வெளிநாட்டு மாப்பிள்ளை என்றால் நம் மக்களுக்கு ஒரு மோகம் இருக்கத்தான் செய்கிறது. வெளிநாட்டு மாப்பிள்ளையைத் தேர்வு செய்வதில் எவ்வளவு நிறைகள் இருக்கிறதோ அதற்கேற்றவாறு பிரச்சனைகளும் இருக்கிறது என்பதை தன்னிடம் வந்த ஒரு வழக்கின் மூலம் குடும்ப நல வழக்கறிஞர் சாந்தகுமாரி விவரிக்கிறார்.
ஒருமுறை கார் டயர் பஞ்சராகி பஸ்ஸில் பயணித்த போது ரஞ்சனா என்ற பெண் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள். அவளை ஏற்கனவே எனக்குத் தெரியும். அவளுடைய கணவர் துபாயிலிருந்து வந்து விட்டாரா என்று கேட்டபோது, என்னை என்னுடைய அலுவலகத்தில் சந்திக்க வேண்டும் என்று கேட்டார். அதன்படியே என்னை அலுவலகத்தில் சந்தித்தார்.
ரஞ்சனா ஒரு மிடில் கிளாஸ் பெண். மாதச்சம்பளம் பெறுபவர். துபாயில் ஒரு மாப்பிள்ளை இருப்பதாக அவர்களுக்குத் தெரிந்தது. நல்ல வேலையில் இருப்பவர் என்று அறிந்ததும் சந்தோஷப்பட்டனர். பெண் பார்க்கும் நாளில் பார்த்தவுடனேயே இருவருக்கும் பிடித்துவிட்டது. திருமணம் முடிந்து இருவரும் மகிழ்ச்சியாகவே இருந்தனர். உன்னை அழைத்துச் செல்வதற்கான பணிகளை முடித்துவிட்டு அழைத்துக் கொள்கிறேன் என்று கூறிவிட்டு அவர் துபாய் சென்றார். அவர் செல்லும்போது அவள் கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. வீட்டில் அனைவருக்கும் மகிழ்ச்சி.
இருவரும் கடிதம் மூலம் காதலைப் பகிர்ந்துகொண்டனர். நான்கைந்து மாதங்களுக்குப் பிறகு கடிதப் போக்குவரத்து முற்றிலுமாக நின்றது. தொலைபேசியில் இவள் அவரை அழைத்தாள். அந்த நம்பர் பயன்பாட்டில் இல்லை என்பது தெரிந்தது. திருமண புரோக்கர்களும் தங்களுக்குத் தெரியாது என்று கைவிரித்தனர். தங்களுக்கு அருகில் வசிப்பவர்கள் யாராவது துபாய் சென்று வந்தால் அவர்களிடம் சென்று அவளும் அவளுடைய பெற்றோரும் மாப்பிள்ளை பற்றி விசாரிப்பார்கள். ஆனால் ஒன்றும் பலனில்லை.
தூதரகத்திலோ வெளியுறவுத்துறை அமைச்சகத்திலோ இதுகுறித்து தெரிவிக்குமாறு நண்பர்கள் யோசனை கூறினர். சிலர் அப்படிச் செய்ய வேண்டாம் என்று பயமுறுத்தினர். குழந்தையும் பிறந்தது. ஆனால், அவர் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. எட்டு வருடங்கள் கழிந்தன. மகன் ஒருமுறை பள்ளிக்குச் செல்லும்போது வண்டியில் அடிபட்டது. உடனே ரமணன் என்கிற நபர் அவனை மருத்துவமனையில் சேர்த்தார்.
ரமணன் மிகவும் நல்ல நபராக இருந்தார். அவருடைய மனைவி புற்றுநோயால் சில ஆண்டுகளுக்கு முன்புதான் இறந்திருந்தார். ரமணனோடு பேச ஆரம்பித்தாள் ரஞ்சனா. ஆனால், திருமணம் செய்துகொள்ளத் தயங்கினாள். முதல் கணவர் இன்னும் இருக்கிறாரே என்கிற எண்ணம். அவளைத் திருமணம் செய்துகொள்ளச் சொல்லி நான் நம்பிக்கையூட்டினேன். முதல் கணவர் குறித்து போலீசில் தகவல் தெரிவிக்கச் சொன்னேன். அவளும் செய்தாள். ஏழு வருடங்கள் ஒருவர் குறித்த தகவல்கள் தெரியவில்லை என்றால் சட்டப்படி அவர் இல்லை என்று கருதப்படுவார்.
அதன்படி அவளும் அந்த சான்றிதழைப் பெற்றாள். விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் முறையிட்டாள். இறுதியாக ஒரு முறை பத்திரிகையில் விளம்பரம் கொடுக்கச் சொன்னார்கள் நீதிமன்றத்தில். அப்போதும் எந்தத் தகவலும் கிடைக்காததால் அந்தப் பெண்ணுக்கு விவாகரத்து கொடுக்கப்பட்டது. அதன்பிறகு ரமணனைத் திருமணம் செய்துகொண்டு நல்ல கணவனையும், தன் குழந்தைக்கு நல்ல தகப்பனையும் அவள் பெற்றாள். அனைத்து பிரச்சனைகளுக்குமே சட்டத்தில் தீர்வு உண்டு. மனம் தளராமல் பிரச்சனைகளை எதிர்த்துப் போராட வேண்டும்.