கடந்த நூற்றாண்டின் மிகக் கொடூரமான ஒரு அரக்கன் என்று குற்றங்கள் பல புரிந்தவர் குறித்து தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி நமக்கு விரிவாக விளக்குகிறார்.
பார்ப்பதற்கு கல்லூரி பேராசிரியர் போல் இருக்கும் அந்த மனிதன், கடந்த நூற்றாண்டின் மிகப்பெரிய கொடூரமான மனிதனாக வாழ்ந்தான். அவன் மீது பெண்கள் பலர் கடைசி வரை காதல் கொண்டனர். சிறைச்சாலைக்கு சென்றும் அவனைப் பார்த்து வந்தனர். அவன் எத்தனை கொலைகள் செய்திருப்பான் என்கிற கணக்கு அவனுக்கே தெரியாது. ஆனாலும் யார் கையிலும் சிக்காமல் தப்பிக்கும் கலையை அவன் அறிந்ததால், அவனுக்கு 'பாம்பு' என்கிற பெயரும் உண்டு. அவனுடைய பெயர் சோப்ராஜ். 70களில் நாடு முழுவதும் பலராலும் உச்சரிக்கப்பட்ட பெயர்.
நேபாளத்திலிருந்து அவன் தன்னுடைய 78வது வயதில் விடுவிக்கப்பட்ட போது, 40 வயதிற்கும் குறைவான ஒரு நேபாளப் பெண் அவனைத் திருமணம் செய்துகொண்டார். சோப்ராஜின் தந்தை அவனை சிறுவயதில் ஏற்றுக்கொள்ளவில்லை. தாயிடமும் தனக்கு சரியான அன்பு கிடைக்கவில்லை என்று அவன் நினைத்தான். சிறுவயதிலேயே சின்னச் சின்ன திருட்டுகளில் ஈடுபடுகிறான். அப்போதே பிரான்சில் ஒரு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டான். சிறைச்சாலை அதிகாரிகளிடம் தனக்கு வேண்டியவற்றை சாதித்துக்கொள்ளும் குணம் அவனுக்கு இருந்தது.
உளவியல், தத்துவம் சார்ந்த நூல்களை சிறையில் அதிகம் படித்தான். கள்ளக்கடத்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடுவோரிடமும் அவனுக்கு நெருக்கம் ஏற்பட்டது. ஹிப்பி கலாச்சாரம் என்பது அப்போது அதிகமாக இருந்தது. அவர்கள் பெரும்பாலும் ஆன்மீகத் தேடலுக்காக இந்தியாவை நோக்கி வருவார்கள். தவறான பழக்கங்களும் அவர்களுக்கு இருக்கும். தொடர்ந்து திருட்டு குற்றங்களில் ஈடுபட்டு வந்த அவனை பம்பாய் போலீசார் பிடித்தனர். அவன் அவர்களிடமிருந்து தப்பித்து ஒரு காரில் பாகிஸ்தானுக்கு சென்றான். அங்கு காபூல் போலீஸாரால் கைது செய்யப்பட்டாலும் உடல்நிலை சரியில்லை என்று நடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.
அங்கிருந்தும் தப்பித்து ஈரான் சென்றான். பின்பு மீண்டும் இந்தியாவுக்கு வந்து பிரமாண்டமான டெல்லி அசோகா ஹோட்டலில் தங்கினான். அங்குள்ள வைர நகைக்கடையை கொள்ளையடிக்க வேண்டும் என்று முடிவு செய்கிறான். அங்கு நைட் கிளப்பில் டான்ஸராக வேலை செய்யும் ஒரு பெண்ணிடம் நட்பு கொண்டு அதை சாதிக்க நினைத்தான். பல்வேறு ஆசை வார்த்தைகள் கூறி அதைச் செய்தும் முடித்தான். வெளிநாடு தப்பித்துச் செல்ல முயன்றவனைக் கைது செய்ய போலீஸ் விரைந்தபோது விமான நிலையத்திலும் தப்பித்தான். இதுபோன்ற கொள்ளை சம்பவங்களும் தப்பிக்கும் முயற்சிகளும் தொடர்ந்தன.
- தொடரும்...