இந்திய அணி தென் ஆப்பிரிக்கா உடனான டெஸ்ட் தொடரை ஒரு வெற்றியுடன் சமன் செய்துள்ளது. இதையடுத்து ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் அனுபவ வீரர்களான ரோகித் மற்றும் கோலி மீண்டும் டி20 அணியில் இடம் பெற்றுள்ளனர்.
கடந்த ஒரு வருட காலமாக டி20 அணியில் இடம் பெறாமல் இருந்த ரோகித் மற்றும் கோலி அணியில் இடம் பெற்றிருப்பது அவர்கள் உலகக் கோப்பை டி20 அணியிலும் இடம் பெறுவார்கள் என்ற சமிக்ஞையை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது.
இனி டி20 போட்டிகளுக்கு ஹர்திக் பாண்டியா தான் கேப்டனாக செயல்படுவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடுகள் அவ்வாறாக இருந்தது. தொடர்ந்து ரோகித் மற்றும் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு பாண்டியாவும் அதன் பிறகு சூரியகுமார் யாதவும் டி20 அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டனர்.
உலகக்கோப்பை போட்டிகள் உடன் ரோஹித் மற்றும் கோலி ஆகியோர் ஒரு நாள் அணியிலிருந்து ஓரம் கட்டப்படுவார்கள் என்ற பேச்சும் எழுந்தது. இனி டி20 அணிக்கு இளம் வீரர்கள் கொண்ட அணியே தேர்ந்தெடுக்கப்படும் என்கிற வகையில் தான் கடந்த ஒரு வருட காலமாக இந்திய அணியின் தேர்வுக்குழு செயல்பட்டது. இந்நிலையில் தற்போது எதிர்பாராத விதமாக ரோஹித் மற்றும் கோலி ஆகியோர் இந்திய டி20 அணிக்கு திரும்பியுள்ளனர்.
இந்திய அணி வீரர்கள் விவரம் வருமாறு: ரோஹித் (கே), கில், ஜெய்ஸ்வால், விராட், திலக் வர்மா, ரிங்கு சிங், ஜித்தேஷ் சர்மா , சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், அக்சர் பட்டேல், ரவி பிஷ்னாய், குல்தீப், அர்ஸ்திப் சிங், ஆவேஸ் கான், முகேஷ் குமார்.
அதில் ரோஹித் சர்மாவுக்கு கேப்டன் பொறுப்பு அளிக்கப்பட்டதும் ரசிகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹர்திக் பாண்டியா தான் உலகக் கோப்பை டி20 அணிக்கு கேப்டனாக செயல்படுவார் என்று பரவலாக பேச்சுகள் அடிபட்ட நிலையில், தற்போது இந்திய டி20 அணிக்கு மீண்டும் ரோஹித் சர்மா கேப்டனாக அறிவிக்கப்பட்டிருப்பது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஹர்திக் காயத்தில் இருப்பதால் ரோகித் கேப்டனாக அறிவிக்கப்பட்டிருக்கிறார் எனவும், ரோகித் மற்றும் கோலி இல்லாத ஒரு அணியை இந்திய ரசிகர்கள் உலகக்கோப்பை போன்ற போட்டிகளில் எவ்வாறு ஏற்றுக் கொள்வார்கள் என்கிற பயமும் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் ஏற்பட்டிருக்கலாம் எனவும், அதனால் அவர்கள் இருவரும் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டிருக்கலாம் எனவும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரோகித் சர்மா ரசிகர்கள் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மும்பை இந்தியன்ஸ் அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை அன்ஃபாலோ செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- வெ.அருண்குமார்