தன்னிடம் வந்த கொடூரமான ஒரு வழக்கு குறித்து நம்மிடம் குடும்ப நல வழக்கறிஞர் சாந்தகுமாரி விவரிக்கிறார்.
ரங்கநாயகி என்கிற பெண்ணுடைய வழக்கு இது. அழகான பெண் அவள். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த அவளுக்கு திடீரென்று திருமணம் நிச்சயமானது. வீட்டில் அவளைப் பெண் பார்க்க வந்திருந்த மாப்பிள்ளையைப் பார்த்தவுடன் அவளுக்கு அதிர்ச்சி. தெலுங்கு பட வில்லன் போல் இருந்தார் மாப்பிள்ளை. அவளுக்கு சோகத்தில் கண்ணீரே வந்துவிட்டது. மாப்பிள்ளையைத் தனக்குப் பிடிக்கவில்லை என்று அப்பாவிடம் சொன்னாள். அப்பா அவளை வழக்கம்போல் சமாதானப்படுத்தினார்.
திருமணம் நடைபெற்றது. மாமனாரும் மாமியாரும் அவளைத் தங்களுடைய மகள் போல் அன்பாகப் பார்த்துக்கொண்டனர். கணவனுக்கு செக்ஸ் மீது அதீத ஆர்வம் இருந்தது. தன்னுடைய இச்சையைத் தீர்த்துக்கொள்வதில் மட்டுமே அவன் கவனமாக இருந்தான். தினமும் அவளைத் தாம்பத்திய உறவுக்கு வற்புறுத்தினான். மாதவிலக்கு நாட்களில் கூட அவளை அவன் விடவில்லை. அவளால் தாங்க முடியவில்லை. ஒருமுறை தன்னைப் பார்க்க வந்த தன்னுடைய தாயிடம் நடந்த அனைத்தையும் கூறினாள். அவளுடைய தாய் அவளுக்கு ஆறுதல் மட்டும் கூறிச் சென்றார்.
ஒருநாள் அவளுடைய கணவன் புதிய தொலைக்காட்சி ஒன்றை வாங்கி வந்தான். பெட்ரூமில் புதிய டிவியை வைத்தான். இரவில் அந்த டிவியில் ஆபாசப் படத்தைப் போட்டு அவளையும் பார்க்கச் சொன்னான். அவள் மறுத்தாள். தினமும் இது தொடர்ந்தது. ஆபாசப் படங்களில் வருவது போல் தான் அவளோடு இருக்க வேண்டும் என்று அவன் நினைத்தான். அவளால் அதைச் சகிக்க முடியவில்லை. ஒருமுறை இயற்கைக்கு மாறான உறவு முறையில் அவன் ஈடுபட்டபோது அவளால் வலியைத் தாங்க முடியவில்லை. கட்டிலில் இருந்து அவள் எழுந்து ஓடினாள்.
இனி அவனோடு தன்னால் வாழ முடியாது என்று அவள் கிளம்பினாள். நடந்த அனைத்தையும் தன்னுடைய வீட்டில் கூறினாள். சில நாட்கள் கழித்து அவள் என்னை வந்து சந்தித்தாள். விவாகரத்து பெற வேண்டும் என்று முடிவு செய்தாள். அதற்கு அவளுடைய பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதை மீறி அவளுடைய முடிவில் அவள் உறுதியாக இருந்தாள். அவன் வந்து சமாதானம் செய்தும் அதை அவள் ஏற்கவில்லை. பெற்றோர் வற்புறுத்தியதால் மீண்டும் அவனுடைய வீட்டுக்குச் சென்ற அவளால் ஒரு வாரத்துக்கு மேல் அங்கு இருக்க முடியவில்லை. கணவன் திருந்தவில்லை. விவாகரத்து வழக்கு தொடர்ந்தோம்.
அவனை மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லப் பரிந்துரைத்தேன். அவனுக்கு இது ஒரு மனநோயாகவே இருக்கிறது என்பது பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டது. இந்தக் காரணத்தினால் விவாகரத்து பெறப்பட்டால் தன்னுடைய பெயர் கெட்டுவிடும் என்று பயந்த கணவன், தன்னுடைய பெற்றோர் மூலம் சமாதானம் பேசினான். இருவரின் சம்மதத்தோடு பிரியலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. விவாகரத்து வழங்கப்பட்டது. இப்போது ரங்கநாயகி நிம்மதியாக இருக்கிறாள். தன்னுடைய படிப்பைத் தொடர்ந்தாள். வேலைக்குச் செல்கிறாள்.
இனி தன்னுடைய வாழ்க்கையில் திருமணமே வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறாள். தன்னம்பிக்கையோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறாள். எந்தப் பிரச்சனைக்கும் இதுதான் முடிவு என்பது கிடையாது. தனக்கு எது நிம்மதியைத் தருமோ, அந்த வழியைத் தேர்ந்தெடுத்துப் பெண்கள் வாழலாம்.