கடிகாரத்தில் நேரம் 5 மணியை காட்டியது. 5 மணிக்கெல்லாம் இருட்டிவிட்டதே என நினைத்தால் காலநிலை அப்படி. 4 மணிக்கெல்லாம் சூரியன் மறைந்து இருள் கவ்வத் தொடங்கிவிடுகிறது. வியட்நாமில் 5 மணி என்றால் இந்தியாவில் மாலை 3.30 மணி.
நம்மை முதல் நாள் ஹோட்டலில் இறக்கிவிட்டபின் இரவு உணவுக்காக தலைநகர் ஹனாய் வீதிகளில் வலம் வந்தோம். அங்கு நாம் கண்டது, நகரத்தின் பல பகுதிகளில் பல்வேறு விதமான கடைகள், ஷாப்பிங் மால்கள் எல்லாம் 7 மணிக்கெல்லாம் மூடப்பட்டு இருந்தது. சுற்றுலாப்பயணிகள் அதிகம் புழங்கும் பகுதிகளில் மட்டும் கடைகள், தங்கும் விடுதிகள், சாலையோர உணவகங்கள் இரவு 9 மணி அதிகபட்சம் 10 மணி வரை இயங்குகின்றன. இதிலும் விரல்விட்டு எண்ணக்கூடிய உணவு கடைகள் மட்டுமே இரவு 11 மணி வரை இயங்குகின்றன.
இந்தியாவில் விதவிதமாக சாப்பிட்டு நாக்கு நளபாகத்துக்கு அடிமையானவர்கள் வியட்நாம் உணவை சாப்பிட்டால் முகம் சுருங்கிவிடும். வியட்நாமின் பிரதான உணவு ’போ’ என சொல்லப்படும் சூப். சுடச்சுட தருகிறார்கள். அதில் சைவம் என்றால் நூடூல்ஸ், நறுக்கப்பட்ட வெங்காயதண்டு, வேகவெக்கப்பட்ட முட்டைக்கோஸ் இலை, ஏதாவது ஒரு கீரையை போட்டு தருகிறார்கள். அசைவம் என்றால் நூடூல்ஸ்சுடன், எலும்பு இல்லாத வேகவைக்கப்பட்ட சிக்கன் துண்டுகளை பஞ்சுபோல் பிச்சிப்போட்டு தருகிறார்கள். பீப், பன்றிக்கறி வேண்டும் என்றாலும் கலந்து தருகிறார்கள். அவர்களின் உணவு எதிலும் உப்பு கிடையாது, காரம் கிடையாது, பெப்பர் கூட கிடையாது. சில ஹோட்டல்களில் மட்டும் பெப்பர், உப்பு தந்தார்கள். வியட்நாமிய மக்கள் பெரும்பாலும் உணவில் உப்பு, காரம் சேர்த்துக்கொள்வதில்லை. உணவில் மஞ்சள் தூள் மட்டும் போட்டு வேகவைத்த உணவை தருகிறார்கள். உணவில் காரம் வேண்டும் என்றால் பொடிசாக நறுக்கிய பச்சை மிளகாய் 4 அல்லது 5 துண்டு தருகிறார்கள் அல்லது மிளகாய்சாஸ் தருகிறார்கள்.
காலை, மதியம், இரவு மூன்று வேளையும் கட்டாயம் வியட்நாமியர்கள் போ உணவை சாப்பிடுகிறார்கள். அதற்கு தொட்டுக்கொள்ள பொரித்த நத்தை, வேகவைக்கப்பட்ட மஸ்ரூம், மீன் துண்டுகளை வாங்கிக்கொள்ளலாம். அவர்கள் தரும் உணவை அந்த இரண்டு குச்சிகளில் எடுத்து சாப்பிடுவதுதான் எங்களுக்கு சிரமமானதாக இருந்தது. அவர்களும், மேற்கத்திய சுற்றுலாப்பயணிகள் அசால்டாக அதனை பயன்படுத்துகிறார்கள். கைக்கும் வாய்க்கும் ஒரு தொடர்பு இருக்கணும்ங்க, உணவை கைகளால் பிசைந்து அதை எடுத்து நாம் வாயில் வைத்து சாப்பிடும்போதுதான் உணவு மேல் மரியாதை வரும், அது உடம்பில் ஒட்டும் என வாட்ஸ்அப் வாத்தியார்களின் மெசேஜ் எப்போதே படித்தது நினைவுக்கு வந்ததால் அவுங்க சொல்றது நியாயம்தானே என சமாதானம் செய்துக்கொண்டு நம்மவூர் ஸ்டைல்க்கே மாறிவிட்டேன்.
அசைவத்தில் சிக்கன், கடல் உணவுகள், பீப், பன்றிக்கறி பிரதானமாக உள்ளது. மட்டன் எனச்சொல்கிறார்கள் அது ஆட்டுக்கறி இல்லை. பன்றிக்கறி. சாப்பிட்டு பழக்கம் இல்லாததால் தினமும் சிக்கன், கடல் உணவையே சாப்பிட்டுக்கொண்டு இருந்தோம். அதிலும் எண்ணெய்யில் பொறித்த குட்டி ஆக்டோபஸ் அவ்வளவு அற்புதமாக இருந்தது.
ஹோட்டல்களில் மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் என்கிற பெயரில் மரவள்ளி கிழங்கில் செய்யப்பட்ட வடை, வேகவைத்து வறுக்கப்பட்ட உருளைக்கிழங்கு சிப்ஸ், வெங்காய போண்டா அற்புதமாக செய்து தந்தனர். உப்பு இல்லாத பண்டம் குப்பைக்கு என்பது நம்மவூர் பழமொழி. அங்கே உப்புயில்லாத பண்டம் வயிற்றுக்கு என்கிறார்கள். உப்புதான் இல்லை. ஆனால் அவ்வளவு அற்புதமாக இருந்தது.
வியட்நாம் உணவு பழிவாங்கிவிடுமோ என நினைத்திருந்தோம். முதல் இரண்டு நாள் வியட்நாம் உணவுகளை ஏற்றுக்கொள்ள நாக்கு அடம்பிடித்தது. அதன்பின் அதன் சுவைக்கு பழக்கமாகி அங்கிருந்த 14 நாட்களும் உடம்பை எதுவும் செய்யவில்லை.
வெள்ளை சோறு வியட்நாமில் எல்லா ஹோட்டல்களிலும் தருகிறார்கள். நம்மவூரில் சாப்பாடு என்றால் அதனோடு சாம்பார், காரக்குழம்பு, மோர்க்குழம்பு, ரசம், மோர், பொறியல், கூட்டு என வகைவகையாக தருவார்கள். அங்கே அதெல்லாம் கிடையாது, அரைவேக்காட்டில் வேகவைக்கப்பட்ட கத்தரிக்காய், வெங்காயம், புதினா வைத்து அதன்மேல் எண்ணெய்யில் பொறிக்கப்ட்ட சிறியதாக கட் செய்யப்பட்ட வெங்காய தாள்களை தூவி சாஸ் ஊத்தி தனியாக ஒரு பிளேட்டில் தந்தார்கள். சாதத்தோடு இதனைத்தான் கலந்து சாப்பிடவேண்டும். தொட்டுக்க மரவள்ளிக்கிழங்கு வடை தருகிறார்கள்.
வெள்ளை சாதமே சர்க்கரை பொங்கல் போல் லேசாக தித்திப்பாக இருந்தது. காலை, இரவு நேரத்தில் ப்ரைட்ரைஸ் கண்டிப்பாக இருக்கிறது. சிக்கன் ரைஸ், பீப் ரைஸ், வெஜிடபிள் ப்ரைட்ரைஸ் தருகிறார்கள். முட்டை அங்கே வெஜ் கேட்டகரியில் வைத்துள்ளார்கள். ஒரு ஆம்லேட் என்றால் இரண்டு முட்டை ஊத்தி செய்கிறார்கள்.
உலகளவில் சாலையோர உணவகங்களில் புகழ்பெற்றது வியட்நாம். வியட்நாம் நாட்டில் தலைநகரம் ஹனாய், ஹோசிமின், அலாங் பே போன்ற எந்த நகரமாக இருந்தாலும், சிற்றூராக இருந்தாலும் நடந்துபோகும்போது தடுக்கி விழுந்தால் சாலையோர உணவகங்கள் மேல்தான் விழவேண்டும். அந்தளவுக்கு சாலையோரங்களில் உணவகங்கள் உள்ளன. 80 சதவித சாலையோர உணவகங்கள் அசைவம். 20 சதவிதம் அளவுக்கே சைவ உணவகங்கள்.
வியட்நாம் மக்கள் பெரும்பாலும் இந்த சாலையோர உணவகங்களிலேயே உணவு சாப்பிடுகின்றனர். வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் இருந்து வரும் பயணிகள் ஆர்வமாக இங்கே சாப்பிடுகின்றனர். அந்தளவுக்கு சாலையோர உணவகங்கள் தூய்மையாக இருந்தன. சாலையோர ஹோட்டல்களில் குறைந்த விலை, தரமான உணவாக இருக்கிறது. பெரிய ஹோட்டல்களில் அதிகவிலை, அதே தரத்திலான உணவு கிடைக்கிறது.
ஆயிரக்கணக்கான சிறிய, பெரிய உணவகங்கள் இருந்தாலும் உணவு பொருட்களின் விலை நம்மவூரைவிட அதிகமாகவே இருக்கிறது. சாலையோர உணவு விடுதியாக இருந்தாலும், ஓரளவு பெரிய உணவு விடுதியாக இருந்தாலும் விலை கிட்டதட்ட ஒரே விலையாகத்தான் இருந்தது. கொஞ்சம் தான் வித்தியாசப்படுகிறது.
நம்மவூர் சாப்பாட்டத்தை தான் சாப்பிடனும் என விரும்பி இந்திய ரெஸ்டாரெண்ட்டுக்குள் சென்றால் அங்கே கிடைப்பது நார்த் இந்தியா உணவுகள் தான். தென்னிந்திய உணவுகள் 99 சதவிதம் நாட்டின் எந்த பகுதியிலும் கிடைப்பதில்லை.
இங்குள்ள ஹோட்டல்களில் உள்ள ஒரே ஒற்றுமை குடிக்க தண்ணீர் வைப்பதில்லை. 300 மில்லி லிட்டர் குடிதண்ணீர் பாட்டிலின் விலை நம்மவூர் மதிப்புக்கு 80 ரூபாய் வருகிறது. கம்பெனிக்கு தகுந்தார்போல் விலையும் மாறுகிறது. சாப்பிடும்போது விக்கல் எடுத்தால் என்ன செய்வது? அதற்கு இதை குடிங்க என நம் கையில் திணிப்பதை பார்த்து அதிர்ச்சியாக இருந்தது.
பயணங்கள் தொடரும்…………..