ஜார்கண்ட் மாநிலம், கர்மாதந்த் கிராமத்துக்கு அருகிலுள்ள கிராமம் சிந்தர்ஜோரி. இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் சீதாராம் மண்டல். இவரது தந்தை எந்த வேலைக்கும் செல்லாமல், திருட்டில் ஈடுபட்டு வந்திருக்கிறார். சீதாராம் மண்டல், தனக்கு ஏற்ற இடம் இந்த ஊரல்ல என 2010ஆம் ஆண்டு வேலைக்காக மும்பைக்கு சென்றார். பத்தாவது வரை படித்திருந்த அவருக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. வந்தவருக்கு ஏதாவது வேலை தரும் மும்பை தாராவியின் சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த ஹோட்டலில் டேபிள் சுத்தம் செய்யும் பையனாக வேலைக்கு சேர்ந்தார்.
அங்கு டேபிள் துடைத்து, பாத்திரங்களை கழுவ வேண்டும். இந்த வேலைக்கு மூன்று வேளை சாப்பாடு மட்டும் போடுவார்கள், அவ்வளவே. இரவெல்லாம் கண் விழித்து வேலை செய்வார். விடியற்காலையில் ரயில்வே ப்ளாட்பார்மில் படுத்து உறங்குவார். சம்பளம் இல்லாத வேலையை எவ்வளவு நாளைக்குதான் செய்வது என யோசிக்க தொடங்கினார். எந்த வேலையாக இருந்தாலும் ஒருமுறை சொன்னால் கப்பென பிடித்துக்கொள்வார் சீதாராம். அந்த வேலையை இன்னும் எப்படி தெளிவாக, நன்றாக செய்வது என யோசித்து செய்வார்.
ஹோட்டலில் அப்படித்தான் சுத்தம் செய்யும் வேலை மட்டுமல்ல சப்ளை, மாஸ்டர் வேலையை வேகமாக கற்றுக்கொண்டார். கத்துக்கொண்டாலும் அவருக்கு தள்ளுவண்டியில் ஹோட்டல் வைக்கும் ஆசையில்லை. அதனால் அடுத்த வேலையை தேடத்துவங்கினார். கம்மி சம்பளத்துக்கு வேலைக்கு வருகிறேன் எனச்சொன்னால் எந்த முதலாளிக்குதான் கசக்கும். ஹோட்டலில் இருந்து மொபைல் ரீசார்ஜ் கடையில் வேலைக்கு சேர்ந்தார். மொபைல் போன் பிரபலமாகியிருந்த காலக்கட்டம். மக்கள் மத்தியில் மொபைல் பரவலாக தொடங்கியிருந்தது. ஆளாளுக்கு மொபைல் வாங்கினார்கள், சிம்கார்டு போட்டார்கள், ரீசார்ஜ் செய்ய துவங்கினார்கள். இதனால் ரீசார்ஜ் கடைகள் தெருவுக்கு தெரு அதிகரிக்க துவங்கின. பணமே இல்லாமல் எப்படி மொபைல் ரீசார்ஜ் செய்வது என்பதை மொபைல் ஷாப்பில் கற்றுக்கொண்டார் சீதாராம்.
இப்போதுதான் மொபைல் ஆப் வழியாக ரீசார்ஜ் செய்வது, ஆன்லைன் வழியாக ரீசார்ஜ் செய்வது போன்றவை. அப்போதெல்லாம் ரீசார்ஜ் கூப்பன் இருக்கும். 10 ரூபாய், 50 ரூபாய், 100 ரூபாய், 500 ரூபாய் என இருக்கும். அதனை வாங்கி சுரண்டி அதிலுள்ள எண்களை மொபைலில் முதலில் ஸ்டார் அடுத்ததாக ஹாஷ் அடுத்ததாக எண்கள் எனப்போட்டு இறுதியில் ஹாஷ் போட்டால் ரீ சார்ஜாகிவிடும்.
கூப்பனை ஸ்க்ராச் செய்தபின் அந்த கூப்பனில் உள்ள எண்களில் நடுவிலோ அல்லது கடைசி மூன்று அல்லது நான்கு அல்லது இரண்டு இலக்க எண்களை ரேண்டமாக மாற்றிப்போட்டு ரீசார்ஜ் செய்வர், அது சிலநேரங்களில் ரீசார்ஜாகிவிடும், இது ஒரு குருட்டாம்போக்கு அதிஷ்டம் என்பார்களே, அப்படிப்பட்டது. அந்த நுணுக்கத்தை கற்றுக்கொண்டவர் 2012ல் சொந்த ஊருக்கு வந்து கற்றுக்கொண்ட வித்தை வழியாக ஊரில் இருந்து பணமே இல்லாமல் ரீசார்ஜ் செய்ய துவங்கினான். சில ஆண்டுகளில் கூப்பன்களில் உள்ள தொகை ரீசார்ஜ் ஆகவில்லை என ஏஜென்ட்களிடம் இருந்து சிம்கார்டு கம்பெனிகளுக்கு புகார்கள் சென்றன. அதனை ஆராய்ந்தபோது, கூப்பன் தமிழ்நாட்டில், ராஜஸ்தானில், மும்பையில் இருக்கும் ஏதோ ஒர நகரத்தில் இருந்தது. அந்த கூப்பனுக்கான கோட் ரீசார்ஜானது ஜார்கண்ட் மாநிலமாக இருந்தது. இது எப்படி சாத்தியம் என யோசித்தனர். ரீசார்ஜ் செய்யமுடியாத கூப்பன்களில் உள்ள எண்கள் எல்லாம் ஜார்கண்ட் மாநிலம் ஜம்தாரா மாவட்டத்திலேயே ரீசார்ஜ் செய்யப்பட்டிருந்தது. ஆனால் அவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. இதனால் கூப்பன் சிஸ்டத்தில் நம்பர்களோடு ஆங்கில எழுத்துக்களை சேர்க்கத் துவங்கியது. இவரும் தனது திட்டத்தை மாற்றினார்.
ரேண்டமாக மொபைல் எண்களுக்கு ஃபோன் செய்து எதிரில் பேசுபவர்களிடம் ஏதாவது ஒரு தனியார் வங்கி பெயரை சொல்லி அதன் நோடல் அதிகாரி பேசுகிறேன், லோன் வேண்டுமா எனக்கேட்பார். அவர்களின் வருமானம் குறித்து அறிந்துக்கொள்வார், அவர்களுக்கு எந்த வங்கியில் அக்கவுண்ட் உள்ளது எனக்கேட்பார், பேச்சில் அப்பாவித்தனம் தெரிந்தால் அவர்களே அவரது முதல் குறி. அந்த நம்பருக்கு மற்றொருநாள் வேறு எண்ணில் இருந்து பேசுவார். வங்கியில் இருந்து பேசறோம் உங்க ஏ.டி.எம் கார்டு லாக்காகிவிட்டது, அதை ஆக்டிவேட் செய்யனும்னா கார்டு மேல இருக்கற நம்பர் சொல்லு என ஆரம்பிப்பார். நம்பர் சொல்ல துவங்கியதும் அருகில் மற்றொருவன் அமர்ந்துக்கொண்டு மற்றொரு போனில் அல்லது லேப்டாப் வழியாக, பொருட்கள் விற்பனை செய்யும் இணையதளங்களில் பொருட்களை செலக்ட் செய்துவிட்டு பேமெண்ட் ஆப்ஷனில் தயாராக இருப்பார். கார்டு மேல் உள்ள நம்பர்களை சொல்லச்சொல்ல அந்த இன்னொருவர் டைப் செய்வார். ஓடிபி அனுப்பப்பட்டதும் அதை சம்மந்தப்பட்டவர் சொன்னதும் அதனை உள்ளீடு செய்து பொருட்களை வாங்கிவிடுவார்கள். நம்பர் சொன்ன நபர் ஏமாந்துவிடுவார் பணம் போய்விடும். ட்ரான்ஷக்சன் சக்ஸஸ் ஆனதும் அந்த மொபைல் எண்ணை தூங்கி எரிந்துவிடுவார்.
ஆயிரம், ஆயிரமாக சில நேரங்களில் லட்சங்களில் சம்பாதிக்க துவங்கியதும் தன்னோடு மட்டும் அதை நிறுத்திக்கொள்ளாமல் தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதைப் போல தன் கிராமத்தினருக்கு கற்றுத்தரத் துவங்கினார். ஆண் – பெண் வித்தியாசம் கிடையாது. அவரிடம் கற்றவர்கள் மொபைல் வழியாக இரண்டாயிரம் கிலோ மீட்டர்களுக்கு அப்பால் உள்ளவர்களையும் ஏமாற்ற துவங்கினார்கள்.
2015க்கு பிறகு நிலைமை மாறியது. ஆன்ட்ராய்ட் போன்களின் வருகை, ஆன்லைன் வங்கி சேவைகள், ஆர்குட், பேஸ்புக், வாட்ஸ்அப் என புதிய புதிய செயலிகள் வரவர அதன்வழியாக எப்படி ஏமாற்றுவது என்பதை கண்டறிந்தனர். முகநூலில் உங்களின் ஐடியைப்போலவை, போலியாக ஒரு ஐடியை உருவாக்கி, நண்பர்களுக்கு ப்ரண்ட் ரெக்வெஸ்ட் அனுப்பி அவர்கள் அசெப்ட் செய்ததும், அவசரமா ஊருக்கு வந்தேன், மொபைல் சுவிச் ஆப் ஆகிடுச்சி. பர்ஸ்ல பணமில்ல, கூகுள் பே எங்கயும் செய்ய முடியல. அவசரமா இந்த நம்பருக்கு 10 ஆயிரம் அனுப்ப முடியுமா?, 15 ஆயிரம் அனுப்ப முடியுமா என முகநூல் மெசஞ்ஜரில் மெசேஜ் அனுப்புவார்கள். இதில் பல நூறுப்பேர் தமிழ்நாட்டிலேயே தொடக்கத்தில் ஏமாந்துள்ளார்கள். இப்படி இந்தியா முழுவதும் ஏமாற்றியுள்ளார்கள்.
இந்த கிராமம் மற்றும் சுற்றிலும் உள்ள பல கிராமங்களைச் சேர்ந்த ஓரளவு அதாவது 10வது படித்த இளைஞர்கள் மும்பை, டெல்லி, கொல்கத்தா போன்ற முக்கிய நகரங்களுக்கு சென்று டூப்ளிக்கெட் சிம் உருவாக்குதல், இன்டர்நெட் கஃபேக்கள், சாப்ட்வேர் சில்லுகள் மாற்றித் தந்து பணம் சம்பாதித்தனர். சிலர் அங்கேயே கால்சென்டர்களை தொடங்கி தங்கள் பகுதி இளைஞர் – இளைஞிகளை வரவைத்து, கார்டு மேலயிருக்கற நம்பரை சொல்லு என்றும், மின்னஞ்சல் அனுப்பி ஏமாற்றுவதையும் செய்யத் துவங்கினர். சில இளைஞர்கள் தங்களது கிராமத்துக்கு வந்து கால்சென்டர்களை உருவாக்கினர். படிப்படியாக, ஆன்லைன் மோசடி குழுக்கள் பல உருவாகின.
இப்போது ஜம்தாராவைத் தவிர தியோகர், கிரிதி, தன்பாத் மற்றும் கோடா மாவட்டங்களில் உள்ள சுமார் 100 கிராமங்களில் பரவி உள்ளன. இந்த பகுதிகளில் உள்ள டஜன் கணக்கான சைபர் குற்றவாளிகள் டெல்லி, அகமதாபாத், கொல்கத்தா, ஜெய்ப்பூர், மும்பை மற்றும் பாட்னா போன்ற பல மெட்ரோ நகரங்களில் கால் சென்டர்களைத் திறந்துள்ளனர்.
இதற்கெல்லாம் விதைப்போட்டவர் சீதாராம் மண்டல். ஆன்லைன் வழியாக மக்களை ஏமாற்றி பணத்தை உருவுவதில் புதுப்புது டெக்னிக்குகளை உருவாக்கி அறிமுகப்படுத்திக்கொண்டே இருந்தார். போலிசிடம் மாட்டிக்கொள்ளாமல் இருக்க புதுப்புது வழிகளை கண்டுபிடித்தார். அதை மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுத்தார். இதற்காக அடிக்கடி பயிற்சி வகுப்புகளை நடத்தியுள்ளார். இதற்கு ஒவ்வொரு நபரிடமும் 50 ஆயிரம் வரை வசூல் செய்துள்ளார். பயிற்சி எடுத்துக்கொண்டபின் மோசடி செய்து சம்பாதித்தவுடன் முதல் தொகையை குருவுக்கு தந்துவிடவேண்டும் என்பது எழுதப்படாத ஒப்பந்தம் செய்துக்கொண்டு கற்று தந்தார்.
தொழில்நுட்ப அறிவை பயன்படுத்தி ஆன்லைன் வழியாக மக்களிடம் மோசடி செய்வதில் புதுப்புது வழிகளை கண்டறிந்து வெற்றிகரமாக செயல்படுத்துவதோடு அதன் மூலமாக பல கோடிகளுக்கு அதிபதியானது. அதை மற்றவர்களுக்கும் கற்று தந்ததாலே அவரை சூப்பர் ஸ்டார் என பட்டம் தந்து அழைக்கிறார்கள். அந்த பட்டத்தை பறிக்க இன்னும் யாரும் உருவாகவில்லை என்பதே அவரின் திறமை.
2020 ஆம் ஆண்டில், சீதாராம் மண்டல் டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டார். அப்போது அவரது வங்கி கணக்கில் 12 லட்ச ரூபாய் இருந்தது. மஞ்சள் வண்ணம் பூசப்பட்ட இரண்டு பங்களா வீடுகள், மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்யூவி கார் சொந்தமாக இருந்தது. அவருடன் பிறந்த இரண்டு சகோதரிகளுக்கு பல லட்ச ரூபாய் செலவு செய்து பணக்கார குடும்பத்தில் திருமணம் செய்து தந்துள்ளதை போலிஸார் கண்டுபிடித்தனர். அது எல்லாமே ஆன்லைன் வழியாக மக்களிடம் ஏமாற்றிய பணம். சீதாராம் நண்பனான விகாஷ் மண்டல் என்பவரையும் கைது செய்தது போலீஸ். அவனிடமிருந்து 7 ஸ்மார்ட்போன்கள், 15 சிம்கார்டுகளை மீட்டனர். அவர்களின் மொபைல் போன்களின் IMEI எண்கள், புகார்தாரர்கள் தந்த செல்போன் எண்கள் பயன்படுத்திய மொபைல் எண்களோடு பொருந்தின. சில மாதங்களுக்குப் பிறகு, ஜாமீனில் வெளிவந்தவர் மீண்டும் மற்றொரு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இவர் கைது செய்யப்பட்டதால் ஆன்லைன் மோசடிகள் குறைந்துவிட்டதா?, இவர் சிஷ்யப்பிள்ளைகள் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கில் உள்ளனர். இவர்கள் கச்சிதமாக டெக்னாலஜியை பயன்படுத்தி மோசடி செய்வது எப்படி?
வேட்டை தொடரும்…