"சில விஷயங்கள் நமது கைகளுக்கு அப்பாற்பட்டவை. அதில் வீணாக நேரத்தை செலவிடுவதற்கு பதில் உங்களுடைய முழு ஆற்றலையும் உங்கள் வரம்பிற்கு உட்பட்ட விஷயத்தில் செலுத்துங்கள்..." - சொன்னது யார்? 'கிரிக்கெட் உலகின் கடவுள்' என்று இன்றும் ரசிகர்களால் வழிபடப்படும் சச்சின். பதினாறு வயதில் இந்திய அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு தன்னுடைய ஓய்வு அறிவிப்புக்கு முன்பு வரை தொடர்ந்து அசத்தலான ஆட்டத்தினால் உலக கிரிக்கெட் வரலாற்றில் தன்னுடைய முத்திரையை அழுத்தமாக பதித்துக்கொண்டவர். சர்வதேச ஒரு நாள் போட்டியில் முதல் இரட்டை சதம் எனும் பெருஞ்சாதனையை பதிவு செய்தவர். சதத்தில் சதம் அடித்தவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர். இதுபோல, பிற கிரிக்கெட் வீரர்கள் கற்பனையில் கூட எண்ணிப்பார்க்க முடியாத பலவற்றை சாத்தியமாக்கிவர் சச்சின் டெண்டுல்கர். அர்ஜுனா விருது, ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது, மிக இளம் வயதில் பாரத ரத்னா விருது என வாங்காத விருதுகள் இல்லை. 2012ம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு பாராளுமன்றத்திற்குள் நுழைந்தார் சச்சின் டெண்டுல்கர்.
வெற்றியின் ரகசியம் குறித்து சச்சின் பேசும் பொழுது, "எல்லோருக்கும் வாழ்க்கையில் இலட்சியங்கள், கனவுகள் இருக்கும். நாம் எல்லோருமே திறமையானவர்கள்தான். நமக்குள் ஒரு திறமையை ஒளித்துவைத்துதான் கடவுள் நம்மை இவ்வுலகத்திற்கு அனுப்பியுள்ளார். அந்த திறமையை கண்டுபிடிக்க வேண்டியது மட்டும்தான் நம்முடைய ஒரே வேலை. பட்டை தீட்டப்படாத வைரத்தை பட்டை தீட்டி அதை மினுமினுப்பாக்கும் செயல் என்பது எளிதானது அல்ல. நாம் ஒரு முயற்சியில் இறங்கும்போது திடீரென தடைகள் வரலாம். முயற்சியைக் கைவிடவோ அல்லது குறுக்கு வழியைத் தேடவோ முயற்சிக்காதீர்கள். அது உங்களை நீங்களே ஏமாற்றி கொள்வதற்கு சமம். சரியான வழியில் பயணிப்பது என்பது மிகவும் அவசியம். நீங்கள் விழிக்கும் ஒவ்வொரு காலைப் பொழுதையும் அர்த்தமுள்ளதாக மாற்றுங்கள்."