தான் சந்தித்த பல்வேறு கவுன்சிலிங் பற்றியும், பல வகையான மனிதர்களுக்கு அவர் கொடுத்த கவுன்சிலிங் குறித்தும் ‘மனங்களும் மனிதர்களும்’ தொடரின் வழியாக ஜெய் ஜென் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். அந்த வகையில், மனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடாமல் அதை டேட்டிங் ஆப்களில் தேடிய கணவருக்கு கொடுத்த கவுன்சிலிங் பற்றி விளக்குகிறார்.
ஒரு பெண், தன் கணவருடனான தாம்பத்திய உறவு, குறைந்துவிட்டதாக கூறினார். மேலும், தன் கணவர் நிறைய டேட்டிங் ஆப் மூலம் பல பெண்களுடன் தொடர்பில் இருப்பதாக தெரிவித்தார். அந்த பெண்களுடைய சேட், வரைமுறைக்கு மீறியதாக இருக்கிறது. தனக்கு தானே நீண்ட ஆலோசனை செய்து அவரை பிரிந்துவிடலாம் என்று நினைத்தாலும், ஒருமுறை இதைப் பற்றி பேசிப் பார்க்கலாம் என்றுதான் உங்களிடம் வந்தேன் என்று கூறினார்.
நான் அந்த பெண்ணிடம், உங்களுக்கு என்ன பிரச்சனை இருக்கிறது என்று சுயபரிசோதனை செய்து பார்த்தீர்களா? என்று கேட்டேன். அதற்கு அந்த பெண், என் கணவரிடம் எரிச்சலுடன் சில விஷயங்களை கூறுவேன் என்றார். அதன் பின்பு அவரின் கணவன் பக்கம் என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள அவரையும் அழைத்து வாருங்கள் பேசுவோம் என்றேன். நான் சொன்னதுபோல் பேசி தன் கணவரையும் அந்த பெண் அழைத்து வந்தார். அந்த பெண்ணின் கணவரிடம் பேசும்போது அவர் வித்தியாசமான நபராக இருந்தார். ஏன் இதையெல்லாம் செய்கிறீர்கள் என்று கேட்டபோது, அவர் எனக்கே தெரியவில்லை என்றும் ஒரு முறை டேட்டிங் ஆப் மூலம் ஒரு பெண்ணிடம் உறவு வைத்துவிட்டால் மீண்டும் அந்த பெண்ணிடம் தொடர்பில் இருக்க மாட்டேன் என்றார். இதில் உங்களுக்கு பிரச்சனை எதாவது வருகிறதா என்று கேட்டால், பிரச்சனை இருக்கிறது என்றும் சில நேரங்களில் சில பெண்கள் வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டுவார்கள் என்று கூறினார். இருந்தும் அந்த டேட்டிங் ஆப்-களை விட்டு வெளியே வர முடியவில்லை என்றார்.
அதன் பிறகு அவரிடம் பள்ளி, கல்லூரி காலங்களில் நடந்த சம்பவங்களை கேட்டேன். அதற்கு அவர், ஏழாவது படிக்கும்போது தன் இரண்டு நண்பர்களுடன் ஒரு பெண் தோழி அடிக்கடி பேசுவார். ஆனால் என்னிடம் மட்டும் பேச மாட்டார். அந்த தோழியுடன் பேசவிடாமல் என் நண்பர்களை சில நேரம் திசை திருப்பி இருக்கிறேன். அப்போது, அந்த தோழி என்னிடம் வந்து என் நண்பர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று கேட்பாள். இப்படி நான் 5,6 முறை செய்திருக்கிறேன் அவள் தொடர்ந்து என்னிடம் பேசியதும் நான் செய்ய நினைத்ததை சாதித்த உணர்வுடன் அந்த பெண்ணிடம் நான் பேசமாட்டேன் என்றார். அதன் பின்பு சில பெண்களிடம் காதலித்து அவர்கள் காதலித்த பிறகு விட்டுவிட்டதாக கூறினார். ஆனால், திருமண உறவில் இருந்ததற்கு பிறகும், முதல் குழந்தை பிறந்த பிறகும் இந்த செயலை செய்யவில்லை. மனைவி இரண்டாம் குழந்தைக்காக கர்பமான சமயத்தில்தான் இந்த டேட்டிங் ஆப் தனக்கு அறிமுகமானது என்றும் கூறினார். அந்த ஆப் மூலம் ஒரு பெண்ணிடம் பேசும்போது அந்த பெண் ரெஸ்பான்ஸ் பண்ணவில்லையென்றால் அந்த பெண் தனக்கு ரெஸ்பான்ஸ் செய்யும்வரை அதற்காக என்ன வேண்டுமாலும் செய்வதாக கூறினார். சர்பிரைஸ் கிஸ்ப்ட் அனுப்பி அந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு ஒரு குறிப்பிட்ட நிலைக்கு வரும்போது அந்த பெண் தன்னை தொடர்புகொள்ள முடியாத அளவிற்கு விலகிவிடுவதாகவும் கூறினார்.
இதையெல்லாம் 6ஆம் அல்லது 7ஆம் கட்ட கவுன்சிலிங்கில்தான் ஓபனாக பேசினார். தனக்கு இருந்த பிரச்சனையை அப்போதுதான் அவரே உணர ஆரம்பித்தார். இந்த பிரச்சனைக்கு தீர்வு காண உங்களை ஏன் மற்றவர் மதிக்க வேண்டும் என்று கேட்டேன். அதற்கு அவர், தான் வேலை செய்யும் அலுவலகத்திலும் யாரவது தன்னை நிராகரித்தால்கூட எதையாவது செய்து மதிக்க வைப்பேன் என்றார். இந்த எண்ணம் அவரிடமிருந்து வேரோடு எடுக்க அவரிடம் உள்ள பாசிடிவ் பக்கங்களை 2 நிமிட வாய்ஸ் நோட் செய்யுங்கள் என்று டெய்லி எக்ஸ்சர்சைஸாக கொடுத்தேன். அவரும் அதை தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு மேல் செய்ய தொடங்கி மூன்றாவது வாரம் என்னிடம் வந்து சார் எனக்கு இப்போது அந்த டேட்டிங் ஆப் பற்றிய சிந்தனையே வரவில்லை என்றார். அவருக்கு நான் செய்தது என்னவென்றால், அவருக்கு அவரையே தாழ்வாக மதிப்பிடும் எண்ணங்கள் இருந்தது. அதை உடைக்க அவரிமுள்ள பலத்தை அவர் மனதில் பதியவைத்தேன். இது எல்லோருடைய வாழ்க்கையிலும் இருக்கும். ஒருவர் நீண்ட காலமாக வண்டியை சாலையில் ஓட்டி விபத்து ஏற்படாமல் இருக்கிறார் என்றால் அது அவருடைய பலம். இதை மற்றவர்கள் பார்த்து பாராட்டுவார்கள் என்று நினைப்பதை தவிர்த்து நமக்கு நம்மை பற்றிய நல்ல மதிப்பீட்டை ஏற்படுத்திகொள்ள வேண்டும். இது போன்ற சின்ன சின்ன விஷயங்களில் நம்மை உணர்ந்துகொண்டால் இதையெல்லாம் தவிர்க்க முடியும் என்றார்.