டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக ஆறாயிரம் ரன்கள் அடித்து விராட் கோலி சாதனை படைத்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி சவுத்தாம்டனில் உள்ள ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வுசெய்தது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து வீரர்கள், தொடக்கத்தில் இருந்தே இந்திய வீரர்களின் பந்துவீச்சில் தடுமாறினர்.
முதல் நாளில் இறுதியில் இங்கிலாந்து அணி 246 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பிறகு களமிறங்கிய இந்திய அணி 19 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில், இரண்டாவது நாளான இன்று இந்திய அணி பேட்டிங் செய்தது. மதிய உணவு இடைவேளையில் இந்திய அணி 101 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது. விராட் கோலியும், சதீஸ்வர் புஜாராவும் களத்தில் உள்ளனர்.
இரண்டாவது நாளான இன்று ஆட்டத்தின் 22-ஆவது ஓவரில் கேப்டன் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஆறாயிரம் ரன்களைக் கடந்தார். விராட் கோலிக்கு இது 70-ஆவது டெஸ்ட் போட்டி ஆகும். வெறும் 119 ரன்களில் இன்னிங்ஸ்களில் அவர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். இதன்மூலம், இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்களான சச்சின் தெண்டுல்கர் (120), விரேந்தர் சேவாக் (123) மற்றும் ராகுல் ட்ராவிட் (125) ஆகியோரை அவர் முந்தினார். இருப்பினும், மூத்த கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் 117 இன்னிங்ஸ்களுடன் இன்னமும் அசைக்க முடியாமல் முதல் இடத்திலேயே இருக்கிறார்.