெட்ட மக்களுக்கு மட்டுமல்ல, அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசிய காவல்துறையினருக்கும் தொடர்ந்து உணவு அளிக்கும் நமது கருணையுள்ள விவசாயிகளைப் பாருங்கள். நமது விவசாயிகள் தேச விரோதிகள் என்ற முத்திரைக்கு தகுதியானவர்களா?” எனக் குறிப்பிட்டுள்ளார்.