மனநல ஆலோசகர் ஜெய் ஜென், தன் வாழ்வில் சந்தித்த பல்வேறு மனிதர்களைப் பற்றியும், அவர்களுக்கு கொடுத்த கவுன்சிலிங் குறித்தும் ‘மனங்களும் மனிதர்களும்’ தொடரின் வழியாக நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். அந்த வகையில், கணவரை இழந்து தற்கொலைக்கு முயற்சி செய்த மனைவிக்கு கொடுத்த கவுன்சிலிங் பற்றி விளக்குகிறார்.
ஒரு பெண் தனது கணவனை இழந்து மிகுந்த வேதனையுடன் என்னை சந்திக்க வந்தார். அந்த பெண்ணுக்கு 10 வயதுடைய ஒரு பெண் குழந்தை இருக்கிறது. அந்த பெண் என்னிடம் தன் கணவனை பற்றி சொன்ன போது, இப்படி ஒரு கணவன் யாருக்கும் கிடைத்திருக்க மாட்டார். மிகவும் நல்ல மனிதர். அவரின் பெற்றோர், தன்னுடைய பெற்றோர், குழந்தை என எல்லோரும் அவரின் மறைவை நினைத்து வேதனைப்படுகிறோம். அந்தளவிற்கு நல்ல கணவராகவும், அப்பாவாகவும், மகனாகவும், மருமகனாகவும் இருந்தார் என்று கண்ணீர் மல்க தனது பாரத்தை என்னிடம் இறக்கி வைத்தார். இதைவிடவும் எளிமையாக தன் கணவருடன் வாழ்ந்த நாட்கள் கவிதை மாதிரி இருந்ததாக கூறினார். அதோடு தான் சில நேரங்களில் தற்கொலை செய்ய முயற்சி செய்ததாகவும் மகளை நினைத்து அந்த முடிவை கைவிட்டதாகவும் கூறினார். ஆனால் அந்த தற்கொலை எண்ணம் மட்டும் தொடர்ந்து தன்னை சூழ்ந்து வருகிறது என்றும் கடவுள் மேல் இருந்த நம்பிக்கை போய்விட்டது என்றும் சொன்னார். ஏன் என்னுடைய கணவர்விட்டு சென்றார்...நானும் அவருடனே சென்று விடுகிறேன்... எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்க வேண்டும்? என்று புலம்பினார்.
இதையெல்லாம் கேட்ட பிறகு அந்த பெண்ணிடம், முதலில் எப்படி நீங்கள் இயற்கையை விட பெரிய ஆளாக மாறினீர்கள்? என்றேன். பதில் தெரியாமல் அந்த பெண் முழித்தார். அதன் பிறகு நான், நீங்கள் யாரிடமும் கேட்க முடியாத ஒன்றை இயற்கையிடம் கேட்கிறீர்கள். இது போன்ற இழப்புகள் மற்றவர்களுக்கும் நடந்துள்ளது. அவர்களும் இயற்கைக்கு எதிராக கேள்வி கேட்டவர்கள்தான் ஒரு கட்டத்தில் இயற்கையை எதிர்த்து எதுவும் செய்ய முடியாமல் வாரங்களையும் மாதங்களையும் வருடங்களையும் கடந்துள்ளனர். அதே போல் எந்த தேதியில் இயற்கையை ஏற்றுக்கொள்ள போகிறீர்கள் என்று கேட்டேன். பதில் பேசாமல் இருந்தார். ஏனென்றால் அந்த பெண்ணுக்கு கடவுள் இல்லை அது வெறும் கல் தான் என்று புரிந்துவிட்டது. அதனால்தான் இயற்கையை கேள்வி கேட்டுள்ளார். அதேபோல் இயற்கையை ஏற்றுக்கொண்டால்தான் அவருக்கு தீர்வு கிடைக்கும் என்று புரியவைக்கத்தான் இப்படி கேள்விகளை கேட்டேன்.
அதன் பிறகு அந்தபெண்ணிடம் அடுத்து எப்போது தற்கொலை முயற்சி செய்ய போகிறீர்கள் என்று கேட்டேன். உடனே அந்த பெண் சிரித்து விட்டார். உடனே நான் என்ன மேடம் இப்போதுதான் கண்ணில் நீர் பெருக தற்கொலை முயற்சி எண்ணம் வருகிறது என்று சொன்னீர்கள் இப்போது நடக்கப்போகும் நிகழ்வை கேட்டால் சிரிக்கிறீர்கள் என்றேன். இதையடுத்து சொன்னால் வெற்றிகரமாக அடுத்த தற்கொலை முயற்சிக்கு போகிறீர்கள் என்று பாராட்டுவேன் என்றேன். இதை சொன்னதும் மீண்டும் அந்த பெண் சிரிக்கத்தொடக்கினார். அதன் பிறகு அந்த பெண், சில நேரம் அமைதியாக உட்கார்ந்து யோசித்து என்னிடம் வந்து, உங்களை கட்டிப்பிடித்துக்கொள்ளவா? சார் என்றார். கட்டிபிடித்துவிட்டு என் பெண் வளர்ந்து பெரியவளாகி திருமணம் செய்துகொண்ட பிறகு அவளுக்கு ஒரு குழந்தை வரும் அந்த குழந்தையுடன் உங்களை வந்து சந்தித்து மீண்டும் கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்துவேன் ரொம்ப நன்றி சார் என்றார்.
இந்த இடத்தில்தான் அந்த பெண் தன்னையே உணர்ந்து விட்டாள். எடுத்துக்காட்டாக ஒரு திருடன் தன் மனதில் தான் திருடுகிறேன் என்பதை உணர்ந்தாள் அவனால் திருட முடியாது. அதேபோல் ஒரு பெண்ணை தவறாக தொடும்போது அவன் மனதில் அது தவறு என்று பட்டால் அதை துணிகரமாக செய்ய மாட்டான். இதை உணராமல் இருக்கத்தான் சிலர் போதைப் பொருளை பயன்படுத்தி தன்னையே உணராமல் துணிகரமாக சில காரியங்களை செய்துவிடுகின்றனர். இதைதான் கண்ணீருடன் வந்த அந்த பெண்ணிடம் அடுத்து எப்போது தற்கொலை முயற்சி செய்ய போகிறீர்கள் என்று தற்கொலை என்ற தவறான எண்ணத்தை உணர வைத்ததும் தன்னை உணர்ந்து சிரிக்க ஆரம்பித்தார். இந்த சிந்தனை வந்துவிட்டால் கடந்து வந்த வலியை எதிர்காலத்துடன் இணைத்து அவர்களாகவே இலக்கை நோக்கிய பயணத்திற்கு சென்றுவிடுவார்கள்.