Skip to main content

சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர் தொடர்... மரண முகூர்த்தம் #18

Published on 11/09/2021 | Edited on 11/09/2021

 

marana muhurtham part 18

 

அத்தியாயம் -18

 

"என்னைப் பார்த்திருப்ப  என்று  டாடி சொன்னதும், ஒரு  செகண்ட் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் குழம்பினாள்.

"டாடி,  ஒரு நிமிஷம். மறுபடியும் கூப்பிடுறேன்” என்று அவசரமாகச் சொல்லிவிட்டு போனை கட் பண்ணினாள்.

 

அவள் மனதில் தேன் கூடாய்  ஆயிரம் எண்ணங்கள்  சேர்ந்து குழப்பின. ’எங்க நான் கோட்டை விட்டேன்னு தெரியலையே. இந்த டாக்டரும் அப்பாவும் திக் ஃபிரண்ட்ஸுன்னு, இந்த ஆஸ்பத்திரிக்கு வர்றதுக்கு முன்பே எனக்குத் தெரியாமப் போயிடுச்சே. அப்பாவுக்கும் டாக்டருக்கும்  உள்ள நட்பு பற்றி லேகாஸ்ரீ சொன்னதும்,  நான் கவனமா ஒதுங்கியிருக்கணும். ச்சே...’ எனத் தன்னையே  நொந்துகொண்டவள்,

’வேறவழியில் நான் முயற்சி  செஞ்சிருக்கனும். நான் அப்பாவை அந்த மருத்துவமனையில் பார்த்துட்ட மாதிரியே, அப்பாவும் என்னைப் பார்த்திருக்கலாமோ? அப்ப, நான் வந்ததை பாத்து அப்பா அதுக்குள்ள டாக்டர்ட்ட விசாரிச்சித் தெரிஞ்சிருக்கலாமோ? அப்பா, என்னை மருத்துவமனையில் பார்த்த அந்த நிமிஷம், என்ன ஃபீல் பண்ணியிருப்பார்? என்னைப் பத்தி என்ன நினைச்சிருப்பார்? அவரை சமாளிச்சாகனும். நான் தியாவின் இறப்பைப் பற்றி  இன்வெஸ்டிகேட் பண்ணலைன்னு அவர்ட்ட ஒரேயடியா சாதிச்சாகனும். 

 

அப்பாவிற்கு என் மீது சந்தேகம் வராமல் ஜாக்கிரதையாக நடந்து கொள்வது தான் மிக முக்கியம். அதுக்கு முன்னாடி, அப்பா என்னை சந்தேகப்படாத மாதிரி, சில காரணங்களை கிரியேட் செஞ்சாகனும்” எனத் தனக்குத் தானே சொல்லிக்கொண்டாள் கவி.

 

எதிர்முனையில் இருந்த கவியின் அப்பா, தீவிரமாகச் சிந்திக்க ஆரம்பித்தார்.

’நான் நினைச்சது சரிதான். மருத்துவமனையில் கவி இருந்தது சந்தேகம் இல்லாமல் நிரூபணமாகிவிட்டது. காலையில் நான் லிஃப்ட் ஏறும் போது பார்த்தது கவி தான். கவியும் என்னை எதிர்பாராமல் பார்த்ததனால் ஷாக் ஆகியிருக்கணும். உளவியல் மருத்துவமனைக்கு அப்பா எதுக்கு வரனும்?ன்னு குழம்பிப்போய், அம்மா திலகாவிடம் விசாரணை செஞ்சிருக்கா. 

 

போதாக்குறைக்கு ராகவ் மருத்துவமனையில் இருந்து, இப்ப டாக்டர்  ராஜேஷ்  ஃபோன் பண்ணி, தியாவைப் பற்றி விசாரிக்க ஒரு யங்கேர்ள் வந்தாள். அதைப்  பற்றி நேரில் சொல்றேன்னு ஃபோனை  வைத்து விட்டார். அப்ப, கவி தியா விஷயத்தை விடலை. டெல்லியில் கிளாசைக் கூட கட் பண்ணிட்டு,  இங்க தியாவிற்காக சுற்றிக்கொண்டிருக்கிறாள் போல, அப்போ கவி இந்த சென்னையில் தங்கி இருப்பது எங்கே? ஒருவேளை தியா வீட்டிலா..? என் மகள் எனக்குத் தெரியாமல் இப்படியெல்லாம் செய்யக்கூடியவளா? கவி டவுட் ஆகுற அளவுக்கு தியா மரணத்தில் அப்படி என்ன  எவிடன்ஸ் கிடைச்சிருக்கு?’ ரொம்பவே குழம்பிப் போனார் எஸ்.கே.எஸ். 

 

இடையில் தியா வீட்டுக்கு போன் போட்டு, அவள் அப்பா, அம்மாவிடம் மனம் விட்டுப்பேசிய கவி, அடுத்து மீண்டும் 15 நிமிடத்தில் அப்பாவை  ஃபோனில் அழைத்தாள்.

"சாரி... டாடி, இங்க கொஞ்சம் டிஸ்டர்பன்ஸ். தோழிகளோட தியா வீட்ல பேசிக்கிட்டு இருக்கேன். அதான் கால் கட் பண்ணேன். இன்னைக்கு காலைல நான் சென்னைல கால் வச்சதில் இருந்து, ஆச்சரியப்படும்படி நிறைய நிகழ்வுகள் நடந்திடுச்சி டாடி. நிறைய உங்கக்கிட்ட தியா பத்தி சொல்லனும். நமக்குத் தெரியாத உலகம் ஒன்னு அவளுக்குள்ள  இருந்திருக்கு. ஆனா, ஒன்னுமே தெரியாத மாதிரி அப்பாவி போல நாடகம் ஆடியிருக்கா. எல்லாத்தையும்  நேர்ல சொல்றேன் டாடி”என்று ஃபோனை கட்  பண்ணினாள்.

 

தியா பற்றி, ’அப்பாவி மாதிரி ’என்ற கவியின் வர்ணிப்பு, அவரைக் கொஞ்சம் நிமிரவைத்தது. ’நாம் பயந்த மாதிரி இல்லை. கதை வேறுமாதிரி போகுது. நான் நினைச்சதில் பாதி சரி. நான் பார்த்தது கவி தான். அவளே, இன்று காலைலயே சென்னை வந்ததைச் சொல்லிட்டாளே...’ -கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சு அவரிடமிருந்து வந்தது.

 

டாக்டர் ராஜேஷுக்கு அவர் போன் பண்ணினார்...

“ராஜேஷ், உன்னிடம் அந்த தியா பத்தி விசாரித்தது என் மகள்தான். உங்க ஆஸ்பிட்லுக்கு வந்தது பத்தி, நான் கெட்கறதுக்கு முந்தி அவளே சொன்னாள். கொஞ்சம் நிதானமா யோசனை பண்ணி, அவள் உன்கிட்ட என்ன கேட்டா? நீ என்னல்லாம் சொன்னேன்னு, அப்படியே சொல்லு... அப்பதான் அவளை  ஜட்ஜ் பண்ணிச் சமாளிக்க சரியாக இருக்கும்" என்றார்.

 

டாக்டர் ராஜேஷோ நிதானமான குரலில்... ”உங்க மகள் கிட்ட பதட்டம் இருந்துச்சு. தியா இங்க ட்ரீட்மெண்டுக்கு வந்தப்ப, என்னவெல்லாம் சொன்னாள்ன்னு கேட்டாள்.  நான்,  தியாவுக்கு லவ் அஃபேர் இருந்திருக்குன்னு சொன்னேன். அதே சமயம், தியா மீதான அளவு கடந்த நட்பும் அன்பும், அவ உணர்வோட ஒன்றிப்போய் இருப்பதை உணரமுடிஞ்சிது. அதனால் தியா மாதிரியே பேசவும் ஆரம்பிச்சிட்டா. இது ஒன்னும் பெரிய விஷயமில்லை. நாம ஒன்றைப் பற்றியே அதிகம் நினைக்கும் போது இப்படி சில நொடிகள் அதுவாகவே மாறிடுவோம், அது மாதிரி தான் கவியின் செயலும் இருந்துச்சு.  ஒன்னும் பயமில்லை.  ஸ்லீபிக்கிங் டோசேஜ் எடுத்துகிட்டு நல்லா தூங்கினால் சரியாயிடும். அப்பவும் அவள் தியா நெனப்பாவே இருந்தால், அவளுக்கு பிகேவியர் தெரபி தேவைப்படும். என்னைப் பொறுத்தவரை அவளுக்கு ஸ்கூல் மேல டவுட் வரலை. தியா தனிப்பட்ட முறையில் ஏதோ பிரச்சனைல சிக்கிக்கிட்டான்னு நினைச்சிதான் என்னிடம் விசாரிக்க வந்திருக்கா” என்ற கோணத்தில் அவர் சொன்னார். .

 

எஸ்.கே.எஸ்.க்கு  கவிமேல் இருந்த சந்தேகம் பலமிழந்தது. ஆனாலும் அவள் மீது ஒரு கண் இருக்கவேண்டும் என்று அவரது எச்சரிக்கை உணர்ச்சி, அலாரம் அடித்தது. 

 

கவி டாக்ஸி பிடித்து மேடவாக்கத்தில் உள்ள ஷாலுவின் அத்தை வீட்டிற்கு வந்தாள். அத்தையிடம் பாட்டிக்கு உடம்பு   சரியில்லை பார்த்துவிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு வேகமாக  காரில் ஏறி தன் வீட்டிற்குக்  கிளம்பினாள்.

 

கவியைப் பார்த்ததும் திலகா ஆச்சரியப்பட்டார். "ஏய் என்னடி, திடுதிப்புன்னு வந்து நிக்கிற? உனக்கு நீட்ல செலக்ட் ஆகனும்னு எண்ணமில்லையா?  சென்னைக்கு அடிக்கடி வர்றியே.. எல்லாம் உங்க அப்பா கொடுக்குற செல்லம்..” என்று பொறிந்தார். 

" டோன்ட்  ஒர்ரி  மம்மி. நான்தான் நீட்டில் முதல்ல வருவேன்" என்று நம்பிக்கையுடன் சொன்னாள் கவி.

"டாடி.. ”என்று  அழைத்துக்கொண்டே அவர் அறைக்குள் நுழைந்தாள். 

"வாடா கவி.. என்ன திடீர்ன்னு, சொல்லாம கொள்ளாம வந்திருக்கே?" என்றார் தனது குழப்பங்களை மறைத்துக்கொண்டு இயல்பாக.

"டாடி, தியாவின் அம்மா ஃபோன் பண்ணி, தியாவுக்குப் படைக்கிறோம். நீயில்லாம எப்படின்னு அழுதாங்க. அதான்  வந்துட்டேன். நமக்கே தியாவின் இழப்பத் தாங்கமுடியலை. பெத்த அம்மாவுக்கு எப்படி இருக்கும்.  நானும் தியாவின் சில தோழிகளும் மட்டும் கலந்துக்கிட்டோம். அவங்க அப்பாவும் உடைஞ்சிதான் இருக்கார். இன்னும்  நார்மலுக்கு அவங்க யாரும் வரலை. தியா அம்மா, தன் மகள் எதனால் இறந்தான்னு தெரிஞ்சிக்க ஆசைப்பட்டாங்க. லவ் பிராபலமா? இல்லை, யாராவது அவளை மிரட்டி ஏதாவது செஞ்சுட்டாங்களா?ன்னு அவங்களுக்கு டவுட். அவளை யார் என்ன செஞ்சிருப்பா. எனக்கு அவ நடவடிக்கைல சந்தேகம்.  ஏன்னா கடந்த ஒரு மாசமா அவ நார்மலா இல்லை.”

 

சொல்லும் போதே, ”நமக்கு ஜோடனையா பொய் சொல்ல வருதே” என்று தன்னையே பாராட்டிக்கொண்டாள்.    

”அதான் ராகவ் மருத்துவமனைக்கு போய் விசாரிச்சேன்.  அங்க, நான் சந்தேகப்பட்டது போலவே ஆச்சு. டாக்டரும் அவளுக்கு லவ் பிரச்சனைதான்னு சொன்னார். ஆனா டாடி, என்னவோ தெரியலை.... அங்க போனப்ப... மயக்கம் மாதிரி வந்துடுச்சு.  அப்ப நான் பேசினது எனக்கே தெரியலை. எனக்கும் மனப்பிரச்சனையோன்னு பயந்துட்டேன்”என்றாள் தியா.

”ச் சே.. ச்சே.. அப்படியெல்லாம் இல்லை. டிராவல்ல வந்த களைப்பு, அலைச்சல், எல்லாமும் சேர்ந்து உன்னை டயர்டு ஆக்கி இருக்கும்” என்று மகளுக்கு ஆறுதல் சொன்னார் எஸ்.கே.எஸ். 

“அப்புறம் டாடி, அங்க நீங்க லிப்ட்ல இறங்கும் போதுதான் உங்கள பார்த்தேன். முதல்ல உங்களுக்கு எதோன்னு  பதட்டமாயிட்டேன். டிப்ரஷனோன்னு குழம்பிட்டேன்.  அதுதான் உங்களுக்குத் தெரியாம நைஸா விசாரிச்சேன். அப்பதான், டாக்டருக்கு நீங்க பிரண்டுங்கிற விஷயமும். உங்களுக்கு எதுவும் இல்லைன்னும் தெரிஞ்சிது” என்றாள்.

 

அவர் ‘ஹா.. ஹா..” என்று சிரித்துவிட்டு, ” நீயெல்லாம் இருக்கும் போது எனக்கு எதுக்கும்மா டிப்ரஷன் வரப்போவுது” என்றார்.  அவருக்கு கவி மீது நம்பிக்கை வந்தது.

 

இருந்தும் மறு நாள் காலையில் கவி, வெளியில் கிளம்ப ஸ்கூட்டியை எடுக்கும் போது....

"கவி ..நீ இனிமே எங்க போறதா இருந்தாலும், நம்ம காரில் போ. வெயில் அதிகமா இருக்கு" என்றார்  எஸ்.கே.எஸ். 

 

சற்றும் யோசிக்காமல் "ஒகே..டாடி" என்றாள் கவி.

 

காரில் போகும் போது டிரைவரிடம், "மணி அண்ணா, எனக்கு உங்க ஹெல்ப் தேவை. நாம் எங்கே போறேன்னு அப்பாகிட்ட எதுவும் சொல்லிடாதீங்க. ஒருவாரம் எனக்கு ஒத்துழைப்பு கொடுங்க” என்றாள் கவி கெஞ்சலாக. 

"உன்னைப் பற்றி எனக்கு தெரியாதா? நீ நல்ல பொண்ணும்மா. நீ இப்படி சொன்னா ஏதோ அர்த்தம் இருக்கும். உங்க அப்பாக்கிட்ட நான் எதையும் சொல்ல மாட்டேம்மா" என்றார் நெகிழ்ச்சியாய். 

”தாங்ஸ் அண்ணா”

 

கவி, எட்டடி பாய்ந்தால் அப்பா  பதினாறு அடி பாயமாட்டாரா?.

 

(திக் திக் தொடரும்..)