இந்தியாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய வழக்கு குறித்து தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி விளக்குகிறார்.
கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர். மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவரை சஞ்சய் ராய் என்பவர் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கு இது. உயிரிழந்த பயிற்சி மருத்துவர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று எம்.பி.பி.எஸ்., பி.ஜி. உள்ளிட்ட பட்டப்படிப்புகளை முடித்துத்தான் அந்த மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்தார். இந்த சூழலில்தான் அந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. மாலை 4 மணிக்கு நடந்த இந்த சம்பவத்தை 7 மணிக்கெல்லாம் கண்டறிந்து இரவு 10 மணிக்கு தாமதமாக பெற்றோரிடம் மருத்துவமனை தரப்பிலிருந்து சொல்லியிருக்கிறார்கள். முதலில் உயிரிழந்த அந்த பயிற்சி மருத்துவருக்கு உடல்நிலை சரியில்லை என கூறியிருக்கின்றனர். இதையடுத்து அந்த பெண் தற்கொலை செய்துகொண்டதாக பெற்றோர்களிடம் தெரிவித்திருக்கின்றனர். ஆனால் அந்த பெண்ணின் உடலில் 16 இடங்களில் உள்காயங்களும் உடலுக்கு வெளியில் காயங்களும் இருந்துள்ளது. அதன் பிறகு சம்பவத்தை அறிந்து விசாரித்த போலீசார் சஞ்சய் ராய் என்பவரை கைது செய்துள்ளனர்
சஞ்சய் ராயை விசாரித்ததில் அவன் நகங்களில் உயிரிழந்த அந்த பெண்ணின் தோல்கள் இருந்துள்ளது. மேலும் சம்பவ இடத்தில் அவசரமாக விட்டுச்சென்ற சஞ்சய் ராயின் காலணிகளில் உறைந்த இரத்த கரைகள் இருந்துள்ளது. இந்த கொடூரச் செயலை செய்துவிட்டு வீட்டிற்குச் சென்ற அவன் தனது சட்டையிலிருந்த இரத்த கரைகளைத் துவைத்துவிட்டு போதையில் படுத்திருக்கிறான். சஞ்சய் ராயின் பின்னணியை விசாரித்தபோது அவனுக்குப் பெண் கொடுத்த மாமியார்கூட அவனைப் பற்றி தவறாகத்தான் சொல்லி இருக்கின்றனர். அடுத்தடுத்த திருமணங்களையும் அவன் செய்திருக்கின்றான். இப்படிப்பட்ட ஒருவனுக்கு மருத்துவமனையில் என்ன வேலை என்று விசாரித்ததில், அவன் ஒரு தன்னார்வலராக இருந்துள்ளான். மிகவும் பழமையான 1600 படுக்கை வசதிகள் கொண்ட அந்த மருத்துவமனையில் வேலை செய்ய ஆள் பற்றாக்குறை இருந்துள்ளது. ஆளும் கட்சி பெயரைச் சொல்லித்தான் வேலை செய்வதற்காக சஞ்சய் ராய் மருத்துவமனையில் நுழைந்துள்ளான். ஆபாசப் படங்களை அதிகம் தன் மொபைலில் பதிவிறக்கம் செய்து வைத்திருந்த சஞ்சய் ராய் அவ்வப்போது ரெட் லைட் ஏரியாவுக்கு சென்றிருக்கிறான். மருத்துவமனையில் கொரோனா தொற்று காலத்திலும் இதுபோன்ற குற்றச்செயல்களில் சஞ்சய் ராய் ஈடுபட்டுள்ளார். அந்த நேரத்தில் அது பெரிதாக வெளியில் வராமல் இருந்துள்ளதாக இப்போது சொல்கின்றனர்.
அந்த மருத்துவமனையின் தலைமை பொறுப்பில் இருக்கக்கூடிய சஞ்சீவ் கோஷ மருத்துவர், சம்பவம் நடந்ததைத் தெரிந்துகொண்டு உடனே அந்த பெண்ணின் உடலை மாலை 6 மணி முதல் 7 மணிக்குள் உடற்கூறாய்வு செய்துள்ளார். பெற்றோர் வந்த பிறகு 3 மணி நேரம் காத்திருக்கச் சொல்லி அந்த பெண்ணின் அப்பாவை மட்டும் உடலைப் பார்க்க அனுமதித்துள்ளனர். அவர் உள்ளே சென்று மொபைலில் ஃபோட்டோ எடுத்து வந்து தனது மனையிடம் காட்டியுள்ளார். அதன் பிறகு உடனே அந்த பெண்ணின் உடலை எரித்துள்ளனர். இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் தானாகவே முன் வந்து எடுத்துள்ளது. நீதிபதிகள் சந்திர சூட், பர்திவாலா தலைமையில் வழக்கு விசாரணை நடந்துள்ளது.
நீதிபதி பர்திவாலா, என்னுடைய 30 ஆண்டுகால அனுபவத்தில் வழக்குப்பதிவு செய்த பிறகுதான் உடற்கூறாய்வு செய்து பார்த்திருக்கிறேன் என்று கூறி காவல்துறையினரைக் கண்டித்து சம்பந்தப்பட்ட காவலர்களை பணியிடைநீக்கம் செய்ய உத்தரவிடுகிறார். இந்த வழக்கு விசாரணையில் தங்கள் மகளின் உடலை எங்களிடம் அனுமதி வாங்காமல் எரித்துள்ளதாகக் கூறியிருக்கின்றனர். இதற்கிடையில் உடற்கூறாய்வு செய்த மருத்துவர் சஞ்சீவ் கோஷ் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தற்போது அங்கிருந்து நீக்கம் செய்யப்பட்டு வேலை செய்யாமல் வீட்டில் உள்ளார். சஞ்சீவ் கோஷ் உயிரிழந்தவர்களின் உடலை விற்பனை செய்துவருவதாக கூட பேசப்பட்டு வருகிறது. அதைத் தொடர்ந்து முதலமைச்சர் மம்தா பானர்ஜி உயிரிழந்த பெண் பயிற்சி மருத்துவரின் குடும்பத்திற்கு நிதியுதவி செய்யப் போனபோது நிதி வேண்டாம் நீதிதான் வேண்டுமென அதை வாங்க மறுத்துள்ளனர். அதைத்தொடர்ந்து பலரும் இந்த வழக்குக்கு நீதி வேண்டி போராட்டம் செய்துள்ளனர். அதே போல தன் மகளுக்காக நீதி வேண்டி உயிரிழந்த பயிற்சி மருத்துவரின் பெற்றோர் இன்றளவும் சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.