Skip to main content

சிறைக்கு சென்று சந்தித்த 4 நடிகைகள் - சுகேஷ் சந்திரசேகர் வழக்கில் புது தகவல்

Published on 16/09/2022 | Edited on 16/09/2022

 

4 actress meet suresh chandrasekhar in jail

 

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவர் அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட பலரை ஏமாற்றி பண மோசடி செய்துள்ளார். அதில் ஒன்றாக, சிறையில் இருக்கும் தொழிலதிபரை, சிறையிலிருந்து விடுவிக்க உதவுவதாகக் கூறி தொழிலதிபரின் மனைவியிடம் 200 கோடி ரூபாய் மிரட்டி மோசடி செய்துள்ளார். இது தொடர்பாக சுகேஷ் சந்திரசேகர், அவரது மனைவி லீனா மரியா பால், உதவியாளர் பிங்கி இரானி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

 

இதனிடையே சுகேஷ் சந்திரசேகர், மிரட்டி பறித்த பணத்தில் நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ், நோரா பதேஹி ஆகியோருக்குக் கோடிக்கணக்கில் பரிசுப்பொருள்களை வாங்கிக்கொடுத்துள்ளார். அவர் செய்த குற்றங்கள் தொடர்பாக அமலாக்க பிரிவு அதிகாரிகளும், டெல்லி குற்றப்பிரிவு போலீசாரும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்திருந்தனர். ஏற்கனவே அமலாக்கத்துறை விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில் சமீபத்தில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில் ஜாக்குலின் பெர்னாண்டஸை குற்றவாளியாக சேர்த்துள்ளனர். டெல்லி போலீசார் இதுகுறித்த விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

 

முதலில் நடிகை நோராவை அழைத்து 7 மணி நேரம் விசாரணை நடத்தி தொடர்ந்து ஜாக்குலின் பெர்னாண்டஸிடம் 8 மணி நேரம் விசாரணை நடத்தினர். மேலும் ஜாக்குலினுக்கு சுகேஷ் அறிமுகம் செய்துவைத்த பிங்கி இரானியிடமும் விசாரணை நடத்தினர். முதலில் இரண்டு பேரிடமும் தனித்தனியாக வாக்குமூலம் வாங்கி, பின்பு இரண்டு பேரையும் ஒன்றாகவைத்து விசாரித்தனர். அந்த விசாரணையில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஏற்கெனவே கொடுத்துள்ள வாக்குமூலத்தில், சற்று மாறுபட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் சுகேஷ் சந்திரசேகர் குற்றப் பின்னணி உடையவர் என்றும், அவர் திருமணமானவர் என்று தெரிந்தும் அவருடன் தொடர்பு வைத்துக்கொண்டதோடு, அவருடன் பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக ஜாக்குலின் பெர்னாண்டஸை குற்றம்சாட்டியுள்ளனர். 

 

இந்த வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை, டெல்லி போலீசாரின் விசாரணைக்கு உதவியாக இருந்துள்ளது. அந்த அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையில் நிகிதா தம்போலி, சாகத் கன்னா, சோபியா சிங் மற்றும் அருஷா பாட்டீல் ஆகிய மேலும் 4 நடிகைகள் இடம்பெற்று இருக்கிறார்கள். இந்த நான்கு நடிகைகளும் திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களில் நடித்துள்ளனர். இவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் சிறைக்குச் சென்று சுகேஷ் சந்திரசேகரைச் சந்தித்து பணம் மற்றும் பரிசுப்பொருள்களைப் பெற்று வந்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை பிங்கி இரானி செய்துள்ளார்.

 

இந்த நான்கு நடிகைகளிடமும் பிங்கி இரானி, சுகேஷ் சந்திரசேகரை ஒவ்வொரு விதமாக கூறியிருக்கிறார். நிகிதா தம்போலியிடம் 'தென்னிந்திய சினிமா தயாரிப்பாளர், அவரது பெயர் சேகர்' என்றும், சோபியா சிங்கிடம் சினிமா தயாரிப்பாளர் சேகர் ரெட்டி என்றும், அருஷாவிடம் வேறு பெயரையும் தெரிவித்துள்ளார். மேலும் பிங்கி இரானி, இது போன்று நடிகைகளை சுகேஷுக்கு அறிமுகம் செய்து கோடிக்கணக்கில் சம்பாதித்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

 

நடிகை நிகிதா முதலில் கடந்த 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சுகேஷைச் சந்தித்துப் பேசியுள்ளார். இதற்காக பிங்கி இரானிக்கு சுகேஷ் 10 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். அதில் ரூ.1.5 லட்சத்தை நிகிதாவுக்கு பிங்கி இரானி கொடுத்துள்ளார். இரண்டாவது சந்திப்புக்குப் பிறகு 2 லட்சம் மதிப்புள்ள பரிசுப்பொருள்களை கூரியர் மூலம் நிகிதாவுக்கு சுகேஷ் அனுப்பியுள்ளார். மேலும் நடிகை சோபியா சிங்கும் இரண்டு முறை சிறைக்குச் சென்று சுகேஷ் சந்திரசேகரை சந்தித்துள்ளார். அவர்கள் சிறைக்குச் சென்று வந்தவுடன் அவர்களின் வங்கிக் கணக்கில் பெருந்தொகை டெபாசிட் செய்துள்ளதாக அமலாக்கப் பிரிவின் குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்