இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி ஜூன் 7 முதல் 11 வரை லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை இந்திய அணியும் அறிவித்தது. அதில் ரஹானே சேர்க்கப்பட்டுள்ளார். சமீபத்தில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படுவதால் மீண்டும் அணியில் இணைந்துள்ளார். இந்திய அணியில், “ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், சித்தேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, கே.எல்.ராகுல், பரத், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாகூர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெயதேவ் உனத்கட்” ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில் சாம்பியன்ஷிப் பட்டம் வெல்லும் அணிக்கு 13 கோடியே 20 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்பட உள்ளது. இதனை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. இறுதிப் போட்டியில் தோற்று இரண்டாம் இடத்தை பிடிக்கும் அணிக்கு 6 கோடியே 60 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் இடத்தை பிடித்த தென் ஆப்பிரிக்க அணிக்கு 3 கோடியே 70 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையாகவும், 4 ஆம் இடத்தை பிடித்த இங்கிலாந்து அணிக்கு 2 கோடியே 90 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையாகவும் 5 ஆம் இடத்தை பிடித்த இலங்கை அணிக்கு 1 கோடியே 65 லட்சம் ரூபாயும் பரிசாக வழங்கப்பட உள்ளது. 6 முதல் 9 இடங்களை பிடித்த நியூசிலாந்து, பாகிஸ்தான், மேற்கு இந்திய தீவுகள் அணி, வங்காள தேசம் ஆகிய அணிகளுக்கு தலா 83 லட்சம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.