கொரியன் சூப்பர் சீரிஸ் பேட்மிட்டன் போட்டி - பி.வி.சிந்து வெற்றி!
நடப்பு உலக சாம்பியனான ஜப்பானின் நசோமி ஒகுஹாரா உடன் நடைபெற்ற கொரியன் சூப்பர் சீரிஸ் பேட்மிட்டன் போட்டியில் மோதிய இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றிப் பெற்றுள்ளார்.
இதற்கு முன்னர் பி.வி.சிந்து மற்றும் நசோமி மோதிய உலக சாம்பியன் போட்டியில் நசோமி வெற்றிபெற்று உலக சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார். இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்றாற்போல், ஆட்டத்தின் முதல் செட்டிலேயே பி.வி.சிந்து 22 - 20 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். அடுத்த செட்டில் அபாரமாக ஆடிய நசோமி 21 - 11 என்ற கணக்கில் வெற்றிபெற்று சிந்துவை அதிர்ச்சிக்குள்ளாகினார்.
மொத்தம் 1 மணிநேரம் 23 நிமிடங்கள் நடந்த விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில், இருவரும் தலா ஒரு செட் வெற்றிபெற்றிருந்தனர். இந்நிலையில் ஆட்டத்தின் கடைசி செட்டில் சிந்து 20 - 18 என்ற கணக்கில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார்.
ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற சிந்துவை, உலக சாம்பியன் போட்டியில் வீழ்த்தி நசோமி சாம்பியன் பட்டம் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியின் மூலம் நசோமியுடனான நேருக்கு நேர் வெற்றிக்கணக்கை 4 - 4 என சமன்செய்தார் பி.வி.சிந்து.
- ச.ப.மதிவாணன்