கடந்த ஜூன் மாதம், முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் இன்ஸ்டாகிராமில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மாவுடன் நேரலையில் உரையாடும்போது, வட இந்தியாவில் குறிப்பிட்ட ஒரு பிரிவு மக்களைக் குறிப்பிடும் ஒரு வார்த்தையைக் கூறி சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் பற்றிப் பேசினார். அவரின் இந்தப் பேச்சுக்கு சமூகவலைதளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
இதனையடுத்து யுவராஜ் சிங், சர்ச்சைக்குரிய தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார். இதுகுறித்து அவர், "நான் ஒருபோதும் இந்த நாட்டு மக்களிடையே சாதி, நிறம், பாலின பாகுபாடுடன் பழகியதில்லை. நான் என்னுடைய வாழ்நாளை மக்கள் நலனுக்காகச் செலவிடவே விரும்புகிறேன். ஒவ்வொரு மனிதனுக்கும் சுயமரியாதை இருக்கிறது. அதனை நான் மதிக்கிறேன். நான் என்னுடைய நண்பரிடம் பேசியது தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக எனக்குத் தெரிகிறது. ஒரு பொறுப்புள்ள இந்தியக் குடிமகனாக என்னுடைய பேச்சு யாரையாவது காயப்படுத்தியிருந்தால் அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். நான் இந்த நாட்டு மக்கள் மீது வைத்திருக்கும் அன்பும் மிகவும் புனிதமானது" எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்தும் விதமாக யுவராஜ் சிங் பேசியதாக, ஹரியானா மாநிலம் ஹிசார் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் தற்போது யுவராஜ் சிங் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதியப்பட்டுள்ளது. புகாரளிக்கப்பட்டு 8 மாதங்களுக்குப் பிறகு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.