தன்னுடைய வழக்கறிஞர் பணியில் தான் சந்தித்த வித்தியாசமான வழக்குகள் குறித்து நம்மோடு குடும்ப நல வழக்கறிஞர் சாந்தகுமாரி பகிர்ந்து கொள்கிறார்.
மங்கா என்கிற பெண் எங்கள் வீட்டுக்கு தொடர்ந்து பூ வழங்கி வந்தாள். திடீரென்று 10 நாட்கள் அவள் வரவில்லை. அவளுடைய வீட்டுக்குச் சென்று விசாரித்தேன். அங்கு அவளுடைய தாயும் இருந்தார். அதனால் தான் நினைத்ததை அவளால் சரியாகச் சொல்ல முடியவில்லை. அவளைத் தனியாக அழைத்துச் சென்றேன். மங்காவுடைய தாய் அவளைத் திருமணம் செய்துகொள்ளச் சொல்லி வற்புறுத்தி இருக்கிறாள். அவளுக்குப் பிடிக்காத ஒருவனைக் கணவனாகத் தேர்வு செய்தாள். தற்கொலை செய்துகொள்வேன் என்று தாய் மிரட்டியதால் திருமணத்துக்கு அவள் சம்மதித்தாள்.
திருமணத்துக்காக கோவிலுக்குச் செல்லும்போது அவளுக்கு ஜூஸ் வாங்கிக் கொடுத்தனர். அவளுக்கு லேசான மயக்கம் வந்தது. திருமணம் நடைபெற்றது. வீட்டுக்கு வந்த பிறகு அவள் மயக்கத்தில் நன்கு தூங்கினாள். மயக்கம் தெளிந்து இரவு எழுந்து பார்த்தபோது அவளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவளுடைய தாயும், கணவனும் உறவில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இவளைப் பார்த்ததும் எதுவுமே நடக்காதது போல் அவளுடைய தாய் நடித்தாள். இவளுக்கு இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை. தாயும், கணவனும் சேர்ந்து அவளை அடித்துத் துன்புறுத்தினர்.
நடந்த அனைத்தையும் என்னிடம் கூறி அவள் அழுதாள். அவளை முதலில் ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்தேன். இந்த கட்டாயத் திருமணத்தில் அவளுக்கு விருப்பம் இல்லை என்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்தோம். மங்காவின் தாயையும், கணவனையும் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்தனர். இருவரும் போலீசாரிடம் நல்லவர்கள் போல் நடித்தனர். ஆனால் அவர்களோடு செல்ல மங்கா விரும்பவில்லை. நடந்த திருமணம் செல்லாது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தோம்.
எவ்வளவு சமாதானம் சொல்லியும் அவள் ஏற்காததால் அவளுக்கு நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது. அதன் பிறகும் அவளுடைய கணவன் அவளைப் பின்தொடர்ந்தான். அவனிடமிருந்து பாதுகாப்பு வேண்டி போலீசில் புகார் கொடுத்தோம். அதன் பிறகு அவளை நான் ஒரு கடையில் வேலைக்கு சேர்த்து விட்டேன். ஒரு சுதந்திரமான பெண்ணாக இன்று அவள் வாழ்ந்து வருகிறாள்.