மகனின் உணர்வுகளை புரிந்து கொள்ளாத பெற்றோருக்கு கொடுத்த கவுன்சிலிங் பற்றி குழந்தை வளர்ப்பு ஆலோசகர் ஆஷா பாக்யராஜ் நம்மிடம் விவரிக்கிறார்.
இளைஞர் ஒருவர் நல்ல சம்பாத்தியத்துடன் வேலை பார்த்து வருகிறார். அதே சமயம் 6 வருடங்களுக்கு மேல் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதற்கிடையில் அந்த நபரின் பெற்றோர் அவருக்குத் திருமண வரன் பார்த்திருக்கின்றனர். தற்போது அந்த நபர் சில காரணங்களால் சண்டையிட்டு தன் காதலியைப் பிரிந்து 6 மாத காலமாகி ஆறாத துயரத்திலிருந்து வருகிறார். இதனால் அவரது பெற்றோரும், உனக்கு இது தேவைதான் நல்லா அனுபவி என்று தங்களது பையனைத் திட்டியுள்ளனர்.
இந்த சூழலில் அந்த நபர் என்னிடம் வந்து, காதலியைப் பிரிந்த சோகத்தில் இருக்கும்போது பெற்றோர்கள் மேலும் புண்படுத்தும்படி நடந்து கொள்கிறார்கள். என் காதலைப் பிரிவதற்கு முன்பே காதலைப் பற்றி அவர்களுக்குத் தெரியப்படுத்தியிருந்தால் கூட அப்போதும் என் மீதுதான் தவறு இருப்பது போல் பேசுவார்கள். எப்போதுதான் என் பெற்றோர் என்னைப் புரிந்துகொண்டு நடந்துகொள்வார்கள் என்று வேதனையுடன் சொன்னான்.
பின்பு அந்த நபரின் பெற்றோரிடம் பேசும்போது, பையன் சின்ன வயதிலிருந்து அவனுக்கு நடக்கும் எல்லாவற்றையும் எங்களிடம் மறைத்துவிடுவான் என்றும், அவனுடைய தேவைகளை எல்லாம் அவனே பார்த்துக்கொள்ளட்டும் என்று சொன்னார்கள். இதையெல்லாம் கேட்ட பிறகு, உங்களின் பையன் சின்ன தவறு செய்தால்கூட அதையே சொல்லிக் குத்திக் காட்டி அவரைப் புண்படுத்தியுள்ளீர்கள். அதனால் முதலில் பையன் என்ன சொன்னாலும் அதை உட்கார்ந்து கேட்டு கொஞ்சம் எமோஷனல் சப்போர்ட் கொடுங்கள் என்று கூறி சில அறிவுரைகளைக் கூறினேன். அதன் பின்பு அந்த பெற்றோர் கால் செய்து, மேடம் நீங்கள் சொன்னதால் தான் எமோஷனல் சப்போர்ட் கொடுத்தோம். இப்போது அவனும் சில விஷயங்களை எங்களிடம் கூறுகிறான் என்று சந்தோஷப்பட்டனர்.
இது போன்று தான் பல சமயங்களில் குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் செய்கிற சின்ன சின்ன தவறுகள் கூட அந்த பிஞ்சுகளின் மனதில் நஞ்சை வளர்த்து வரும். அது திருமண வயதானாலும் மாறாத காயமாக மனதில் இருந்து கொண்டே இருக்கும். எதோ ஒரு கால கட்டத்தில் அந்த காயங்கள் மாறலாம் அல்லது மாறாமல் அப்படியே நிலைத்து விடுவதும் உண்டு. இந்த இளைஞருக்கு அவரது பெற்றோர்களின் மாற்றம் மன காயம் ஆறுவதற்கு துணை புரிந்திருக்கிறது.