புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டக்காரர்களுக்கும் அரசிற்கும் இடையே நடைபெற்ற பலகட்டப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து, இரு மாதத்திற்கும் மேலாகப் போராட்டம் நீடித்து வருகிறது. இதற்கிடையே, குடியரசு தினத்தன்று நடைபெற்ற ட்ராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது.
இந்த நிலையில், விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், உலகம் முழுவதும் இருந்து பல்வேறு குரல்கள் எழுந்து வருகின்றன. இது தொடர்பாக, பாடகி ரிஹானா, நடிகை மியா கலிஃபா உள்ளிட்ட சிலர் தெரிவித்த கருத்துகள் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தன. அதே நேரத்தில், பிறநாட்டுப் பிரபலங்கள் இந்த விவகாரத்தில் கருத்து கூறுவதற்கு எதிராக இந்தியப் பிரபலங்கள் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். சச்சின், விராட் கோலி உள்ளிட்ட சிலர் இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்கிற ரீதியில் கூறிய கருத்துகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் வெளிநாட்டவர், இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்ற கருத்துகளை மறைமுகமாகச் சாடும் வகையில், இர்ஃபான் பதான் ட்விட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில் அவர், "அமெரிக்காவில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் ஒரு போலீஸ்காரரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டபோது, நம்நாடு தனது வருத்தத்தைச் சரியாக வெளிப்படுத்தியது. #justsaying எனக் கூறியுள்ளார்.