அடிக் அகமது கொலை வழக்கு குறித்து தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி விவரிக்கிறார்.
சமாஜ்வாதி கட்சியிலிருந்து விலகிய அடிக் அகமது, அப்னா தல் என்கிற கட்சியில் இணைந்தான். அந்தக் கட்சியின் தலைமையைத் தானே எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் அவனுடைய எண்ணம். அங்கும் அவன் வெற்றி பெற்றான். மீண்டும் சமாஜ்வாதி கட்சியில் இணைந்து லோக்சபா தேர்தலில் போட்டியிட்டான். காலியான அவனுடைய சட்டமன்றத் தொகுதியில் அஷ்ரப் என்கிற அவனுடைய தம்பியைப் போட்டியிடச் செய்தான். லோக்சபா தேர்தலில் அடிக் வெற்றி பெற்றான்.
சட்டமன்ற இடைத்தேர்தலில் அவனுடைய தம்பியை எதிர்த்து ராஜ்பால் என்கிற இன்னொரு ரவுடி வென்றார். வெற்றி பெற்ற பிறகு தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று முடிவு செய்திருந்த ராஜ்பால், திருமணத்துக்கான ஏற்பாடுகளைச் செய்தார். அவரைக் கொல்ல வேண்டும் என அடிக் அகமது முடிவு செய்தான். கல்யாணமான ஒன்பதாவது நாள் ராஜ்பால் சுட்டுக் கொல்லப்பட்டார். மீண்டும் இடைத்தேர்தல். அதில் ராஜ்பாலின் மனைவி நின்றார். "திருமணத்துக்காக எனக்கு வைக்கப்பட்ட மெஹந்தி இன்னும் அப்படியே இருக்கிறது. ஆனால் இன்று என் கணவர் உயிருடன் இல்லை" என்று அவர் பிரச்சாரம் செய்தார்.
ஆனால் அந்தத் தேர்தலில் அஷ்ரப் வெற்றி பெற்றார். ஆட்சி மாறியது. மாயாவதி முதலமைச்சரானார். அவர் ராஜ்பாலின் மனைவிக்கே வாய்ப்பளித்தார். அடிக் அகமது அவரிடம் தோற்றுப்போனான். அகிலேஷ் யாதவுக்கு தன்னுடைய தந்தை இதுபோன்ற குற்றவாளிகளுக்கு வாய்ப்பளிப்பது பிடிக்கவில்லை. இதனால் தந்தைக்கும் மகனுக்கும் பிரச்சனை ஏற்பட்டது. ஆனாலும் அடிக் அகமதுவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அகிலேஷ் யாதவ் பொறுப்புக்கு வந்த பிறகு அடிக் அகமது விரும்பிய தொகுதி அவனுக்கு வழங்கப்படவில்லை. மீண்டும் தோற்றுப் போனான்.
ஜெயிலுக்குள் இருக்கும்போதும் அவனுடைய ஆட்டம் அதிகமாகவே இருந்தது. அவனை வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் விரும்பினார். மற்ற அனைத்து சிறைகளிலும் அவனைக் கண்டு அனைவரும் அஞ்சியதால் அவன் குஜராத் சிறைக்கு மாற்றப்பட்டான். கிட்டத்தட்ட 10 நீதியரசர்கள் அச்சத்தில் அவனுடைய வழக்கிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டனர். அதன் பிறகு வந்த ஒரு நீதிபதி அவனுக்கு பெயில் கொடுத்தார். வெளியே வந்து தேர்தலில் நின்று, பிரச்சாரத்தில் ஈடுபட்டு மீண்டும் அவன் தோற்றான்.
17 வருடங்களுக்குப் பிறகு அவன் சம்பந்தப்பட்ட ஒரு வழக்கில் தீர்ப்பு சொல்லப்பட இருந்த நாளில் தான், அவனும் அவனுடைய சகோதரனும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுபோன்ற குற்றவாளி ஒருவன் தொடர்ந்து எப்படி தேர்தலில் வெற்றி பெற முடிந்தது என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. தமிழ்நாட்டில் அரசியலுக்கு வர வேண்டும் என்று நினைப்பவர்கள் சினிமாவில் இருந்திருக்க வேண்டும் என்கிற நம்பிக்கை இருப்பதுபோல், வடநாட்டில் அரசியலுக்கு வர நினைப்பவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று நம்புகிறார்கள். கோடிக்கணக்கான ரூபாய்க்கு மேல் சட்ட விரோதமாக அடிக் அகமது சம்பாதித்து வைத்திருந்த பணம் அரசின் கஜானாவுக்கு சென்றது.