ஹைதராபாத் அணிக்கு எதிரான வெளியேற்றுதல் சுற்றில் ஏற்பட்ட தோல்வி குறித்து பெங்களூரு அணியின் கேப்டனான விராட் கோலி பேசியுள்ளார்.
அமீரகத்தில் நடைபெற்று வரும் 13-ஆவது ஐபிஎல் தொடரின் வெளியேற்றுதல் சுற்றில் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதின. இப்போட்டியில், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பெங்களூரு அணி, இறுதிச்சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது.
பெங்களூரு அணியின் கேப்டனான விராட் கோலி தோல்விக்கான காரணம் குறித்து பேசுகையில், "சில வீரர்கள் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தேவ்தத் படிக்கல் அவர்களுள் ஒருவர். 400 ரன்களுக்கு மேல் குவிப்பது என்பது எளிதானது அல்ல. அவரது ஆட்டம் மகிழ்ச்சியளிக்கிறது. முகமது சிராஜ் சிறப்பாக மீண்டு வந்துள்ளார். டிவில்லியர்ஸ், யுகேந்திர சாஹல் வழக்கம் போல சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மற்றவர்களும் பங்களித்தனர். ஆனால், அது போதுமானதாக இல்லை. ஹைதராபாத் அணி வீரர்கள் முதல் இன்னிங்ஸிலேயே நிறைய நெருக்கடி கொடுத்தனர். போதுமான ரன்கள் சேர்க்கவில்லை. கூடுதல் ஆக்ரோஷத்துடன் பேட்டிங் செய்திருக்க வேண்டும். எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு நாங்கள் எந்த நெருக்கடியும் கொடுக்கவில்லை. போட்டியில் எந்த பகுதியிலும் எங்கள் வீரர்கள் ஆதிக்கம் செலுத்தவில்லை" எனக் கூறினார்.