ஐசிசி மகளிர் உலகக் கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது.
8 ஆவது பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடக்கிறது. பிப்ரவரி 26 வரை நடக்கும் இந்தப் போட்டியில் 10 அணிகள் இரு பிரிவுகளாக பங்கேற்றுள்ளன. பிரிவு ‘ஏ’ வில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம் என ஐந்து அணிகளும் பிரிவு ‘பி’ யில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து என ஐந்து அணிகளும் இடம்பெற்றுள்ளன. லீக் சுற்றின் முடிவில் இரு பிரிவுகளிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறும்.
இந்நிலையில் நேற்று பார்ல் நகரில் இரண்டு லீக் போட்டிகள் நடந்தது. இதில் இந்திய நேரப்படி மாலை 6.30 மணியளவில் நடந்த இந்த போட்டியில் இங்கிலாந்தும் வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதின. இதில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரவு 10.30 மணியளவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்து அணிகளும் மோதியது. இதில் ஆஸ்திரேலிய அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இன்று இந்தியா தனது முதல் லீக் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது. பயிற்சி ஆட்டத்தின் போது இடது கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரரும் துணைக் கேப்டனுமான ஸ்மிருதி மந்தனா காயத்திலிருந்து இன்னும் மீளாத காரணத்தினால் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடமாட்டார் எனத் தெரிகிறது. இந்திய அணியை பொறுத்தவரை பேட்டிங்கில் ஷாபாலி வர்மா மற்றும் ரிச்சா கோஷ் ஆகியோர் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதேபோல் பந்துவீச்சிலும் ரேணுகா சிங், ஷிகா பாண்டே பூஜா வஸ்த்ரகர் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டால் இந்திய அணிக்கு கூடுதல் பலம். பாகிஸ்தானை பொறுத்தவரை நிடா தார் பாகிஸ்தானுக்கு பலம் சேர்ப்பார் என்பது தெரிகிறது.
இரு அணி வீரர்கள் விபரம் இந்திய மகளிர் அணி: ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, யாஸ்திகா பாட்டியா, ஹர்மன்ப்ரீத் கவுர், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், பூஜா வஸ்த்ரகர், தீப்தி சர்மா, ராதா யாதவ், ராஜேஸ்வரி கயக்வாட், ரேணுகா தாக்கூர் சிங், ஷிகா பாண்டே, தேவிகா வைத்யா ஹர்லீன் தியோல், அஞ்சலி சர்வானி
பாகிஸ்தான் மகளிர் அணி: முனீபா அலி, சித்ரா அமீன், பிஸ்மா மரூப், ஒமைமா சொஹைல், நிதா தார், அலியா ரியாஸ், சித்ரா நவாஸ், பாத்திமா சனா, நஷ்ரா சந்து, ஜவேரியா கான், அய்மான் அன்வர், சாடியா இக்பால், ஆயிஷா நசீம், துபா ஹசன், சதாப் ஷமாஸ்