தான் சந்தித்த பல்வேறு வகையான வழக்குகள் குறித்தும் அதை நடத்திய விதம் குறித்தும் பிரபல வழக்கறிஞர் சாந்தகுமாரி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
ஜேம்ஸ் என்பவருடைய வழக்கு இது. முதல் திருமணமாகி டைவர்ஸ் ஆனவர். இரண்டாவது திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவெடுத்து சர்ச் வழியாக பெண் தேடியபோது ஒரு பெண் கிடைக்கிறாள். அவளுக்கு இது முதல் திருமணம். பெண்ணை நேரில் சந்தித்து நான் ஏற்கனவே திருமணமாகி டைவர்ஸ் ஆனவன். உனக்கு முதல் திருமணம். ஆட்சேபனை ஏதுமில்லையா என்றதற்கு இதெல்லாம் வாழ்க்கையில் சகஜம் தானே என்று சாதாரணமாக எடுத்துக் கொண்டாள் அந்த பெண்.
சர்ச் உதவியோடு இருவீட்டாரின் சம்மதத்தோடு தான் திருமணம் நடக்கிறது. ஜேம்ஸ் காலையில் வேலைக்கு போய்விட்டு இரவு வீட்டிற்கு திரும்புகிறவன். ஆனால் அந்த பெண் ஐடி நிறுவனத்தில் வெளிநாட்டு கம்பெனிக்கு வேலை செய்கிறவள். இரவு தான் வேலையே ஆரம்பிப்பாள். ஜேம்ஸ் இரவு தூங்கும் முன் கணவன், மனைவி மகிழ்ச்சியாக இருந்துவிட்டு தூங்கலாம் என்று காத்திருந்தால் வரமாட்டாள். நன்றாக தூங்கிக்கொண்டிருக்கும் விடியற்காலையில் வேலை எல்லாம் முடித்துவிட்டு வந்து மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று எழுப்புவாள். அந்த நேரத்தில் தனக்கு விருப்பமில்லை என்று ஜேம்ஸ் சொல்லிவிடுவான்.
இது ஒருபுறம் இருக்க, ஒரு நாள் அளவுக்கு அதிகமான எண்ணெய் ஊற்றி சமைத்திருக்கிறாள். வீட்டில் வயதான பெற்றோர்கள் இருக்கிறார்கள் இப்படி சமைக்காதே என்றதற்கு கோபித்துக் கொண்டு இரவில் அவளது அம்மா வீட்டிற்கு சென்றிருக்கிறாள். சின்ன கோபம் தானே திரும்பி வருவாள் என்று எதிர்பார்த்திருந்தால் காவல் நிலையத்திலிருந்து ஜேம்ஸை அழைத்திருக்கிறார்கள்.
முதல் திருமணம் நடந்தது தெரியாமல் ஏமாற்றி தன்னை திருமண மோசடி செய்ததாக புகார் கொடுத்திருக்கிறாள். வழக்கு நடந்து சர்ச்சிலிருந்து ஆதாரங்கள் திரட்டி கொடுக்கப்பட்டது. கிறித்துவ திருமணங்களில் அனைத்து ஆதாரங்களும், விவரங்களும் சர்ச்சில் ஒப்படைக்கப்பட வேண்டும். அப்படி ஒப்படைத்தது ஜேம்ஸ்க்கு உதவியாகவும் அந்த பெண்ணுக்கு பின்விளைவாகவும் ஆகிவிட்டது.
சிறிது காலம் சேர்ந்து வாழ்ந்தவள், என்னை வீட்டிலிருந்து வெளியே தள்ளி பூட்டி விடுகிறார் என்று புகார் கொடுத்திருக்கிறாள். அவசரமாக சாவியை எடுத்துக் கொண்டு ஜேம்ஸ் போனதை திரித்திருக்கிறாள். இப்படியே எதற்கெடுத்தாலும் பொய், அம்மா வீட்டிற்கு கோபித்துக் கொண்டு போவது, காவல் நிலையத்தில் புகார் கொடுப்பது என்று அந்த பெண் தொடர்ச்சியாக செய்து வந்ததால் ஜேம்ஸ் தரப்பிலிருந்து டைவர்ஸ்க்கு அப்ளை செய்தார்கள்.
மூன்று முறை அழைப்பு விடுத்தும் அந்த பெண் தரப்பு நியாயத்தை சொல்ல கோர்ட்டிற்கு வராததால் ஜேம்ஸ்க்கு டைவர்ஸ் கொடுத்து தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம். இல்லற வாழ்வில் உண்மையாகவும் நேர்மையாகவும் உறவுக்கு முக்கியத்துவம் தந்து வாழ வேண்டும்.