தான் கொடுத்த கவுன்சிலிங் பற்றி ’மனங்களும் மனிதர்களும்’ என்னும் தொடரின் வழியே ஜெய் ஜென் பகிர்ந்து கொள்கிறார்.
ஒரு கணவன் மனைவி கவுன்சிலிங்காக வருகிறார்கள். வந்த கணவர் பேச பேச மனைவி முரணாக அப்படி நடக்கவில்லை என்று குறுக்கே பேச என்ன பிரச்சனை எனக்கு தெரியவே கொஞ்சம் நேரம் எடுத்தது. தன் மகளுக்கு டீனேஜ் வயதில் ஏற்படும் பிரச்சினை தொடர்பாகததான் கவுன்சிலிங் வந்திருக்கிறார்கள். என்ன நடந்தது என்றால் தங்களுடைய பெண் தேவையில்லாத உறவில் இருப்பதை பார்த்து அதை அம்மா கண்டித்திருக்கிறார். ஆனால் அப்பா, பெண்ணை ஆதரவு என்ற பெயரில் விசாரிக்காமல் அம்மாவை கண்டிக்கிறார். பெண் இதைக் கவனிக்கும் பொழுது அம்மா தான் நமக்கு எதிரி. அப்பா நமக்கு ஆதரவு அளிக்கிறார் என்பதால் அப்பாவுடன் உறவை நல்ல பலமாக்கி தமக்கு தேவையானதை சாதித்துக் கொள்கிறாள்.
ஒரு கட்டத்தில் 11 வது படிக்கும் இந்தப் பெண், அந்தத் தப்பான உறவில் இருந்தவனுடன் ஓடிப் போய் விடுகிறாள். போன இடத்தில் வேறு நபர்கள் இவர்கள் ஓடி வந்ததை தெரிந்து விட்டு பெண்ணின் புகைப்படம் எடுத்து பெற்றோரிடம் அனுப்பி நகை கேட்டு மிரட்ட என்று அங்கு சம்பவம் வேறு மாதிரி ஆகி விடுகிறது. கூட வந்த பையன் மிகவும் பயந்தவனாக இருக்கிறான். இந்தப் பெண்ணுக்கு அப்போது தான் வந்தது தப்பு என்று புரிகிறது. இங்கு அப்பாவுக்கு பெண் ஓடிவிட்டார் என்று தெரிந்ததும் பெண்ணை ரொம்ப அதிகமாக நம்பி விட்டேன் என்று வருத்தப்படுகிறார். ஆனால் மனைவியோ நான் அப்பவே சொன்னேனே என்று அவர்கள் வாதிக்க இருவர்களுக்குள் சண்டை அதிகமாகிறது.
ஆனால், எப்படியோ அந்தப் பெண் தப்பித்து வீட்டுக்கு வந்து விடுகிறாள். அந்தப் பெண் ஏற்கனவே காதலனை நம்பி ஓடி, அவன் தப்பானவன் என்று ஏமாறப்பட்டு, இரண்டு இளைஞர்கள் மிரட்டியதில் அந்த ஒரு பயம் ஒரு பக்கம், வீட்டுக்கு சென்றால் அம்மா அப்பா என்ன சொல்வார்களோ என்ற ஒரு பயம் என்று வந்திருக்கிறாள். ஆனால் வந்ததும் இவர்கள் இருவரும் சண்டை போட்டுக் கொள்ள என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி போய் பயந்து முதிர்ச்சி இல்லாமல் தற்கொலைக்கு முயற்சித்து மருத்துவமனையில் அனுமதிக்கும் அளவுக்கு போய் என்று அவளை காப்பாற்றி விடுகின்றனர்.
ஆனால், அப்போதும் மீண்டும் தன் பெண் தற்கொலை எடுத்ததற்கு நீ தான் காரணம், நான் தான் காரணம் என்று இருவரும் மீண்டும் சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், கவுன்சிலிங் வந்தார்கள். அப்படி வந்த போதும் இருவரும் மாறி மாறி வாக்குவாதம் செய்து கொண்டே போகையில் நான் ஒரு கட்டத்தில் நிறுத்தி அந்த அம்மாவை தான் முதலில் பேச சொன்னேன். அவர் பேசும் வரை கணவரை அமைதியாக இருக்க சொன்னேன். அப்போது அந்த அம்மா, தனது மகள் பள்ளியிலிருந்து லேட் ஆக வருவது, பாத்ரூம் சென்றால் 10 நிமிடத்தில் வர வேண்டியவள் முக்கால் மணி நேரம் கழித்து தான் வருகிறாள். அந்த அரை மணி நேரம் என்ன செய்கிறாள் என்று எனக்கு அப்பவே சந்தேகம் இருந்தது. இதையெல்லாம் நான் நேரடியாக கண்டித்தால் அவள் அப்பாவை வைத்து தப்பித்துக் கொள்கிறாள். அப்பா குறுக்க வர அவரிடமும் சொல்ல வேண்டியதாக இருக்கிறது. இப்படித்தான் கடைசியில் இந்த நிலையில் வந்திருக்கிறது. எப்போதுமே தன்னை வீட்டில் மதிப்பதில்லை. அப்பாவும் பெண்ணுமாக சேர்ந்து கொண்டு ஒதுக்குவார்கள் என்று முடித்தார்.
அடுத்து கணவர் ஏற்கனவே எங்களுக்குள் ஈகோ இருக்க தான் செய்தது. ஆனால், இவள் சிறிய விஷயத்தை ரொம்ப மிகைப்படுத்தி சொல்கிறாளோ என்று ஏற்றுக் கொள்ள முடியாமல் விட்டுவிட்டேன் என்றார். ஆனாலும், அவர் ஒத்துக் கொள்ளாமல் ஒரு மாதிரி தான் பதில் சொன்னார். அவர் இந்த பிரச்சனைக்கு முன்னாடியே சொந்த பிரச்சனையினால் மனைவியை தாக்க வாய்ப்புக்காக காத்திருந்து தன் பிள்ளையின் பிரச்சினை வரும்போது இதை வாய்ப்பாக வைத்து மனைவியை மட்டம் தட்டியிருக்கிறார். இதை வாய்ப்பாக வைத்து பெண்ணும் தப்பித்து இருக்கிறாள்.
இருவரும் பேசியதிலேயே என்ன செய்திருக்கிறோம் என்று சொல்லி உங்கள் இருவரின் சொந்த பிரச்சனையில் யாரோட வாழ்க்கை பார்த்திருக்கிறது என்று பேசி புரிய வைத்தேன். குடும்பத்தில் பிரச்சனை என்றால் கணவன் மனைவிக்கான பிரச்சினை தனியாகவும் குழந்தைகளிடமிருக்கும் பிரச்சினை தனியாகவும் அணுக வேண்டும். நீங்கள் உங்கள் சொந்த பிரச்சனையை பெண் பிள்ளையின் பிரச்சனையோடு சேர்த்ததின் விளைவு இது என்று சொல்லி புரிய வைக்க கவுன்சிலிங் முடிந்தது.
பொதுவாக அந்தக் காலத்தில் கூட்டு குடும்பமாக இருக்கும் பொழுது அம்மா அப்பா இருவரும் கண்டிப்பார்கள். குழந்தைக்கு ஆதரவாக பிள்ளையின் தாய் மாமா அல்லது சித்தப்பா என்று வருவர். ஆனால், இந்தக் குடும்பத்தில் அந்தத் தாய் மாமா தரும் ஆதரவை அப்பா கையில் எடுத்து விட்டார். அங்கு தான் பிரச்சனை விபரீதமானது. இன்றைய காலத்தில் ஒரு குழந்தை என்று இருக்கும் சிறிய குடும்பத்தில் பெற்றோர்கள் இருவரும் கண்டிப்பாக இருக்கவேண்டும். கூடுதலாக எல்லா குடும்பத்திலும் நட்பு வட்டாரத்தில் மிக நம்பிக்கையான ஒருவர் இருக்க வேண்டும். அப்பா அம்மாவிடம் சொல்ல முடியவில்லை என்றாலும் அந்தக் குழந்தை தன் பிரச்சனையை சொல்லி அவரிடம் ஆதரவு கேட்கும்படி இருக்க வேண்டும். அல்லது அம்மா அப்பா அவர்களுடைய பிரச்சனை தனியாக பார்த்துக் கொண்டு குழந்தையிடம் நல்ல நட்போடு இருந்தால், அவர்களே பெற்றோரிடம் நம்பி பகிர்வார்கள்.