கரோனா தடுப்புக்கு நிதி திரட்டும் வகையில் இந்தியா, பாகிஸ்தான் இடையில் மூன்று ஒருநாள் போட்டிகளை நடத்தலாம் என அக்தர் தெரிவித்திருந்த யோசனைக்கு கபில்தேவ் பதிலளித்துள்ளார்.
உலக அளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16 லட்சம் என்ற அளவிலும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3.6 லட்சம் என்ற அளவிலும் உள்ளது. இந்த வைரஸ் தாக்குதலினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95,000 ஐ கடந்துள்ளது. உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள இந்த வைரஸை கட்டுப்படுத்த அரசாங்கங்களுக்கு உதவும் வகையில், இந்தியா பாகிஸ்தான் இடையில் மூன்று ஒருநாள் போட்டிகளை நடத்தலாம் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அக்தர் தெரிவித்திருந்தார். இதிலிருந்து கிடைக்கும் நிதியை இருநாடுகளும் பிரித்துக்கொள்ளலாம் எனவும் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ், "அவர் கருத்தைக் கூற அவருக்கு உரிமை உண்டு. நாம் நிதி திரட்ட வேண்டிய அவசியமில்லை, நம்மிடம் போதிய நிதி உள்ளது. நாம் அனைவரும் அதிகாரிகளுடன் ஒத்துழைத்தாலே போதும். இந்தச் சமயத்தில் கிரிக்கெட் போட்டிகளை நடத்தி வீரர்களுக்கு ஆபத்தை விளைவிப்பதா? இந்தப் போட்டிகளை நடத்துவதற்கான எந்தவித அவசியமும் இல்லை. ரிஸ்க் எடுக்கும் அளவுக்கு இது மதிப்புமிக்கதல்ல. மேலும் 3 போட்டிகளில் எவ்வளவு நிதி சேர்ந்து விடப்போகிறது? நாட்டை விட கிரிக்கெட் முக்கியமா..?" எனத் தெரிவித்துள்ளார்.