2021ஆம் ஆண்டின் இருபது ஓவர் உலகக் கோப்பைக்குப் பிறகு, இந்தியாவின் இருபது ஓவர் அணிக்குக் கேப்டனாக நியமிக்கப்பட்ட ரோகித் சர்மா, சில நாட்களுக்கு முன்னர் இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாகவும், இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டார்.
இதன்தொடர்ச்சியாக விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாகவும், விராட் கோலி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகவுள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரையொட்டி இன்று (15.12.2021) ஊடகங்களிடம் பேசிய விராட் கோலி, கேப்டன்சி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் விளக்கமளித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டி குறித்த கேள்விக்குப் பதிலளித்த விராட் கோலி, "ஒருநாள் தொடரில் விளையாட தயாராக இருந்தேன், தயாராகவும் இருக்கிறேன். ஓய்வு வேண்டுமென நான் பிசிசிஐயிடம் கேட்கவில்லை. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளுக்குத் தேர்வு செய்யப்பட தயாராக இருக்கிறேன். நான் ஓய்வு கேட்கவில்லை” என தெரிவித்தார்.
ஒருநாள் அணியின் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டது தொடர்பாக பேசிய விராட் கோலி, "டெஸ்ட் அணி தேர்வுக்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன்னர் என்னை தொடர்புகொண்டனர். தலைமை தேர்வாளர் என்னுடன் டெஸ்ட் அணி குறித்து விவாதித்தார். அழைப்பு முடிவடைவதற்கு முன்பு, நான் இனி ஒருநாள் அணியின் கேப்டனாக இருக்கப்போவதில்லை என ஐந்து தேர்வாளர்களும் முடிவு செய்துள்ளதாக என்னிடம் கூறப்பட்டது. அதற்கு முன்பாக இதுகுறித்து எதுவும் கூறப்படவில்லை. டி20 கேப்டன் பதவியைவிட்டு விலகும் முன்னர் பிசிசிஐயிடம் அதுகுறித்து தெரிவித்தேன். எனது கருத்தை அவர்களிடம் சொன்னேன். அதை பிசிசிஐ ஏற்றுக்கொண்டது. இது ஒரு முற்போக்கான நடவடிக்கை என்று கூறி அதனை பிசிசிஐ வரவேற்றது.
ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் நான் தலைமை வகிக்க விரும்புகிறேன் என்று அப்போது தெரிவித்தேன். என் தரப்பிலிருந்து கூறப்பட்டவை தெளிவாக இருந்தது. ஆனால் (பிசிசிஐ) அதிகாரிகளும் தேர்வாளர்களும் மற்ற வடிவ போட்டிகளிலும் நான் தலைமை தாங்க வேண்டாம் என நினைத்தால் பரவாயில்லை என தெரிவித்திருந்தேன்" என கூறினார்.
மேலும் ரோகித் சர்மா குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த விராட் கோலி, "ரோகித் மிகவும் திறமையான கேப்டன். யுக்தி ரீதியாக மிகவும் திறமையானவர். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அவர்கள் (ரோகித் மற்றும் டிராவிட்) எனது 100 சதவீத ஆதரவினைப் பெறுவார்கள். (கேப்டன்சி மாற்றம் குறித்த) காரணங்களை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. எனக்கும் ரோகித் சர்மாவுக்கும் இடையே எந்தப் பிரச்சனையும் இல்லை. கடந்த இரண்டு வருடங்களாக இதை தெளிவுபடுத்தி, தற்போது சோர்வடைந்துவிட்டேன். எனது எந்த நடவடிக்கையும் அல்லது முடிவும் அணியைப் பாதிப்பதாக இருக்காது" என கூறியுள்ளார்.
மேலும் விராட் இந்தப் போட்டியின்போது, டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மாவை மிஸ் செய்வோம் என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.