நடிகர் ஆரி அர்ஜுனன் திரைப்படங்களை தவிர்த்து ‘மாறுவோம் மாற்றுவோம்’ என்ற அறக்கட்டளையையும் நடத்தி வருகிறார். இதன் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறார். அந்த வகையில் தன்னுடைய தாயின் நினைவாக உழைக்கும் பெண்களுக்கு தங்க நாணயம் கொடுத்து மகிழ்ந்துள்ளார். 10 பெண்களைத் தேடிச் சென்று அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக வீடியோ வெளியிட்டுல்ள அவர், “ஒவ்வொரு மகளிர் தினம் வரும் போதெல்லாம் பெண்களை கொண்டாடுறோம். வாழ்த்து சொல்றோம். அதைத் தாண்டி என்ன செய்றோம் என்ற கேள்வி ஒவ்வொரு மார்ச் மாசம் வரும்போதும் எனக்குள்ளே இருந்திட்டே இருக்கும். அந்த வகையில் இந்த மார்ச் மாசம், இந்த சமூகத்திற்கு வேலை செய்யக்கூடிய பெண்களை நம்ம ஏதோ ஒரு வகையில் மரியாதை செய்யணும் என்ற நோக்கத்தில் மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளையின் சார்பாக ஒரு சின்ன முயற்சி.
எங்க அம்மாவின் நினைவாக ஒவ்வொரு வருஷமும் தொடர திட்டமிட்டிருக்கிறோம். ஒவ்வொரு நாளும் சர்ப்ரைஸை நோக்கி தான் வாழ்க்கையே நடந்துக்கிட்டு இருக்கு. அந்த வகையில் பெண்களை கௌரவித்து சர்ப்ரைஸாக ஒரு கிஃப்ட் கொடுக்க வேண்டும் என்ற முயற்சி. உழைக்கும் பெண்களையும் சமூக மாற்றத்திற்காக உழைக்கக் கூடிய பெண்களின் வாழ்வை மாற்றும் முயற்சியாக எடுக்க இருக்கோம்” என்றார். பின்பு தூய்மைப் பணியாளர்கள் 3 பேர், பெட்ரோல் பங்கில் பணியாற்றும் 3 பேர், சாலையில் கூழ் கடை வைத்திருக்கும் 2 பேர் மற்றும் அவர் நடித்து வரும் ‘ரிலீஸ்’ படத்தின் படப்பிடிப்பில் பாத்திரம் கழுவும் 2 பேர் என மொத்தம் 10 பெண்களை நேரில் சந்தித்து தங்க நாணயம் பரிசாக வழங்கினார் ஆரி அர்ஜுனன்.