Skip to main content

மாத்திரை போட்ட கணவன்; நடத்தையில் வித்தியாசம் கண்ட மனைவி - வழக்கறிஞர் சாந்தகுமாரியின் வழக்கு எண்: 75

Published on 30/08/2024 | Edited on 30/08/2024
advocate santhakumaris valakku en 75

குடும்ப நல வழக்குகள் பலவற்றை கையாண்டது குறித்த அனுபவங்களை ‘வழக்கு எண்’ என்ற தொடரின் வழியே தொடர்ச்சியாக வழக்கறிஞர் சாந்தகுமாரி பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் ஒரு வழக்கைப் பற்றி இன்று பார்ப்போம்.

ரித்திகா என்ற பெண்ணுடைய வழக்கு இது. நன்றாக படித்த இவருடைய அப்பா ஆடிட்டராக வேலை பார்த்து வந்துள்ளார். கன்னட மேட்ரிமோனியில் இருந்து ரித்திகாவுக்கு ஒரு வரன் வருகிறது. யு.கேவில் வேலை பார்க்கும் அந்த பையனுக்கும், ரித்திகாவுக்கும் பொருத்தமாக இருந்தததால், இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. ரித்திகாவுக்கு 50 பவுனுக்கு மேல் நகையும், பையனுக்கு 2 லட்ச ரூபாயும், ஒரு பிரேஸ்லட்டும் பெண் வீட்டிலிருந்து போட்டார்கள். பையனுக்கு வெளிநாட்டில் இருந்து வேலை செய்வதற்கான வாய்ப்புகள் வருவதால் பெண், அவனோடு போக வேண்டும் என்று பையன் வீட்டார் கண்டிசன் போடுகிறார்கள். பெண்ணுக்கும் வெளிநாட்டில் வேலை செய்வதற்கான வாய்ப்பு வரும் என்பதால் யாருக்கு முதலில் வெளிநாட்டில் வேலை கிடைக்கிறதோ அவரோடு போக வேண்டும் என்ற அக்ரிமெண்டில் திருமணம் நடைபெறுகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ரித்திகா வீட்டில் ஒரு ரிசப்ஷனும், கர்நாடகாவில் ஒரு ரிசப்ஷனும் நடைபெற்றது. 

பையன் கொஞ்சம் வித்தியாசமாக இருப்பதாக திருமணம் நடைபெற்ற சில நாட்கள் கழித்து ரித்திகா உணர்கிறார். கணவர் பேச வேண்டும் என்று நினைக்கும் போது தான் சில வார்த்தைகள் பேசுவார், மற்றபடி அதிகம் பேச மாட்டார் என்று ரித்திகா தன் அம்மாவிடம் கூறுகிறார். இரவு நேரத்தில், கணவர் அவருடைய அம்மா அறைக்கு சென்ற பின் சில நிமிடங்கள் கழித்து தான் தன்னுடைய அறைக்கு வருகிறார். தொடர்ந்து இது போல் நடந்ததால் இது பற்றி ரித்திகா தனது கணவரிடம் கேட்க அவரும் ஏதோ ஒன்றை சொல்லி சமாளித்திருக்கிறார். சில நாட்கள் கழித்து கணவர், மாத்திரை சாப்பிட்டிருப்பதை உணர்ந்து ரித்திகா இது பற்றி கேட்க, மீண்டும் சமாளித்திருக்கிறார். என்ன மாத்திரை சாப்பிட்டிருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க, மாத்திரையின் கவரை டஸ்ட் பின்னிலிருந்து எடுத்து தன் அப்பாவிடம் கொடுத்து நடந்தவற்றையெல்லாம் சொல்கிறார்.

ரித்திகாவினுடைய அப்பாவும், அந்த மாத்திரையின் கவரை எடுத்துக்கொண்டு மருந்தகத்துக்கு சென்று விசாரிக்கையில், சைகாட்ரிஸ்ட் கொடுக்கும் மாத்திரை எனத் தெரிந்தது. இது குறித்து மாப்பிள்ளையின் அண்ணனிடமும், அக்காவிடமும் விசாரிக்கையில், டிப்ரஷனுக்காக தான் பையன் மாத்திரை சாப்பிடுவதாகக் கூறினர். மேலும், பையனுக்கு டீரிட்மெண்ட் கொடுத்த கோயமுத்தூர் ஹாஸ்பிட்டலுக்கு ரித்திகாவினுடைய அப்பா சென்று விசாரிக்கிறார். பையனின் மாமனார் என்பதால், டாக்டரும், பையனுக்கு பைபோலார் டிஸ்ஆர்டர் இருப்பதாக கூறினார். இதனை தெரிந்துக்கொண்ட ரித்திகாவினுடைய அப்பா, தன்னுடைய வீட்டிற்கு வந்த பின், பையனுடைய அக்காவை தொடர்பு கொண்டு வீட்டுக்கு வரச் சொல்லி இது பற்றி கேட்கிறார். தன்னுடைய பெண்ணுக்கு பொய் சொல்லி திருமணம் நடத்தியுள்ளதாக அக்காவிடம் கேட்டு சண்டை போடுகிறார். இருப்பினும், நடந்த வரை நடந்தது என மனதை திடப்படுத்திக்கொள்கிறார். 

இதற்கிடையில், தன்னை விட படிப்பிலும், சம்பளத்திலும் மனைவி உயர்வாக இருப்பதால் அந்த வெறுப்புணர்வில் ரித்திகாவிடம் நெருக்கமாக அவனால் இருக்கமுடியவில்லை. இதனால், அவன் பழைய டிப்ரஷனில் தள்ளப்படுகிறான். தனியாக அறையில் இருக்கும் போது எல்லா பொருட்களையும் உடைப்பதும், இருவருக்குள் சண்டை வரும்போது பால்கனியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்யபோவதாக மிரட்டுவதாக பையன் இருப்பதால், ரித்திகாவுக்கு பயம் அதிகமாகி  தன்னுடைய அப்பாவிடம் கூறுகிறார். மருமகனை ஒரு சைகாட்ரிஸ்டிடம் அழைத்துச் சென்று பார்க்கையில், டிப்ரஷனால் தான் இப்படி சொல்லி மாத்திரைகளை கொடுக்கின்றனர். இந்த வேளையில், ரித்திகாவுக்கு ஆஸ்திரேலியாவில் வேலை செய்வதற்கான வாய்ப்பு வருகிறது. தனியாக அங்கு போக வேண்டும் என்று ரித்திகா ஆசைப்பட அப்பாவும் அதற்கான முயற்சிகளை கொண்டிருக்கும் வேளையில் பையன் மாமனாரோடு சண்டை போடுகிறான். அவரை சமாதானப்படுத்திய பின், ரித்திகாவும் இரண்டு மாதங்கள் ஆஸ்திரேலியாவில் இருக்கிறார். இரண்டு மாதங்கள் கழித்து ஆஸ்திரேலியாவிலே வேலை செய்ய வாய்ப்பு வருவதால், பையனும் ஆஸ்திரேலியாவுக்கு போக வேண்டும் என்று பையன் ஆசைபட, அதையும் ரித்திகாவினுடைய செய்கிறார். 

அங்கு சென்ற ரித்திகா, நாள் முழுவதும் வேலை பார்ப்பதால், ஆஸ்திரேலியாவில் வீட்டிலேயே இருக்கும் பையனுக்கு இருப்புக்கொள்ளவில்லை. இதனால், ரித்திகாவின் நடத்தை மீது சந்தேகப்பட்டு பையன் அடிக்கடி சண்டை போடுகிறான். குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை, சமையல் செய்யவில்லை என ரித்திகா மீது குறைக்கூறிக்கொண்டே இருக்கின்றான். இப்படி தொடர்ச்சியாக சண்டை வந்த பின், ஒரு நாளில் பால்கனியில் இறங்கி தொங்கிக்கொண்டே குதிக்கப்போவதாக ரித்திகாவை மிரட்டுகிறான். உடனே ரித்திகா எமர்ஜென்ஸிக்கு போன் செய்த பின் ஆம்புலன்ஸ் அங்கு வந்து அவனை மீட்டு ஹாஸ்பிட்டலுக்கு அனுமதிக்கிறார்கள். ஏறத்தாழ அந்த ஹாஸ்பிட்டலில் 11 நாட்கள் இருக்கிறார். இதுபற்றி தன்னுடைய அப்பாவிடம் சொன்ன பின்னால், அவரும் உடனடியாக ஆஸ்திரேலியாவுக்கு சென்றுவிடுகிறார். அங்கு ஒரு சைகாட்ரிஸ்டிடம் அந்த பையனை காட்டி 2 மாதங்கள் வரை டீரிட்மெண்ட் எடுத்து அவரை ஓரளவுக்கு சரிசெய்த பின்னால், அவர்கள் இரண்டு பேரையும் கூட்டிக்கொண்டு இந்தியாவுக்கு வந்து பையனை அவருடைய வீட்டில் ஒப்படைக்கிறார். மேலும், ரித்திகாவும் இந்தியாவில் இருந்து அந்த வேலையை பார்க்குமாறு ஆஸ்திரேலியா நிறுவனம் அனுமதித்தது.

இந்த நிலையில், தான் ரித்திகாவும் அவருடைய அப்பாவும் என்னிடம் வந்து விஷயத்தை சொன்னார்கள். டைவர்ஸ் வேண்டும் என்ற கேட்ட பின்னால், நாங்கள் டைவர்ஸ் கேஸ் போட்டோம். தனக்கு இருக்கும் டிஸ்ஆர்டரை மறைத்து திருமணம் செய்ததால் இந்த திருமணம் செல்லாது என கேஸ் போட்டோம். ஆஸ்திரேலியா ஹாஸ்பிட்டலில் கொடுக்கப்பட்ட டாக்குமெண்டை வைத்தும், கோயமுத்தூர் ஹாஸ்பிட்டலில் கொடுக்கப்பட்ட டாக்குமெண்டை வைத்தும் பையனை மெடிக்கல் எக்ஸாமினேஷனுக்கு அனுப்ப வேண்டும் என்று பெட்டிசன் போட்டோம். அதற்கு பையன் வீட்டில் சம்மதிக்க மறுத்த பின், மீடியேசன் போகலாம் என்று முடிவெடுத்தார்கள். இதற்கிடையில் ரித்திகாவுக்கு பிரோமோஷன் கிடைத்ததால் ஆஸ்திரேலியாவுக்கு சென்றுவிட்டார். இதனால், பெண்ணுக்கு அப்பா பவர் ஏஜெண்டாக இந்த கேஸை அப்பா நடத்தலாம் என பவர் பெட்டிசன் போட்டு கேஸை நடத்தினோம். கடைசியில் செட்டில்மெண்ட் கொடுத்து டைவர்ஸ் பெற்றுக்கொள்ளலாம் என இருவீட்டாரும் முடிவு செய்தனர். வீடு கட்ட அப்பாவும் பெண்ணும், பையனுக்கு கொடுத்த `10 லட்சத்தை கேட்க, பையன் கொடுக்க மறுத்துவிட்டான். கடைசியில் 6 லட்சம் கொடுப்பதாக ஒப்புக்கொண்ட பின்னால், மியூட்ச்சுவன் கன்செண்ட்டில் இருவருக்கும் விவகாரத்து ஆனது.