ஒரு காலத்தில் உள்நாட்டு மைதானங்களிலும், பேட்டிங்க்கு சாதகமான மைதானங்களிலும் மட்டுமே சிறப்பாக விளையாடுபவர் என்று இங்கிலாந்து வேகபந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனால் விமர்சனத்துக்கு உள்ளானவர் விராட் கோலி. ஆனால் இந்த வாரத்தில் மட்டும் உலகின் மிகசிறந்த வீரர்களாக இருந்த பிரைன் லாரா, ஸ்டீவ் வாக், கிரேம் ஸ்மித் ஆகியோரிடமிருந்து மிகவும் அரிதான பாராட்டுகளை பெற்றுள்ளார் கோலி.
10 வருட கிரிக்கெட் வாழ்வில் சில இறக்கங்களையும், பல்வேறு சோதனைகளையும் கடந்தே இன்று உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேனாக உருவெடுத்துள்ளார் கோலி. 2008-ல் அறிமுகமான கோலி 2014 வரை சிறந்த பேட்ஸ்மேனாக மூன்று விதமான போட்டிகளிலும் திகழ்ந்து வந்தார். அந்த நிலையில் 2015-ஆம் ஆண்டு அவருக்கு சோதனை காலமாக அமைந்தது. 2015-ல் டெஸ்ட் போட்டிகளில் 43, ஒரு நாள் போட்டிகளில் 37, டி20-ல் 22 என சராசரி அமைந்து இருந்தது. இது ஓரளவு நல்ல சராசரி தான் என்ற போதிலும் விராட் கோலியின் தகுதிக்கு அது குறைவாக இருந்தது.
ஆப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளை ஆடுவதில் அதிகமாக தடுமாறினார் கோலி. தன்னுடைய பலவீனங்களை கண்டறிந்து அதை நிவர்த்தி செய்ய தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டார் கோலி. அந்த காலகட்டத்திற்கு பிறகு மிகசிறந்த வீரராக உருவெடுத்தார். இன்று யாரும் தனக்கு அருகில் கூட வரமுடியாத அளவுக்கு தன்னுடைய திறமைகளை வளர்த்து நம்பர் 1 இடத்தில் உள்ளார். இதற்கு அவருடைய விடா முயற்சியும், கடின உழைப்பும், அவர் கிரிக்கெட்டின் மீது கொண்ட அன்பும்தான் காரணம்.
தற்போது நடந்து முடிந்த மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மட்டும் பல்வேறு சாதனைகளை படைத்தார். ஒருநாள் போட்டிகளில் 205 இன்னிங்க்ஸ் மட்டுமே எடுத்துக்கொண்டு அதிவேகமாக 10,000 ரன்களை குவித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். உலகின் மிகசிறந்த பந்துவீச்சாளர்களை தன்னுடைய பேட்டிங் மூலம் நிலைகுலைய செய்தவர். அதிகமான இலக்குகளை எதிர்கொண்டு ஆடும் போட்டிகளில் இவர் சதம் அடித்து சுலபமாக வெற்றி பெற வைத்து உள்ளார். இதனால் “சேஸ் மாஸ்டர்” என்ற பெயரை பெற்றார்.
கேப்டனாக இருப்பவர்கள் பேட்டிங்கில் சரியாக கவனம் செலுத்த முடியாமல் தடுமாறுவார்கள். ஆனால் கோலி அதற்கு விதிவிலக்கு. அதிக பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்வதில் வல்லவர். ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 8,000 மற்றும் 9,000 ரன்கள் எடுத்த வீரரும் ஆவர். அதிவேகமாக 5000, 6000 மற்றும் 7000 ரன்கள் எடுத்த வீரர்களில் இரண்டாம் இடத்தில் தென் ஆப்பிரிக்காவின் ஹசீம் அம்லாவிற்கு அடுத்தபடியாக உள்ளார்.
ஒரு தொடரில் ஒரு உலக சாதனை படைப்பதே பெரிய காரியம். ஆனால் கோலி தான் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் பல்வேறு உலக சாதனைகளை படைத்து வருகிறார். டான் பிராட்மேனின் 99.99 சராசரி சாதனையை தவிர அனைத்து சாதனைகளையும் முறியடிப்பார் கோலி என்று ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் வாக் தெரிவித்துள்ளார். பெரிய காயமடையாமல் இருந்தால் அனைத்து சாதனைகளையும் படைப்பார் என்றும் அவர் கூறியுள்ளார்.
இன்று உலக கிரிக்கெட் அதிகளவு சூப்பர் ஸ்டார்கள் இல்லாமல் தவித்து வருவதாகவும், சூப்பர் ஸ்டாராக கோலி டெஸ்ட் கிரிக்கெட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லுவார் எனவும் கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தென் ஆப்ரிக்காவின் முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கோல்ப் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட லாரா, கோலியின் தனித்தன்மை வியக்கத்தக்கது என்றும், இந்த கால கட்டத்தில் கிரிக்கெட்டின் தலைவர் கோலிதான் எனவும் தெரிவித்தார்.