தேசிய அளவிலான மினி பைக் ரேஸ் போட்டி
கோவையை அடுத்த மயிலேரிபாளையம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சார்பாக ரைட் 2017 என்ற மோட்டார் வாகன பந்தயம் நடைபெற்றது.
தேசிய அளவில் நடைபெற்ற இதில் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள், தாங்களே வடிவமைத்த மினி பைக்குகளுடன் இந்தப் போட்டியில் கலந்துகொண்டனர்.
50 சிசி, 75 சிசி மற்றும் 'இ பைக்’எனப்படும் மின் சக்தியால் இயங்கும் பைக் ஆகிய மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. மாணவர்கள் உருவாக்கிய மினி பைக்குகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக வடிவமைப்பு செய்யப்பட்டிருந்தன.அதனால், துறை நிபுணர்களின் தரம் மற்றும் அளவு சோதனைகளுக்குப் பிறகே டெஸ்ட் டிராக்கில் ஓட்டுவதற்கு அனுமதிக்கப்பட்டன.
350 மீட்டர் தூரம்கொண்ட டெஸ்ட் டிராக்கில் சேறு, கற்கள், மணல், வளைவுகள், மேடு பள்ளங்கள் என பல்வேறு தடைகள் செயற்கையாக ஏற்படுத்தப்பட்டு இருந்தன. அதில், மினி பைக்குகள் பாய்ந்து பறந்து சென்றது பார்வையாளர்களைப் பரவசமடையவைத்தது.
ஆக்ஸிலரேட்டர் கேபிளுக்குப் பதிலாக எலெக்ட்ரிக் சர்க்யூட் பயன்படுத்திய பைக், பிரேக் சிஸ்டத்தில் மின் சக்தியைச் சேமித்து உபயோகித்த பைக் போன்றவை எரிபொருள் சிக்கனத்துக்கு முன்னோடியாக இருந்தன. எளிதாகக் கிடைக்கும் சாதாரணப் பொருட்களைக் கொண்டு மாணவர்கள் உருவாக்கிய புதிய ஐடியாக்கள் சிறப்புக் கவனத்தை ஈர்த்தன. ஒவ்வொரு பிரிவிலும் குறைந்த நேரத்தில் பந்தய தூரத்தைக் கடந்த பைக், சிறந்த வடிவமைப்பு, சிறந்த கட்டுமானம், புதுமையான படைப்பு மற்றும் சிறந்த ரேஸ் வீரர் ஆகிய பிரிவுகளில் பரிசுகள் வழங்கப்பட்டன.
எதிர்கால ஆட்டோமொபைல் துறையில் கால் பதிக்க இருப்பவர்களின் வடிவமைத்தல் திறனையும் புதுமையாகச் சிந்திக்கும் திறனையும் ஊக்குவிக்கும் விதத்தில் போட்டி இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
அருள்குமார்