இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்த தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சில தினங்களுக்கு முன்னால் அறிவித்தார். இதனையடுத்து அவருக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் பிற நாடுகளைச் சேர்ந்த மூத்த வீரர்கள் பலர் தோனியின் ஓய்வு முடிவு குறித்து தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தோனியின் ஓய்வு முடிவு குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் கருத்து கூறியுள்ளார்.
அதில் அவர், "தோனி அடுத்த டீ20 உலக கோப்பையில் விளையாடியிருக்க வேண்டும். இந்திய மக்கள் அவருக்கு கொடுக்கிற ஆதரவும், அன்பும் அளவு கடந்தது. ஓய்வு அவரது தனிப்பட்ட முடிவு என்பது மறுப்பதற்கில்லை. ராஞ்சியிலிருந்து வந்து தன்னுடைய திறமையால் ஒட்டுமொத்த இந்தியாவையும் கவனிக்க வைத்தவர். இந்திய மக்கள் அவரை எளிதில் மறந்து விட மாட்டார்கள். பிரதமர் மோடி அவரை திரும்ப விளையாட அழைத்தால் அவரால் மறுக்க முடியாது. இப்படி ஒன்று நடக்கவும் வாய்ப்பிருக்கிறது. அவருக்காக ஒரு போட்டியினை நடத்தி, அதில் முறைப்படி பிரியா விடை கொடுத்து அனுப்ப ஒட்டு மொத்த இந்தியாவும் தயாராக இருக்கிறது" என்றார்.