எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான ஆறாவயல் பெரியய்யா, தாராவியில் தான் வசித்த நாட்களின் நினைவுகள் குறித்தும், தாராவி தமிழர்களின் வாழ்க்கைமுறை குறித்தும் 'தாராவி கதைகள்' என்ற தொடர் வாயிலாக நம்மோடு பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், தாராவியில் நடைபெற்ற தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்கள் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...
அந்தக்காலத்தில் நம் மக்களை தமிழர்கள் என்று சொல்லமாட்டார்கள். மதராஸி என்றுதான் அழைப்பார்கள். தாராவியில் தமிழர்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு தலைவர் என்று யாரும் கிடையாது. திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் என நிறைய அரசியல் கட்சித் தலைவர்கள் இருப்பார்கள். இங்குள்ள அரசியல் தலைவர்கள்போல அவர்கள் பெரிய அளவில் ஆதாயம் பெறவழியில்லை. தமிழ்நாட்டில் வட்டச்செயலாளராக இருப்பவர்கூட கார் வைத்திருக்கிறார். அங்கு மாநில அளவில் பொறுப்பில் உள்ளவரால்கூட கார் வாங்கமுடியாது. தாராவி பகுதியில் தமிழர்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் இவர்கள்தான் ஓடிவந்து நிற்பார்கள். மொழி காரணமாக அங்கு பெரிய அளவில் பிரச்சனை வெடித்தபோது தமிழர்களைத் தலைமையேற்று நடத்தியவர் பொன்னையா நாடார் என்ற ஒருவர்தான். அவர் அங்கு மளிகைக்கடையும் ரேஷன் கடையும் நடத்திவந்தார். புகை, மது உட்பட எந்தக் கெட்டப்பழக்கமும் கிடையாது. சாராயம் விற்பவர்களைக் கண்டாலே அவருக்குப் பிடிக்காது. மளிகைக்கடையில் இருந்து கிடைக்கும் லாபத்தின் மூலம் கண்ணியமாக வாழவேண்டுமென்று நினைக்கக்கூடியவர். எனக்குத் தெரிந்தவரையில் ஒரு ஜாதித்தலைவனாக இருந்தும் சுயஒழுக்கமிக்கவராக இருந்தவர் பொன்னையா நாடார் மட்டும்தான்.
ஒன்றல்ல, இரண்டல்ல... பல சாதிச்சங்கங்கள் இருந்தன. ஆதிதிராவிடர்களுக்காக ஆதிதிராவிட மகாஜன சங்கம், நாடார்களுக்காக தட்சணமாற நாடார் சங்கம், தேவர்களுக்காக ஒரு சங்கம், தேவேந்திரகுல வேளாளர் மக்களுக்காக ஒரு சாதி அமைப்பு, வேளாளர்களுக்காக ஒரு சாதி அமைப்பு என ஒவ்வொரு சாதியினருக்கும் ஒரு சங்கம் இருந்தது. அங்கு பல சாதி சங்கங்கள் இருந்தாலும் ஒருவருக்குள் ஒருவர் சண்டை மூட்டிவிடும் வேலையைச் செய்யவில்லை. எல்லாச் சாதி சங்கங்களும் தங்கள் சாதியினரின் கல்வி, தொழில்வாய்ப்புகளுக்கு உதவி புரிந்தன. அதேபோல ஏதாவது தீய செயல்களில் தங்கள் சாதியினர் ஈடுபட்டாலும் உடனே அழைத்து எச்சரிப்பார்கள். இத்தனை சாதி மற்றும் சங்கங்கள் இருந்தாலும் அவர்களுக்குள் சண்டை வந்ததேயில்லை. ஒரேயொருமுறை ஆதிதிராவிடர்களுக்கும் நாடார்களுக்கும் இடையே சண்டை மூள்வதற்கான சூழல் ஏற்பட்டது. இந்த இரு சாதிகளைச் சேர்ந்த இரு சாராய வியாபாரிகளின் தனிப்பட்ட பகை சாதிய மோதலாக வெடிக்கவிருந்தது. அதற்குள் இரு சாதி சங்கங்களும் தலையிட்டு, 'இவனுக சாராயம் விக்க எதுக்கு சாதியை இழுக்குறானுக' என முடிவெடுத்து இருவரையும் அந்தந்த சாதி சங்கங்களில் இருந்து நீக்கி, அந்தப் பிரச்சனையைச் சுமூகமாக முடித்தனர்.
ஒரு கட்டத்தில் மொழி ரீதியான பிரச்சனை அங்கு வெடிக்க ஆரம்பிக்கிறது. தமிழர்கள் இருவரை மராட்டியர்கள் வெட்டிக்கொலை செய்துவிடுகின்றனர். தமிழர்களுக்கு எதிரான இந்த வன்முறையை எதிர்கொள்ள வேண்டுமென்றால் நாம் அனைவரும் ஓர் அணியில் திரள வேண்டும் என முடிவெடுத்த பொன்னையா நாடார், அனைத்து சாதி சங்கத்தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களிடம் பேசி ஓர் அமைப்பை உருவாக்குகிறார். 'இனி ஒரு தமிழனின் உயிர்போனால் பத்து பேரின் உயிரை எடுக்க நான் தயாராக இருக்கிறேன்' என பகிரங்கமாகப் பொன்னையா நாடார் அறிவித்தார். சிவசேனா கட்சியினர் தாராவி பகுதியில் ஆயிரம் பேருடன் திரளான ஊர்வலம் ஒன்றை நடத்தி அந்த இடத்தைவிட்டு தமிழர்களே வெளியேற்றும்படி அவர்களுக்குப் பயங்காட்ட வேண்டும் எனத் திட்டமிடுகின்றனர். அதற்காக அனுமதிகோரி கமிஷனர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தனர்.
ஆனால், சிவசேனா கட்சியினர் தாராவி பகுதியில் எந்தக் காரணங்கொண்டும் நுழையக்கூடாது எனக் கூறி கமிஷனர் அனுமதி மறுத்துவிடுகிறார். அவர்கள் உழைத்துச் சம்பாதித்து ஓர் ஓரத்தில் வாழ்கிறார்கள், அவர்களை ஏன் தொல்லை செய்கிறீர்கள் எனக் கமிஷனர் கேட்டுள்ளார். இதையெல்லாம் காதில் வாங்காத சிவசேனா கட்சியினர் அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது... ஊர்வலம் நடத்த அனுமதி வேண்டும்... ஊர்வலத்திற்குப் பாதுகாப்புக் கொடுக்க எத்தனை வாகனம் வேண்டும் எனக் கேட்டுள்ளனர். உடனே அந்த கமிஷனர், வாகனம் எல்லாம் அனுப்பமுடியாது; வேண்டுமென்றால் 50 ஆம்புலன்ஸ் அனுப்புகிறோம். எப்படியும் நீங்கள் அவர்கள் கடையை உடைக்க ஆரம்பித்ததும் அவர்களுக்கு இருக்கிற கோபத்திற்கு உங்கள் கை, கால்களை வெட்டி எறிய ஆரம்பித்துவிடுவார்கள் எனக் கூறியுள்ளார். நீங்கள் ஊர்வலம் நடத்துங்கள்; நாங்கள் ஆம்புலன்ஸ் அனுப்புகிறோம் எனக் கமிஷனர் கூறியவுடன் ஊர்வலத்தை ரத்துசெய்துவிட்டார்கள்.
அந்த சமயத்தில் பாந்த்ரா, மாடுங்கா பகுதிகளில் யாராவது வேட்டி கட்டியிருப்பதைப் பார்த்தால் அடிக்க ஆரம்பித்துவிடுவார்கள். அந்த சமயத்தில் மராட்டிய கவர்னராக இருந்த சி.சுப்ரமணியம் என்ற தமிழரிடம் பொன்னையா நாடார் உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் தமிழர்களுக்கு எதிரான வன்முறை குறித்து முறையிட்டுள்ளனர். அவர், 'பொழைக்கத்தான வந்திருக்கீங்க... வாலச்சுருட்டிக்கிட்டு இருங்க' எனக் கூறியுள்ளார். இதைக் கேட்ட அந்த தலைவர்களுக்கெல்லாம் பெரிய அதிர்ச்சி. அந்த அதிர்ச்சியோடு கிளம்பிவந்துவிட்டனர்.
தாராவி பகுதியில் வசித்த சில தமிழர்கள் அதிகாரி அளவிலான நல்ல பொறுப்பில் இருந்தார்கள். அவர்கள் வேலை பார்க்கும் இடத்தில் தாராவியில் தான் வசிப்பதாகக் கட்டிக்கொள்ள மாட்டார்கள். தங்களை மற்றவர்கள் இழிவாகப் பார்ப்பார்கள் என எண்ணி வேறு பகுதிகளில் வசிப்பதாக மாற்றிக்கூறுவார்கள். ஆனால், முதல் மொழிக்கலவரத்திற்கு பிறகு நாம் அனைவரும் தமிழர்கள் என்ற எண்ணம் அவர்களுக்கும் வர ஆரம்பித்தது. அதன் பிறகு, நான் தாராவி தமிழன் எனப் பெருமையாகக் கூறிக்கொள்ள ஆரம்பித்தார்கள்.
சில நேரங்களில் தமிழ்நாட்டில் வசிக்கிற தமிழர்களாலும் தாராவியில் வசித்த தமிழர்களுக்குச் சிக்கல் ஏற்படும். தமிழ்நாட்டில் கொலை உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டுவிட்டு தாராவியில் வந்து ஒளிந்துகொள்வார்கள். இதனால் அந்தப் பகுதிக்குள் அடிக்கடி போலீஸ் வரநேர்ந்தது. தாராவி பகுதியில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு பணிமாறுதல் பெற்றுவருவதற்காக அந்தக்காலத்திலேயே லட்சக்கணக்கில் செலவழிப்பார்கள். சாராயக்கடை, மடுக்கா சூதாட்டம் எனப் போலீஸாருக்கு மறைமுக வருமானம் தரக்கூடிய விஷயங்கள் அங்கு நிறைய இருந்தன. இதனால் தாராவி மக்கள் என்றாலே குற்றவாளிகளாக இருப்பார்கள் என முத்திரை விழுந்தது.
தொடரும்...