மான்செஸ்டரில் புதன்கிழமை நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதிப் போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது. 240 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 49.3 ஓவர்களில் 221 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இறுதியில் தோனி களத்தில் இருந்தபோது எப்படியும் வென்றிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்த இந்திய ரசிகர்களுக்கு பேரிடியாக அமைந்தது அவரின் ரன் அவுட் . அரை சதம் அடித்த அவர், ரன் அவுட் ஆனபோது ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் நம்பிக்கையும் தகர்ந்தது. இந்நிலையில் தோனி இறக்கப்பட்ட இடம், மிடில் ஆர்டர் சொதப்பல் என பல காரணிகள் இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக சொல்லப்படுகிறது. இப்படி இருக்கும்போது தோனியின் ஓய்வு குறித்த செய்திகளும் பரவ தொடங்கியுள்ளது.
இந்நிலையில் தோனி குறித்து பேசியுள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஸ்டீவ் வாக், "ஒரு நாள் கிரிக்கெட்டின் ஜீனியஸ் தோனி. நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில், அவர் ரன் அவுட் ஆகவில்லை என்றால், கண்டிப்பாக அந்த போட்டியை வென்று கொடுத்திருப்பார். நீங்கள் அதை மறந்துவிட கூடாது. மிடில் ஆர்டரில் அவர் இருக்கும் வரை, மற்ற வீரர்களுக்கு வாய்ப்பளிக்கிறார், வழிநடத்துகிறார். நான் இன்னும் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளேன்.
இந்தியாவுக்காக பல போட்டிகளை அவர் வென்று கொடுத்திருக்கிறார். தோனி இல்லையென்றால், பல போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்றிருக்கவே முடியாது. அதே நேரம் அனைத்துப் போட்டிகளையும் வென்று கொண்டே இருக்க முடியாது. ஒரு நாள் போட்டிகளில் சேசிங்கில் மற்ற இந்திய அணி வீரர்களை விட, அவர் சிறப்பாகவே விளையாடி இருக்கிறார்" என கூறியுள்ளார்.