14- வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம், இன்று (18/02/2021) சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில், கடும் போட்டிக்கு இடையே ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வீரர் மேக்ஸ்வெல்லை ரூபாய் 14.25 கோடிக்கு ஏலம் எடுத்தது பெங்களூரு அணி. மேக்ஸ்வெல்லை ஏலம் எடுக்க சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் இடையே கடும் போட்டி நிலவியது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வீரர் ஸ்மித்தை ரூபாய் 2.20 கோடிக்கு ஏலம் எடுத்தது டெல்லி அணி. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வீரர் ஆரோன் ஃபின்ச்சை எந்த அணியும் ஏலம் எடுக்க முன்வரவில்லை. இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வீரர் மொயின் அலியை ரூபாய் 7 கோடிக்கு ஏலம் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்திய வீரர் ஷிவம் துபேவை ரூபாய் 4.40 கோடிக்கு ஏலம் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. வங்கதேச அணியின் கிரிக்கெட் வீரர் சாஹிப்- அல் ஹசனை ரூபாய் 3.20 கோடிக்கு ஏலம் எடுத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
உலகின் நம்பர் ஒன் டி20 கிரிக்கெட் வீரர் டேவிட் மலானை ரூபாய் 1.50 கோடிக்கு ஏலம் எடுத்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி. தென்னாப்பிரிக்க அணியின் கிரிக்கெட் வீரர் கிறிஸ் மோரிஸை ரூபாய் 16.25 கோடிக்கு ஏலம் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இதனால், ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக தொகைக்கு ஏலம் போன வெளிநாட்டு வீரர் என்ற பெருமையைப் பெற்றார் மோரிஸ். கடந்த ஐ.பி.எல். ஏலத்தில் ரூபாய் 10 கோடிக்கு கிறிஸ் மோரிஸை வாங்கியிருந்தது பெங்களூர் அணி என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வீரர் ஜெய் ரிச்சர்ட்சனை ரூபாய் 14 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் அணி. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வீரர் நாதன் கூல்டர் நைலை மும்பை இந்தியன்ஸ் அணி ரூபாய் 5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் வீரர் ஆடம் மில்னேவை மும்பை இந்தியன்ஸ் அணி ரூபாய் 3.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் பியூஸ் சாவ்லாவை ரூபாய் 2.4 கோடிக்கு ஏலம் எடுத்தது மும்பை அணி. இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் உமேஷ் யாதவை ரூபாய் 1 கோடிக்கு ஏலம் எடுத்தது டெல்லி அணி. சென்னை அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட ஹர்பஜன் சிங்கை, இம்முறை நடந்த ஏலத்தில் எந்த அணியும் தேர்வு செய்யவில்லை.
வீரர்களின் ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.