கிரிக்கெட் உலகின் கடவுள் என கிரிக்கெட் ரசிகர்களால் அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் பயிற்சியாளர் அச்ரேகர் நேற்று இரவு காலமானார். சச்சினை சிறு வயது முதல் பயிற்றுவித்து உருவாக்கியவர் என கருதப்படும் 87 வயதான அச்ரேகரின் இழப்பு சச்சின் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தனது இரங்கலை தெரிவித்துள்ள சச்சின், 'சொர்க்கத்தில் கிரிக்கெட் அச்ரேக்கர் சாரினால் வளமை பெறும். பல மாணவர்களைப் போல் நானும் அவரின் வழிகாட்டுதலில்தான் கிரிக்கெட்டில் ஏபிசிடி கற்றேன். என் வாழ்க்கையில் அவரது பங்களிப்பை விவரிக்க வார்த்தைகள் போதாது. அவர் ஏற்படுத்திய அடித்தளத்தில்தான் நான் இன்று நிற்கிறேன். நான் அச்ரேக்கர் சாரை அவருடைய மாணவர்கள் சிலருடன் கடந்த மாதம்தான் சென்று பார்த்தேன். சேர்ந்து உரையாடி மகிழ்ந்தோம். நகைச்சுவையைப் பகிர்ந்து கொண்டோம் பழைய காலங்களை அசைபோட்டோம். நேராக விளையாடுவது நேர்மையாக வாழ்வது ஆகிய அறங்களை அச்ரேக்கர் சார் எங்களுக்குக் கற்றுக் கொடுத்தார். உங்கள் வாழ்க்கையின் ஓர் அங்கமாக எங்களை இணைத்துக் கொண்டதற்கும் உங்கள் பயிற்சி முறைகளில் எங்களை வளப்படுத்தியதற்கும் நன்றி. வெல் பிளேய்டு சார்...நீங்கள் எங்கு இருந்தாலும் இன்னும் பயிற்சி அளிப்பீர்கள்' என கூறியுள்ளார்.