இந்திய அரசு சார்பில் திரைத்துறை மற்றும் திரைத்துறைக் கலைஞர்களைக் கௌரவிக்கும் வகையில் தேசிய விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. கரோனா காரணமாக 2019 ஆம் ஆண்டிலிருந்து இரண்டு ஆண்டுகள் தள்ளி இந்த விருது அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2021 ஆம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் இன்று மாலை 5 மணிக்கு டெல்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் இருந்து அறிவிக்கப்படவுள்ளன.
அதனால் ரசிகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் பெரும் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த 69வது தேசியத் திரைப்பட விழாவில், தமிழில் சூர்யா - த.செ. ஞானவேல் கூட்டணியில் வெளியான ஜெய் பீம், பா. ரஞ்சித் - ஆர்யா கூட்டணியில் வெளியான 'சார்பட்டா பரம்பரை', மாரி செல்வராஜ் - தனுஷ் கூட்டணியில் வெளியான 'கர்ணன்', மாதவன் இயக்கி நடித்த 'ராக்கெட்ரி - நம்பி விளைவு' ஆகிய படங்கள் விருது வாங்கும் என சமூக வலைத்தளங்களில் பேசப்படுகிறது.
இது போக மற்ற மொழிகளில் ஆர்.ஆர்.ஆர் (தெலுங்கு), புஷ்பா (தெலுங்கு), கங்குபாய் கத்தியவாடி (இந்தி), தி கேஷ்மிர் ஃபைல்ஸ் (இந்தி), மின்னல் முரளி (மலையாளம்), ஹோம் (மலையாளம்), நாயட்டு (மலையாளம்) ஆகிய படங்கள் முக்கிய படமாக பார்க்கப்படுகிறது.
இதில் ராக்கெட்ரி - நம்பி விளைவு, ஆர்.ஆர்.ஆர், கங்குபாய் கத்தியவாடி, தி கேஷ்மிர் ஃபைல்ஸ் உள்ளிட்ட படங்கள் 2022ல் வெளியாகியிருந்தாலும் 2021 ஆம் ஆண்டு சென்சார் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் இந்த போட்டியில் கலந்து கொள்கிறது.
கடந்த வருடம் 68வது தேசிய விருது விழாவில் சூரரைப் போற்று (5), சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் (3), மண்டேலா (2) உள்ளிட்ட படங்கள் என மொத்தம் 10 தமிழ்ப் படங்கள் வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.