Skip to main content

சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர் தொடர்... மரண முகூர்த்தம் #13

Published on 30/08/2021 | Edited on 30/08/2021

 

marana muhurtham part 13

 

அத்தியாயம்-13

 

எதிர்பார்த்தது  நடக்கும் போது மனம் மகிழ்ச்சியின் எல்லைக்குள் இருக்கும். எதிர்பாராதது நடக்கும் போது மனம் திகிலின் எல்லையில் போய் உட்கார்ந்துவிடும். மனித மனம் எப்போதும் சமநிலையில் இருப்பதில்லை.

 

ஏற்கனவே, திகிலின் எல்லையில் இருக்கும்  கவியிடம் "உன்னிடம் ஒரு  விசயம் கேட்கவேண்டும்" என்று அப்பாக்காரரான எஸ்.கே.எஸ் சொன்னதும், கவியின்  உடலில் நெருப்பாறு ஓடியது. வயிற்றில் அமில ஊற்று பீறிட்டது. மனதிற்குள்  பயப்பூரான்கள்  நெளிந்தன. எனினும் இத்தனையையும் மறைத்துக்கொண்டு... அசட்டுத் தைரியத்தோடு... 

"சொல்லுங்க டாடி..?"என்றாள் அமைதியான குரலில்.

"கவிக் குட்டி, மறைக்காம உண்மையைச் சொல்லு தியாவின் மரணம், உன்னை ரொம்பவும் டிஸ்டர்ப் பண்ணுதா? ஒழுங்கா சாப்பிடறியா..? நல்லா தூங்கறியா..? எதுவாக இருந்தாலும் எங்கிட்டச் சொல்லும்மா. உனக்கு எப்பவும் சப்போட்டிவா டாடி இருக்கேன்." என்று எஸ்.கே.எஸ் சொல்ல, அந்த வார்த்தைகள்  மனதெங்கும் ஐஸ்கிரீம் ஆனது. உற்சாகம் பீறிட ஆரம்பித்தது.

 

பள்ளியில் நடப்பதையும், தான் கண்டுபிடித்த சில ஆதாரங்களையும் டாடியிடம் சொல்லிவிடலாம் என்று, அவள் மனம் ஒரு கணம்  க்ரீன் சிக்னல் காட்ட நினைத்தது. 

 

பிறகு, ’சின்னப் பெண்ணான நாம எவ்வளவு தான் போராடினாலும், தன் பள்ளியில் நடந்ததை மூடி மறைக்கவே அப்பா நினைப்பார். எந்த நிலையிலும் எதனாலும் பள்ளிக்குக் கெட்டபெயர் வந்துவிடக்கூடாது என்பதில் அவர் உறுதியாக இருப்பார். அதனால், இதை எல்லாம் சொன்னால்... எல்லாவற்றுக்கும் பிரேக் போட்டு, வாயை முழுதாக அடைத்துவிடுவார்...’- என்று அவளது மூளை, அவளுக்கு ரெட் சிக்னல் போட்டது.

 

உள்ளே அவள் சுண்டிவிட்ட காயின், தலையைக் காட்டி, மூளையின் பேச்சைக் கேட்கச் சொன்னது. உடனே...

"அதெல்லாம் ஒன்னும் இல்லை டாடி, நான் நார்மலாத்தான் இருக்கேன், என்னுடைய எய்ம் நீட்ல ஃபர்ஸ்ட் தான் டாடி”  என்று தெளிவாகப் பொய் சொன்னாள்.

"ஒகே டா  டேக் கேர்...."என்று சொல்லி, மனத்திரையில் இருந்து சற்று  நகர்ந்தார்.

 

எஸ்.கே.எஸ்.ஃபோனை கட் பண்ணியதும், ஹாண்ட் கிராப்ட் கடையின் கதவை மெல்லத் திறந்து கொண்டு,  ’மெல்லத் திறந்தது கதவு’ படத்தின் அமலா போல், அந்த பர்தா தேவதை உள்ளே நுழைந்தாள். கண்களால் வலைவீசி கவியிடம் வந்து சேர்ந்தாள்.

 

இருவரும் ஒரு தலையாட்டி பொம்மையைக் கையில் எடுத்துப் பார்க்கும் சாக்கில் ரகசியம் பேசினார்கள். 

"சத்யாவைப் பார்த்தா,..? என்ன சொன்னாள்" -இது பர்தா பெண்.

"அவள் வீட்டுக்குப் போனேன். பேசும் நிலையில் அவள் இல்லை.”

“என்ன சொல்றே?”

"அவள் படமாகி விட்டாள். ஆமாம், மரணமடைந்துவிட்டாள். தற்கொலை...."

 

பர்தாப்பெண் திடுக்கிட....  கவி, சத்யா வீட்டில் நடந்ததை "அ  முதல் ஃ" வரை சுருங்கச் சொல்லி விளக்கினாள்.

 

பர்தா நிறைய இப்போது அதிர்ச்சி. ஆம், அவள் அதிர்ச்சியில் ஸ்தம்பித்து நின்றாள். பின்னர் அதிர்ச்சியில் இருந்து மீண்டு...

"கவி, உன்னிடம் நான் கொடுத்தது, உங்க  கவி நிலா ஸ்கூல்ல கடந்த 4 ஆண்டுகளாக 11 ஆம் வகுப்பைப் பாதியில் விட்டுட்டு, ஸ்கூல்ல இருந்து நின்றுவிட்ட மாணவிகள் பட்டியல். அதோட அவங்களைப் பத்தி எனக்குக் கிடைச்ச சில டீட்டெய்ல்ஸ். இதை கலெக்ட் பண்ண,  நான் எவ்வளவு ரிஸ்க் எடுத்தேன்  தெரியுமா..? கடைசியில் சத்யா விஷயத்தில் பலனில்லாம போச்சு” என்று வருந்தினாள் பர்தா.

"விடு....இன்னும் என்னென்ன அதிர்ச்சி நமக்கு இருக்குதோ.. பர்க்கலாம். நாம் நினைக்கிறத விட ரொம்பவும் பெரிய கிரைம் பின்னணி இந்த விவகாரத்தில் இருக்கும்ன்னு தோணுது. இனி நாம் ரொம்பவும் கவனமாகக் காய் நகர்த்தியாகவேண்டும்” என்று தைரியப்படுத்தினாள் கவி.

"சரி நான் கிளம்பறேன்" என்ற பர்தா பெண், தங்களை யாரேனும் கவனிக்கிறார்களா? என்று கடையை ஒரு சுற்றுப் பார்த்துவிட்டு, விசுக்கென அங்கிருந்து வெளியேறி  மின்னலென மறைந்தாள். 

 

வயிற்றில் சுரந்த அமிலம், பசி.. பசி.. என  மூளைக்கு, நரம்புகளை மெசெஞ்சராக்கி செய்தி அனுப்ப, மாலில் இருந்த கே.எஃப்.சி.க்குள் நுழைந்தாள். கொஞ்சமாய் சாப்பிட்டுவிட்டு, மெல்ல வெளியே வந்து, அந்த மாலுக்கு குட்பை சொன்னாள்.

 

ஓலாவில் தாம்பரம் அண்ணாநகர் 2 ஆம் கிராஸ் என்று புக் பண்ண, சற்று நேரத்தில் வழுக்கிக்கொண்டு வந்த காரில் ஏறி உட்கார்ந்தாள். மனம், அந்த காரைவிட அசுரவேகத்தில் விரைந்தது. 

’அப்பாவுக்குத் தெரியாமல் நம் பள்ளியில் என்ன நடக்கிறது? அங்கே மாணவிகளைக் குறிவைப்பது யார்? அவர்களுக்கு என்ன நடக்கிறது? வாட்ச் மேனை கொன்றது யார்? எதனால்?’ -சிந்திக்கும் போதே மூளையின் ஒரு மூலையில் வலி உணர்ந்தாள்.

 

2 ஆம் கிராஸில் இறங்கி 13 ம் நம்பர்  வீட்டிற்கு வந்தாள். அருகே லாண்டரி வண்டிக்காரர் பிஸியாக இருந்தார். கொஞ்சம் தள்ளி ஒரு சின்ன டீக்கடை பூத். 

 

அதிக நடமாட்டம் இல்லை. அந்த வீடு இயற்கை எழில் கொஞ்சும் வகையில் பசுமைப் பின்னணியில் இருந்தது. அகலமான மெயின் கேட்டில் தாழ்பாள் உடைந்திருந்தது. ஒரு லாரி போய் வரலாம் என்கிற அளவுக்கு அது பெரிதாக இருந்தது. கை வைத்ததும் ’டபால்’ என்று திறந்துகொண்டது. நாய் ஏதும் இருக்குமா? என்று பார்த்துக்கொண்டே உள்ளே காலை வைத்தாள்.

 

கேட்டிற்கும் அந்த வீட்டிற்கும் இடையே  நீண்ட அழகிய  நடைபாதை  டைல்ஸ் போட்டு  அழகாக இருந்தது. நடைபாதையின்  இருபக்கமும் கொய்யா, எலுமிச்சை, உள்ளிட்ட மரங்கள் மற்றும் செம்பரத்தை உள்ளிட்ட செடிகள் என்று  காட்சி தந்தன.  பக்கவாட்டில் ஒரு மர ஊஞ்சல், ஆடுவார் யாருமின்றி, காற்றில் மெதுவாக அசைந்துகொண்டு இருந்தது. அங்கங்கே நிழலில் சில நாற்காலிகள் கிடந்தன. அவை, வீட்டினரின் மாலைப் பொழுதுகளைக் கரைப்பவை என்பது புரிந்தது. தரையெங்கும் உலர்ந்த பூக்களும் சருகுகளும் இறைந்துகிடந்தன. அங்கிருந்த மகிழமரம், காற்றைச் சுகந்தமாக்கியது.

 

வீட்டின் வாசலுக்கு வந்தவள் காலிங் பெல்லை அடித்தாள். உள்ளே குயில் கூவியது. எனினும், சலனம் எதுவும் தெரியவில்லை. அப்போதுதான், கதவில் இருந்த நவ்தால் பூட்டு, பூட்டி இருப்பது தெரிந்தது.

 

’சனிபகவான் பிளைட் பிடிச்சு  நமக்கு முன்னாடி வந்துட்டார் போலிருக்கே’ என்று நினைத்துக்கொண்டாள். மனச் சோர்வோடு, கேட்டுக்கு வெளியே வந்த கவி, அந்த வீட்டின் வலது பக்கம் இருந்த லாண்டரி வண்டிக்காரரைப் பார்த்தால். அந்தப் பெரியவர் துணிகளை அயர்ன் பண்ணுவதிலேயே கவனமாக இருந்தார். கீழே ஒரு பெண்மணி, ஒரு துணி மூட்டையைப் பிரித்து எண்ணிக்கொண்டு இருந்தாள். அது அவர் மகளாக இருப்பாளோ?

 

அவரிடம் சென்ற கவி  "ஐயா... இது ரம்யா வீடுதானே..? வீடு பூட்டியிருக்கே..?” என்றாள்.

"ஆமாம்மா. அவங்க அப்பாதான் வீட்ல இருக்கார். அவரும் வெளில போயிருக்கார். இப்ப வந்துடுவார். நீ வேணா, உள்ளே போய் தோட்டத்தில் வெயிட் பண்ணும்மா"என்றார், நெற்றி வியர்வையைச் சுண்டியபடியே.

’சரி, இவ்வளவு தூரம் வந்துவிட்டோம். கொஞ்சம் வெயிட் பண்ணித்தான் பார்ப்போமே?’ 

 

உள்ளே வந்த கவி, தோட்டத்தில் இருந்த அந்த ஊஞ்சலில்  உட்கார்ந்தாள்.  லேசாக அதை ஆட்டிவிட்டு, ஆடினாள்.   காலுக்குக் கீழ் பூமி அங்கும் இங்கும் அசைந்தது.

 

கவிக்கு தன்னை நினைக்கும் போது அவளுக்கே சிரிப்பு வந்தது. 

"நான் எங்கே எப்படி இருக்க வேண்டியவள்..? இங்கே, யாருமில்லாத அனாதை மாதிரி... யார் வீட்டுத் தோட்டத்திலோ...  யாருக்காகவோ... காத்திருக்கிறேன்’

 

அந்த ஊஞ்சல் பலகையைப் பார்த்தாள். அதில் சில கணக்கு ஃபார்முலாக்கள் பேனாவால் கிறுக்கப்பட்டிருந்தன. அதைப் பார்த்ததும், ’இது ரம்யாவின் கையெழுத்தாக இருக்குமோ? இந்த இடத்தில்தான்  ரம்யா தினமும் உட்கார்ந்து படிப்பாளோ?’ என நினைத்துக்கொண்டவள், பலகையின் வலது பக்கத்தில், ’கே.என்.எம்.ஹெச்.எஸ்.எஸ்.’ என்ற எழுத்து சிவப்பு வட்டத்திற்குள் எழுதப்பட்டிருப்பதைப் பார்த்ததும் திடுக்கிட்டாள்.

 

தங்கள் ’கவிநிலா மெட்ரிக்  ஹயர் செகண்டரி ஸ்கூலை’தான்’ இப்படி குறிப்பார்கள் என்பதால், அதைக் கூர்ந்து பார்த்தாள். தான் படித்த பள்ளியின் பெயரை, இந்த ஊஞ்சலில் சிவப்பு வட்டத்துக்குள் எதற்கு பள்ளியின் பெயர் எழுதப்படவேண்டும்? 

 

யோசித்தபடியே... அதைச் சுற்றி எழுதப்பட்டிருந்த எழுத்துக்களை எல்லாம் கண்களால் கூர்ந்தாள். பக்கத்தில் ’கேனிபல்ஸ்’ என்ற வார்த்தை மட்டுமே படிக்கும் படி இருந்தது. 

 

உடனே, கூகுளில் அதன் பொருள் தேடினாள் கவி. 

 

கேனிபல்ஸ் என்றால், மனிதர்களைக் கொன்று சாப்பிடும் ஒரு மனித இனத்தின் பெயர் என்று இருந்தது. ஹைவோல்ட் அதிர்ச்சி அவளைத் தாக்கியது.

’நம் பள்ளியில் நரமாமிசக் கும்பலா?’ என்று மிரண்டவள்.... ’ரம்யா அப்படி  நம் பள்ளியில் எதைக் கண்டாள்? அவள் இப்போது எப்படி இருக்கிறாள்?’ -அவள் மனம் தவித்தது.

 

இருப்புக் கொள்ளாமல் தவித்தவள், எழுந்து நின்றபோது...

 

ஒரு கார் கேட்டுக்குள் வந்தது. அதிலிருந்து உயரமாக ஆஜானுபாகுவாக ஒருவர் இறங்கி வந்தார்.  நெற்றியில் விபூதி குங்குமம். 

 

அவரைப் பார்த்ததும், "வணக்கம் சார்"  என்றாள் கவி.

"வணக்கம், யாரும்மா நீ? என்ன வேணும்?” என்று கேட்டுக் கொண்டே, வீட்டுக் கதவைத் திறந்தார். 

"சார்.. ரம்யா இருக்காங்களா?”  

 

இதைக் கேட்டதும் முகம் மாறியவர்...

"ரம்யா எல்லாம் இல்லை. நீ யாரு? நீ ஏன் அவளைப் பற்றி கேட்கற?” என்று குரலை உயர்த்தினார். 

"சார் நான் கே.என். எம். ஹெ.எஸ்.எஸ். ஸ்கூல்ல படிச்சேன். அப்ப, ரம்யா எனக்கு சீனியர்...”என்று அவள் சொல்லி முடிப்பதற்குள்...

"அந்த  ஸ்கூலை பத்திப் பேசாத... முதல்ல இங்கிருந்து கிளம்பு" என்று விரட்டினார்.

”சார் ....ரம்யா....”

”ரம்யா இல்லைன்னா... உனக்குப் புரியாதா? போ... போ...” என்றார்.

’ரம்யா இல்லை என்றால்... அவளுக்கு என்ன? அவளும் சூசைட் தானா? இதை யாரிடம் சொல்லி அழுவது? தியா, சத்யா வீட்டில் பார்த்தது போல், ரம்யா வீட்டு ஊஞ்சலில் கேனிபல்ஸ் என்ற வாசகத்தைப் பார்த்ததை, பர்தாவிடம் சொன்னாள் கூட நம்ப மாட்டாளே? என்னடி ஒரே மாதிரி கதை சொல்றே... கதையைக் கூட வேற மாதிரி யோசிக்க மாட்டியா? என்று பர்தா திருப்பிக் கேட்டாள் என்ன சொல்வது?’

 

ஒரு கணம் உறைந்துபோய் நின்றாள் கவி.

 

(திக் திக் தொடரும்)

 

சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர் தொடர்... மரண முகூர்த்தம் #12