ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பேட்மிட்டன் விளையாட்டின் மகளிர் பிரிவில் பிவி சிந்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
இந்தோனிஷியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவைச் சேர்ந்த வீரர்கள் பலர் பதக்கங்களை வென்று வருகின்றனர். இதுவரை 8 தங்கம், 13 வெள்ளி மற்றும் 20 வெண்கலப் பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 9-ஆவது இடத்தில் உள்ளது. இந்நிலையில், பேட்மிட்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிவி சிந்து மற்றும் சாய்னா நேவால் மீது அதிக கவனம் இருந்தது.
சாய்னா நேவால் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான தாய்வானின் தை ஜூ யிங்கிடம் அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தார். 17 - 21, 14 - 21 என்ற நேர் செட் கணக்கில் அவர் தோல்வியைத் தழுவினார். அதேசமயம், அரையிறுதிப் போட்டியில் ஜப்பானின் அகேனின் யகாமாச்சியுடன் மோதினார் பிவி சிந்து. 66 நிமிடங்களுக்கு நீடித்த கடுமையான இந்த ஆட்டத்தில் 21 - 17, 15 - 21 மற்றும் 21 - 10 ஆகிய செட்களில் சிந்து வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றார். இதன்மூலம், ஆசிய பேட்மிட்டன் மகளிர் ஒற்றையர் போட்டிகளில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும் முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். மேலும், இந்தியாவிற்கு தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கம் உறுதியாகியுள்ளது.
சாய்னா நேவாலுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது. காமன்வெல்த் போட்டியில் பிவி சிந்துவை சாய்னா நேவால் தோற்கடித்து தங்கம் வென்றார். ஒருவேளை சாய்னா வெற்றிபெற்றிருந்தால் அதேபோன்ற போட்டி இங்கும் நடந்திருக்கும்.