Skip to main content

டிஜிட்டல் சதுரங்க வேட்டை; டெல்லியில் இருந்து வரும் ஆர்டர்; நிறைவேற்றும் தமிழக கும்பல் பகுதி – 17 

Published on 17/04/2023 | Edited on 17/04/2023

 

digital-cheating-part-17

 

இந்தியாவில் ஜார்கண்ட், மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களில் டிஜிட்டல் மோசடி குழுக்கள் இயங்கி வந்த நிலையில் தற்போது அது தமிழ்நாட்டின் கோயம்புத்தூரிலும் கண்டறியப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சைபர் குற்றங்களில் பெயர் பெற்றதும், நாம் முந்தைய பகுதிகளில் கண்டதுமான ஜார்கண்ட்  மாநிலத்தின் ஜம்தாரா போல் கோயம்புத்தூரிலுமா என அந்த சம்பவம்  தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியது. 

 

சிவகங்கை மாவட்டத்திலுள்ள காவல் நிலையங்களுக்கு அடிக்கடி யாராவது ஒருவர் வந்து ‘என் வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருடு போயுள்ளது’ என புகார் தந்தபடி இருந்தனர். அந்தப் புகார்கள் எல்லாம் சைபர் குற்ற தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது. கடந்த 2022 ஆம் ஆண்டு மாவட்டத்தில் பெறப்பட்ட 14 புகார்கள் மீது சி.எஸ்.ஆர் பதிவு செய்யப்பட்டன. 2023 ஜனவரி முதல் பிப்ரவரி வரை 11 புகார்கள் மீது சி.எஸ்.ஆர் போடப்பட்டன. பதிவு செய்யப்படாத புகார்கள் பல இருந்தன.  

 

டிஜிட்டல் சதுரங்கவேட்டை;  இந்தியாவுக்கு ஆன்லைன் மோசடியை அறிமுகப்படுத்தியவர்! பகுதி – 16



2023 பிப்ரவரி மாதம் சிவகங்கையைச் சேர்ந்த முத்துக்கருப்பன் என்பவர் காவல் நிலையத்திற்கு சென்று, ‘எனது மொபைல் எண்ணுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது. அதில் எனது ஏ.டி.எம் கார்டு முடக்கப்படவுள்ளது. உடனே கீழ்கண்ட லிங்க்கை ஓப்பன் செய்து பான் எண்ணை பதிவிடவும் என இருந்தது. அது தமிழ்நாடு எண்ணாக இருந்ததால் நானும் நம்பி லிங்க்கை ஓப்பன் செய்து பான்கார்டு எண்ணை பதிவு செய்தேன். அடுத்ததாக அதிலிருந்த காலத்தில் வங்கியின் ஆன்லைன் யூசர் நேம், கடவுச்சொல் ( பாஸ்வேட்), மொபைல் எண்ணை கேட்டிருந்தார்கள்; அதையும் பதிவு செய்தேன். அதை பதிவு செய்ததும் ஒரு ஓ.டி.பி வந்தது, அதனை அந்த லிங்க்கிலேயே பதிவு செய்தோம்,. நன்றி என பதில் மெசேஜ் வந்தது. நானும் அப்படியே விட்டுவிட்டேன். சில மணி நேரத்துக்குப் பின்னர் எனது வங்கிக் கணக்கில் இருந்து 99,887 ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது’ என புகார் தந்தார். 

 

புகாரை வாங்கிய சிவகங்கை சைபர் பிரிவு போலீசார், முத்துக்கருப்பன் மொபைல் எண்ணுக்கு வந்த எஸ்.எம்.எஸ், எந்த எண்ணில் இருந்து வந்தது எனப் பார்த்தனர். அந்த எண்ணை தொடர்பு கொண்டபோது சுவிச் ஆஃப் என வந்தது. அந்த எண்ணை ட்ராக் செய்தபோது, சிம்கார்டு பயன்பாட்டில் இல்லாமல் இருந்தது. அந்த சிம் பயன்படுத்திய மொபைலின் ஐ.எம்.இ.ஐ எண்ணை எடுத்து, அதில் இப்போது என்ன சிம் பயன்படுத்தப்படுகிறது எனப் பார்த்தனர். அதில் வேறு ஒரு கம்பெனியின் சிம்கார்டு இருந்தது. அந்த கான்டாக்ட் எண்ணை எடுத்தனர். அந்த ஐ.எம்.இ.ஐ எண்ணை ஆராய்ந்தபோது அந்த மொபைலில் ஒரே நாளில் 40 சிம் கார்டு மாற்றப்பட்டிருப்பது தெரிந்து அதிர்ச்சியாகினர். அப்படி மாற்றப்பட்ட சிம்கார்டு எண்களை தனியே எடுத்து வைத்துக்கொண்டனர். 

 

டிஜிட்டல் சதுரங்க வேட்டை: ‘மே பேகுனா சாப்’ - டெக்னாலஜியில் மிரட்டும் வடமாநில கும்பல்!

 

இப்போது அந்த மொபைல் எங்குள்ளது என ஆராய்ந்தபோது, டவர் லொக்கேஷன் கோயம்புத்தூர் மாநகரம் எனக் காட்டியது. அந்த மொபைலில் நெட் கனெக்‌ஷன் இருந்தது. அது ஆன் ஆனதும் அந்த மொபைலில் பயன்படுத்தும் இமெயில் முகவரியை ட்ராக் செய்து அதனையும் ஆய்வு செய்தனர். 

 

டெக்னிக்கலான ஆவணங்களை தயார் செய்துகொண்டு சிவகங்கையில் இருந்து கோவைக்கு தனிப்படை சென்றது. கோவை மாநகர காவல்துறையின் சைபர் டீம், சம்மந்தப்பட்ட ஏரியா காவல்நிலையம், குற்றப்பிரிவு போலீசாருடன் இணைந்து களத்தில் இறங்கியது சிவகங்கை போலீஸ் டீம்.   கோவை பீளமேட்டில் சிக்கா மார்க்கெட்டிங் என்கிற பெயரில் ஒரு அலுவலகம் செயல்படுவதை கண்டறிந்தனர். 

 

டிஜிட்டல் சதுரங்க வேட்டை: 20 வயது இளைஞர் திருடிய 10 கோடி ரூபாய்! பகுதி – 14

 

வெளியே சிம்பளாக இருந்த அந்த அலுவலகத்தின் உள்ளே நுழைந்து பார்த்தபோது மாடர்னாக நன்றாக இருந்தது. உள்ளே 19க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்கள், 11 லேப்டாப்கள், டேபிள்கள் இருந்தன. கம்ப்யூட்டர்களில் பெண்கள் மும்முரமாக வேலை செய்துகொண்டு இருந்தனர். அந்த அலுவலகத்துக்குள் நுழைந்தவர்கள் உள்பக்கமாக பூட்டிவிட்டு தீவிர சோதனையில் ஈடுப்பட்டனர். உள்ளிருந்து 292 செல்போன்கள், 22,735 சிம் கார்டுகள், 24 மோடம், 9 ஏ.டி.எம் கார்டுகள், 9 செக்புக் போன்றவற்றை கைப்பற்றினர். இந்த சென்டரை கோவையைச் சேர்ந்த சரவணன் அவரது மனைவி பாரதி ஆகிய இருவரும் நடத்தி வந்தனர். 

 

இந்த சென்டரில் 10 பெண்கள் வேலை செய்துள்ளனர். இவர்களின் வேலையே  ஒவ்வொருவரும் தினமும் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் எஸ்.எம்.எஸ்களை அவர்கள் தரும் மொபைல் எண்ணுக்கு அனுப்ப வேண்டும். நம்பர் அனுப்புவது மட்டுமே இவர்களது வேலை. சரவணன், பாரதிக்கு நாச்சியார்பாளையம் ராம்குமார், காரமடை வினோத்குமார், கோவை சானாவாஸ், உமர்முகமது, பரத்பாலாஜி, திருச்சி ஜெயராம், தூத்துக்குடி மாரீஸ்வரன், பொள்ளாச்சி சந்தோஷ்குமார், தென்காசி மூர்த்தி போன்ற சிம்கார்டு கம்பெனியின் ஏஜென்ட்கள் விதிமுறைகளை மீறி மொத்தமாக சிம்கார்டுகளை தந்துள்ளனர். இதற்கு இவர்களுக்கு பல்லாயிரம் ரூபாய் கைமாறியுள்ளது.

 

டிஜிட்டல் சதுரங்க வேட்டை; முதலமைச்சரின் மனைவியை ஏமாற்றிய நபர்! பகுதி 13

 

சிம் கார்டு வாங்க ஐடி கார்டு, ஆதார் கார்டு எப்படி கிடைத்தது என்பதை அடுத்த பகுதியில் படிக்கலாம். இந்த விவகாரத்தில் இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.  தினமும் 3 லட்சம் எஸ்.எம்.எஸ்களை இந்த அலுவலகத்தில் இருந்து மக்களுக்கு அனுப்பியுள்ளனர். கடந்த 5 வருடங்காக இருந்த அலுவலகம் கோவையில் செயல்பட்டு வந்துள்ளது. எஸ்.எம்.எஸ் அனுப்பும் வேலையை சரவணனுக்கு தந்தது டெல்லியில் உள்ள ரஹீப் குர்ஷித் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஒரு எஸ்.எம்.எஸ்க்கு 30 காசுகள் ரஹீப் குர்ஷித் தந்ததாகக் கூறப்படுகிறது.

 

யார் அந்த ரஹீப் குர்ஷித் என விசாரித்தவர்கள், இப்போது அவனைத் தேடி வருகின்றனர். தமிழ்நாட்டில் இந்த ஓரிடத்தில் மட்டும்தான் இப்படிப்பட்ட சென்டர் உள்ளதா? அல்லது தமிழகத்தைத் தாண்டி வேறு எங்கெல்லாம் உள்ளது என விசாரணை நடத்தி வருகின்றனர். வட இந்திய ஆன்லைன் மோசடி கும்பல்கள் இந்தியா முழுவதுமே பரவியுள்ளது. இது சைபர் பிரிவு போலீசாரை கவலைகொள்ளச் செய்துள்ளது. 

 

இவர்கள் எப்படி இவ்வளவு சிம் கார்டுகளை வாங்கினார்கள்? அந்த சிம் கார்டுகளை ஆக்டிவேட் செய்வதற்கான ஆதார் அல்லது ஏதாவது ஒரு ஐடி கார்டு இவர்களுக்கு எங்கிருந்து கிடைத்தது? நாடு முழுவதும் பரவி வரும் இந்த சைபர் குற்றவாளிகள் செய்து வரும் குற்றங்கள் என்னென்ன? 


வேட்டை தொடரும்…