இந்தோனிஷியாவில் நடைபெற்று ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், மல்யுத்தப் பிரிவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்னை வினேஷ் போகாத். ஆசிய மகளிர் மல்யுத்தப் போட்டிகளில் தங்கம் வெல்லும் முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் அவர் படைத்தார்.
இந்நிலையில், இந்தோனிஷியாவில் இருந்து நாடு திரும்பிய வினேஷ் போகாத்திற்கு, விமானநிலையத்தில் வைத்தே நிச்சயதார்த்தம் நடைபெற்றது. கடந்த சனிக்கிழமை இரவு டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அப்போது, அவரது குடும்பத்தினர், நண்பர்கள் என பலரும் அவரை வரவேற்பதற்காகக் காத்திருந்தனர். அப்போது, அங்கு காத்திருந்த அவரது நீண்டநாள் காதலர் சோம்வீர் ரதி, அவருக்கு விமானநிலையத்தில் வைத்தே நிச்சயதார்த்த மோதிரத்தை மாற்றினார். அன்றைய தினம் வினேஷ் போகாத்தின் 24-ஆவது பிறந்த தினம் என்பதால், அது நிகழ்வை மேலும் அழகாக்கியது.
சோம்வீர் ரதியும் பயிற்சி பெற்ற மல்யுத்த வீரர் ஆவார். 2016ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டு, முழங்கால் காயத்துடன் நாடு திரும்பிய வினேஷ் போகாத்திற்கு உறுதுணையாக இருந்தவரும் அவரே. தன் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வாக இந்த பிறந்ததினம் அமைந்திருக்கிறது. வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் வினேஷ் போகாத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.