கணவன் மீது சந்தேகப்பட்ட மனைவி பற்றிய வழக்கு குறித்து முதல் பெண் துப்பறிவாளர் மாலதி விவரிக்கிறார்.
திருமணம் ஆன ஒரு பெண்மணி என்னை பார்க்க வந்திருந்தார். அவருடைய கணவர் மேலே சந்தேகம் உள்ளதாக சொன்னார். திருமணம் ஆனவர்கள் வந்தாலே நான் அவர்களிடம் கேட்கக் கூடிய முதல் கேள்வி, அவர்களுக்கு குழந்தைகள் இருக்கிறதா என்று தான். அந்த பெண் தனக்கு மூன்று பெண் குழந்தைகள் என்று சொன்னார். என்ன பிரச்சனை என்றால், தனக்கு மூன்றுமே பெண் குழந்தைகள் என்பதால் சரியாக என்னிடம் பேசுவதில்லை என்றும், வீட்டிற்கும் அதிகமாக வருவதில்லை என்றும் சொன்னார். இவர்களது குடும்பம் நல்ல வசதியானது.
நாங்களும் அவரிடம் எல்லா தகவல்களையும் வாங்கிக்கொண்டு எங்கள் துப்பறியும் பணியை தொடங்கினோம். இவர்களது வீடு டவுனில் உள்ளது. அவருடைய கணவர் டவுன் தள்ளி பாக்டரிக்கு சென்று வீடு திரும்புபவர். அந்த பெண்மணி சொல்வதை வைத்துப் பார்த்தால், பாக்டரிக்கு சுற்றளவில் 35-40 கி.மீ தொலைவில் தான் எங்கேயோ சென்று வீட்டிற்கு திரும்ப வேண்டும். நாங்கள் அவரை பின் தொடர்ந்ததில் வேலை முடிந்து ஒரு கிராமத்திற்குச் சென்றார். அங்கு ஒரு பெரிய வீட்டிற்குச் சென்று போய் வருவதை கவனித்தோம். எதையும் உடனே முடிவு செய்யக்கூடாது என்று கூடுதல் தினங்கள் அவரை முழுதாக கண்காணித்ததில், அந்த நபர் ஒரு பெண்மணியுடனும், ஒரு ஆண் குழந்தையுடனும் குடும்பமாக வெளியே சென்றதையும், அந்த குழந்தை இவரை அப்பா என்று அழைத்ததையும் பார்த்தோம்.
அந்த கிராமத்தில் அக்கம்பக்கத்தில் விசாரித்ததில், அந்த நபர் திருமணம் ஆகி அங்கே இடம் வாங்கி வசித்து வருவதாக சொன்னது அதிர்ச்சியாக இருந்தது. அந்த பெண் தனக்கு மூன்று பெண் குழந்தைகள் என்பதால் சரியான உறவு இல்லை என்று சொன்னதையும் வைத்து பார்த்ததில் விஷயம் புரிந்தது. அந்த பெண்மணியை சந்தித்து விஷயத்தை மெதுவாக எடுத்து சொல்லி ரிப்போர்ட்டை கொடுத்தோம். அந்த பெண்மணி மிக வேதனைப்பட்டு அழுகையுடன் கேட்டுக்கொண்டார். பெண் குழந்தைகள் பண்ணாததையா ஆண் குழந்தை செய்து விடப்போகிறது. நான் எப்படி மூன்று பெண் குழந்தைகளை கரை சேர்ப்பேன் என்று.
இன்றைய தேதிக்கு கலாச்சார சீர்கேடு என்பது இயல்பான ஒன்றாகி விட்டது. ஆண் வாரிசினால் மட்டுமே குடும்பம் தழைக்கும், என்றும் ஆண் குழந்தை என்றால் தான் மதிப்பு என்றும் நிலை மாறும் வரை இந்த நிலை தொடரும் என்பது கசப்பான உண்மை.