அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் நிர்வாகியான ஏ.வி. ராஜு அண்மையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கூவத்தூர் விவகாரத்தில் நடிகை த்ரிஷாவை தொடர்புபடுத்திப் பேசியிருந்தார். மேலும் கருணாஸ் குறித்தும் அவதூறாகப் பேசினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையான நிலையில், திரைத்துறையிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக கண்டனம் தெரிவித்த த்ரிஷா, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்தார். இதையடுத்து முன்னாள் அதிமுக நிர்வாகி ஏ.வி. ராஜு வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டிருந்தார். இதனிடையே த்ரிஷாவிற்கு ஆதரவாக சேரன், ஃபெப்சி அமைப்பு, மன்சூர் அலிகான், விஷால், தென்னிந்திய நடிகர் சங்கம் உள்ளிட்டோர் குரல் கொடுத்தனர். இதையடுத்து ஏ.வி ராஜுக்கு த்ரிஷா தரப்பில் பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் பெஞ்சமின் தெரிவித்துள்ளார். சேலத்தில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, “நமது இந்தியாவை தாய்நாடு என்று தான் சொல்றோம். நம்ம கூட பிறந்தவங்க எல்லாமே தாய்மார்கள். நம்ம குடும்பத்துல இருக்கிற பெண்களை பத்தி யாராவது பேசுனா நம்ம சும்மா விட்ருவோமா. சினிமாவில் த்ரிஷா மிகவும் புகழ் பெற்ற நடிகை. திருப்பாச்சி திரைப்படத்தில் அவுங்க கூட நான் நடிச்சிருக்கேன். அவ்ளோ மரியாதையா நடந்துப்பாங்க. நான் அப்போ புது நடிகர். எங்கிட்ட வந்து என்னை பத்தியும் என் குடும்பத்தை பத்தியும் தினமும் நலம் விசாரிப்பாங்க. அவுங்கள பத்தி கேவலமா பேசினது வன்மையா கண்டிக்கத்தக்கது.
யாராக இருந்தாலும் சரி, ஒரு பெண்ணை கேவலப்படுத்துவது ரொம்ப தப்பு. அப்படி பேசக் கூடாது. அப்படி பேச அவுங்களுக்கு உரிமை கிடையாது. உங்க வீட்டுல உங்க பொண்ண பத்தி யாராவது தரக்குறைவா பேசினா நீங்க விட்ருவீங்களா. தயவுசெஞ்சி சொல்லுறேன், இனிமே சினிமா நடிகை மட்டுமல்ல, எந்த பொண்ணை பத்தியும் யாரும் தரக்குறைவா பேசாதீங்க. அதுக்கு யாருக்குமே அருகதை கிடையாது. தமிழக அரசு இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவுங்களுக்கு உண்டான நீதியை கொடுக்க வேண்டும். அவுங்க பேருக்கும் புகழுக்கும் கலங்கம் வராமல் பாதுகாக்க வேண்டும்” என்றார்.